பெர்லின் 
ஓடிடி

திரை விமர்சனம்: பெர்லின்- உளவாளிகளின் கதை

முத்துமாறன்

பெர்லின்… பெயரைக் கேட்டதும் சர்வதேச உளவாளிகளைப் பற்றிய படம் என்று நினைக்கத் தோன்றும். படத்தில் நாயகனாக வரும் காதுகேளாத, வாய் பேசாதவர்களுக்காக வகுப்புகள் எடுக்கும் ஆசிரியரும்( அபர் சக்தி குரானா) பெர்லின் என்றால் ஐரோப்பாவில் உள்ள நகரம் என்றே நினைக்கிறார். இங்கே பெர்லின் புதுடெல்லியில் வெளிநாட்டு தூதரகங்கள் இருக்கும் இடத்தில் இருக்கும் உணவகத்தின் பெயர். இங்கே காபி அருந்த வருகிற பல வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரிகிறவர்கள் தங்களுக்குள் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். இவர்களுக்கு உதவியாக இந்த கடையில் வேலை செய்யும் எல்லோரும் வாய்பேச முடியாத  ஊமைகளாக இருக்கும்படி நிர்வாகம் பார்த்துக்கொள்கிறது. இப்படி ஒரு இடம் என்பதால் இயற்கையாகவே ரா, ஐபி போன்ற உளவு அமைப்புகளின் கண்காணிப்பில் இந்த இடம் உள்ளது.

இக்கடையில் சர்வராக வேலை பார்க்கும்  பிறப்பிலேயே வாய்பேசமுடியாத, காது கேளமுடியாத ஒரு பாத்திரமாக இஷ்வாக் சிங் நடித்துள்ளார். இவரை ஐபி காரர்கள் பிடித்து வைத்திருக்கிறார்கள். விசாரிப்பதற்காக சைகை மொழி தெரிந்த ஒரு ஆசிரியர் வேண்டும். அதற்காக புஷ்கின் வர்மா என்கிற காதுகேளாதோர் பள்ளியில் வகுப்பெடுப்பவரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு கொடுத்து கொண்டு வந்து விசாரிக்க வைக்கிறார்கள். இந்த பாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பவர் அபர் சக்தி குரானா. இஷ்வாக்கிடம் அபர்சக்தி  சைகை மொழியில் கேள்விகள் கேட்டு, பதில்களை மொழிபெயர்க்க, அதை ஐபி அதிகாரிகள் பக்கத்தில் இருந்து கண்காணிப்பதாக படம் முழுக்கப் போகிறது. ஆனால் மெல்ல மெல்ல உண்மைகள் புலப்பட ஆரம்பிக்க, நம்மையும் உள்ளே இழுத்துக்கொள்கிறது.

பனிப்போர் காலகட்டம் விலகுகிற அதாவது 93 ஆம் ஆண்டின் டெல்லியின் குளிர்காலத்தில் இந்த படத்தின் காட்சிகள் அரங்கேறுகின்றன.  இந்திய உளவு அமைப்புகளான ஐபி, ரா இரண்டுக்கும் இடையிலான உரசல்தான் இந்த படத்தின் கருப்பொருள். ரஷ்ய அதிபர் போரிஸ் யெல்ஸ்டின் புதுடெல்லிக்கு வருவதை ஒட்டி இந்திய உளவு அமைப்புகளில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அச்சமயம் நடந்த நிகழ்வை ஒட்டிச் செல்வதுதான் கதை.

அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள் எப்படி தங்களைக் காத்துக் கொள்வதற்காக சாமானியர்களைப் பலி கொடுப்பார்கள் என்கிற விஷயமும் உண்மைக்காகப் போராடும் சாமானியனின் வீண் முயற்சியுமாக திரைக்கதை சுவாரசியமாகச் செல்கிறது.

தன் உடற்குறைக்காக ஒதுக்கப்பட்டே வருகிற இஷ்வாக் சிங் பாத்திரம், மிகப்பெரிய செயலொன்றைச் செய்வதற்கான அதீத விருப்பம் கொண்டிருக்கிறது. சாகசமாக ஒன்றைச் செய்து, அதன் மூலமாக பழியைச் சுமந்துகொள்வதையும் மகிழ்ச்சியோடு செய்கிறது.

ராகுல் போஸ், ஐபி அதிகாரியாக இறுக்கமாக நடித்திருகிறார். குளிர்கால டெல்லியின் அரசு அலுவலகங்களை அதற்கே உரிய வண்ணக் கலவையுடன், புதிய காமிரா கோணங்களுடன் எடுத்திருக்கிறார்கள். எந்த வித பளபளப்பான பூச்சும் இன்றி,  அருமையாக எழுதப்பட்ட திரைக்கதைக்கு நியாயம் செய்து, எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம். ஜீ5 ஓடிடியில் உள்ளது.

உளவாளிகளைப் பற்றிய படங்களின் ரசிகர்கள் தவறவிடாமல் பார்க்கலாம்!