பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் 
சினிமா

நேற்று படப்பிடிப்பு; இன்று அரசியல் ஆலோசனைக் கூட்டம்!

Staff Writer

‘லியோ’ படத்தின் காட்சிகளை நேற்று நடித்து முடித்த நடிகர் விஜய், இன்று மக்கள் இயக்கத்தினருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பனையூரில் உள்ள அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் நடிகர் விஜய், விரைவில் அரசியல் பிரவேசம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னெடுப்பாகவே, அம்பேத்கர் பிறந்தநாளுக்கு இயக்க நிர்வாகிகளை மாலை அணிவித்து மரியாதை செலுத்த சொல்லியது. இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தியது, 'தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்' திட்டம் மூலம் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கியது முக்கியமானதாக கருதப்பட்டது.

அண்மையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.அப்போது, ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசியிருந்தது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் 234 தொகுதிகளைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தொகுதி பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள் என சுமார் 300 பேர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

நேற்று மாலையுடன் 'லியோ' படத்தின் காட்சிகளை நடித்த முடித்த விஜய், இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். படப்பிடிப்பு முடிந்து ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல், அடுத்த நாளே விஜய் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நிகழ்வுக்கான முழு ஏற்பாடுகளையும் புஸ்ஸி ஆனந்த் செய்துள்ளார். அவர் இயக்க நிர்வாகிகளை கடுமையாக திட்டிய வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.