சினிமா

பம்பர்: திரைவிமர்சனம்!

Prakash

பணம் இருப்பவரிடம் குணம் இருக்காது; குணம் இருப்பவரிடம் பணம் இருக்காது. இந்த பழமொழிக்கு நியாயம் சேர்க்கும் திரைப்படம் தான் பம்பர்.

வேலை வெட்டிக்குச் செல்லாமல் உருட்டல், மிரட்டல், குடி, கூத்து எனக் கூட்டாக சுற்றுகின்றனர் புலிபாண்டியும் (வெற்றி) அவரது மூன்று நண்பர்களும். சிறு சிறு குற்றங்களுக்காக, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பார்க்கிறது காவல் துறை. இதிலிருந்து தப்பிக்க அவர்கள் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு செல்கின்றனர். அப்போது, ஒரு இஸ்லாமிய முதியவரிடம் லாட்டரி சீட்டு வாங்குகிறார் புலிப்பாண்டி. அதை அவர் அங்கேயே தொலைத்துவிட, அந்த லாட்டரி சீட்டுக்கு பத்துகோடி ரூபாய் விழுகிறது. தொலைந்த சீட்டும், பம்பரில் கிடைத்த பணமும் இறுதியில் யாருக்குக் கிடைத்தது என்பதுதான் படத்தின் திரைக்கதை.

ஒரே ஒரு நேர்மையான கதாபாத்திரத்தை சுற்றி பல கிளைக் கதாபாத்திரங்களை உருவாக்கி ஒரு நேர்த்தியான திரைக்கதை எழுதியுள்ளார் அறிமுக இயக்குநர் செல்வக்குமார். படத்தின் முதல் பாதியை கதையைவிட, தூத்துக்குடி வட்டார வழக்கே தாங்கிப் பிடிக்கிறது. இரண்டாம் பாதியின் திரைக்கதை கனகச்சிதம். எதிர்பாராத திருப்பங்களும், இறுதிக் காட்சியும் புது ரகம்.

புலிப்பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெற்றி தேர்ந்த நடிப்பை வழங்கத் தவறியிருக்கிறார். எல்லா உணர்ச்சிகளுக்கு ஒரே மாதிரியான முகபாவனை. இடைவேளைக்கு பிறகே அதிக காட்சிகளில் வரும் ஹரிஸ் பேரடி, இஸ்லாமிய முதியவராகவே வாழ்ந்திருக்கிறார். அவரிடம் இருக்கும் மிடுக்கான உடல்மொழியோ, மிரட்டும் பார்வையோ இந்தப் படத்தில் எதிர்பார்க்க முடியாது. கனிவும், நேர்மையும் கொண்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். நாயகி ஷிவானி கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதுதவிர ஜி.பி. முத்து, தங்கதுரை செய்யும் காமெடிகள் ஓரளவு ஓகே. காவலராக வரும் கவிதா பாரதி, மதன் குமார் ஆகியோரும் குறை இல்லாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் ‘சரணமே, சரணமே’, ‘லாட்டரி கண்ணே’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றனர். கதை தோய்வதாகத் தெரியும் இடங்களில் பின்னணி இசையும் தாங்கிப் பிடிக்கிறது. தூத்துக்குடியை வினோத் ரத்தினசாமி அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு பணி தான் கொஞ்சம் பலவீனம். நீளமான சண்டைக் காட்சிகளையும், நண்பர்களுக்கு இடையிலான உரையாடல் காட்சிகளையும் வெட்டியிருக்கலாம்.

பம்பர் - ‘நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது’ என்ற எண்ணத்தை மாற்ற நினைக்கும் திரைப்படம்.