ரஜினிகாந்துடன் லோகேஷ் கனகராஜ் 
சினிமா

கூலி... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரே ஒரு போட்டோ!

Staff Writer

ரஜினிகாந்த் நடிக்க இருந்த கூலி திரைப்படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு லோகேஷ் கனகராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தின் டைட்டில் டீஸர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது.

இந்நிலையில், கூலி படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி தீயாகப் பரவியது.

இந்த நிலையில், கூலி படத்திற்கான லுக் டெஸ்ட்டின்போது எடுக்கப்பட்ட மிரர் செல்ஃபியை சமூக ஊடகத்தில் வெளியிட்டு, ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

முன்னதாக, லியோ படத்தின் போதும் இதேபோன்ற வதந்தியை லோகேஷ் கனகராஜ் எதிர்கொண்டார். அப்போதும், லியோ படத்தில் பணியாற்றிய புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.