அயோத்தி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித், பார்வதி, கீர்த்தி பாண்டியன் உட்பட சிலர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ரஜினி காந்த், மாதுரி தீக்ஸிட், தனுஷ், ரன்பீர் கபூர், ராம் சரண், பவன் கல்யாண் ஆலியா பட், விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப், கங்கனா ரனாவத், சச்சின் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் எதிர்ப்புகளைத் தெரிவித்தும் வருகின்றனர்.
அந்தவகையில், இயக்குநர் பா.ரஞ்சித் ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது, “ரொம்பவும் முக்கியமான நாள் இன்று. தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஐந்து – பத்து ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயத்தை உணர்த்துகிறது.
இந்த நாள் முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நாளில் இருந்து புதிய வரலாறு ஆரம்பிக்கிறது. அந்த வரலாற்றில் நாம் எங்கு இருக்கப் போகிறோம் என்ற யோசனை நமக்கு இருக்க வேண்டும்.” என பேசியிருந்தார்.
அதேபோல், கீர்த்தி பாண்டியன் ப்ளூ ஸ்டார் விழாவில் பேசும்போது, ”இன்று மிகமிக முக்கியமான நாள். இன்று நாடு இருக்கின்ற சூழலைப் பார்க்கும் போது பாடலாசிரியர் அறிவு அவர்கள் பாடிய வரிகளின் படி, “காலு மேல காலு போடு ராவணகுலமே” என்று பாடத் தோன்றுகிறது” என்று பேசினார்.
அதேபோல், மலையாள திரைத்துறையச் சேர்ந்த பார்வதி திருவோத்து, ரீமா கல்லிங்ல், ஜியோ பேபி, ஆஷிக் அபு, திவ்யா பிரபா, கனி குஸ்ருதி, கமல் கே.எம்., சூராஜ் சந்தோஷ் ஆகியோரும் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை தங்களின் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதில் '1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தில் இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஒரு நாடாக இந்தியா எப்போதும் இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.