குடிமகன் 
சினிமா

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஜாதியைப் பற்றி பேசவில்லை; உரிமையைப் பேசுகிறார்கள்! – சேரன்

Staff Writer

இயக்குநர் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், இசக்கி கார் வண்ணன் போன்றவர்கள் ஜாதியைப் பற்றி பேசவில்லை; தங்கள் உரிமையைப் பற்றி பேசுகிறார்கள் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடித்துள்ள தமிழ்க்குடிமகன் படத்தின் இசை - ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் தங்கர் பச்சன்,"நான் சிறு வயதிலேயே என்னுடைய கிராமத்திலிருந்து வந்துவிட்டேன். இப்போது என் கிராமம் உட்பட பல கிராமங்களில் நான் சிறுவயதில் பார்த்த ஜாதி இல்லை. ஆனால் ஜாதியை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருப்பது அரசியல்வாதிகள்தான். நாம் சரியான தலைவர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசியல் மாற்றம் ஏற்பட்டால்தான் ஜாதி ஒழியும். மசாலா படங்களில் என்ன இருக்கிறது. இது போன்ற நல்ல படங்களை ஆதரியுங்கள்."என்றார்.

இயக்குநர் மாரிசெல்வராஜ், "என் இயக்குநர் பா. ரஞ்சித் நமக்கு ஒரு வலி இருக்கும். இதைச் சொல்லவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உன் படபடப்பை உன் படைப்பில் காட்டிவிடக்கூடாது. உன் வலியை பத்திரமாக வைத்துக்கொள். தேவை வரும் போது படைப்புகளில் காட்ட வேண்டும் என்பார். சேரன் அவர்களிடம் உதவி இயக்குநாராக சேர ஆசைப்பட்டேன். இந்தப் படத்தில் சொல்லப்படாத சிறிய மக்களின் வலி இருக்கிறது. இசக்கி கார் வண்ணன் இந்த வலியை சரியாகக் கடத்தியிருப்பார் என்று நினைக்கிறேன். இன்று அனைவருக்கும் அரசியல் இருக்கிறது. என்னுடைய அரசியல்தான் என் படங்களில் இருக்கிறது.” என்றார்.

சேரன் பேசும்போது, "இந்தப் படத்தின் இயக்குநர் இசக்கி கார் வண்ணன் இதற்கு முன்பு இயக்கிய படங்கள் எதையும் பார்த்தது கிடையாது. ஆனால் தமிழ்க்குடிமகன் படத்தின் கதையின் மீது நம்பிக்கை வைத்து நடிக்க ஒப்புக்கொண்டேன். பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், இசக்கி கார்வண்ணன் போன்றவர்கள் ஜாதியைப்பற்றி பேசவில்லை. தங்கள் உரிமையைப் பற்றி பேசுகிறார்கள். கொஞ்சம் சத்தமாகச் சொல்கிறார்கள். இதை ஊடகங்கள், பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து கைகளும் சேர்ந்து இருந்தால்தான் சமுதாயம் முன்னேறும். தான் நினைத்த சில காட்சிகளை தான் நினைத்தது போல தன் கிராமத்தில் எடுக்க முடியாத அளவிற்கு ஜாதி அழுத்தம் உள்ளது.” என்றார்.