நித்தின் தேசாய் 
சினிமா

ஒரு கலை இயக்குநரின் தற்கொலை!

ஷாஜி சென்

‘பரிந்தா’ (1989) எனும் பெயர்பெற்ற ஹிந்தித் திரைப்படத்தின் வழியாகக் கலை இயக்குநரானவர் நித்தின் தேசாய். அதன்பின் மூன்றாண்டுக்காலம் அவருக்கு படமெதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் பரிந்தாவின் இயக்குநரே தனது 1942 எ லவ் ஸ்டோரி எனும் படத்தை அவருக்கு வழங்கினார். அப்படத்தின் சில துணுக்குக் காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்கும்போது அரங்கத் துணைப் பொருளாகப் பயன்படுத்த பழையகால சோஃபா ஒன்றைத் தேடி எங்கள் கடைக்கு வந்தார் நித்தின் தேசாய். ஹிந்தி சினிமா இந்தியா முழுவதுமுள்ள லட்சக்கணக்கானோரின் கனவு உலகம். அங்கே முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இதோ என் பக்கத்தில் நிற்கிறார். ஹிந்தி சினிமா உலகம் இப்போது எனக்கு கையெட்டும் தூரத்தில்! சோஃபாக்களைப் பற்றி அவருக்கு விளக்கிக் கொண்டிருந்த நான் பக்கத்தில் யாருமில்லாத நேரம் பார்த்து அவரது உதவியாளனாக என்னையும் சேர்க்க முடியுமா என்று கேட்டுவிட்டேன்.

“ஒரு சினிமா உதவியாளனின் வாழ்க்கையைப்போல் சிரமமானது எதுவுமில்லை. குறிப்பாகக் கலை இயக்க உதவியாளர்களின் வாழ்க்கை. உங்களுக்கு இங்கே நல்ல வேலையிருக்கிறதே! எதற்காக சினிமாவில் வந்து கஷ்டப்படணும்? தேவையில்லையே...” கணநேரத்தில் அவர் என்னை ஊக்கமிழக்கச் செய்தார். ஓவியக்கலை, கைவினைக் கலை, சித்திரவேலைகள் போன்றவற்றில் எந்தவொரு திறமையுமே இல்லாத நான் ஒரு கலை இயக்குநர் ஆகும் வழிதேடினேனா? இல்லை. கலை இயக்க உதவியாளனின் வேடத்தில் ஹிந்தி சினிமாவிற்குள்ளே தலையை நுழைக்கலாம் என்று பேராசைப்பட்டதுதான். அந்த ஆசையை முளையிலேயே களையெடுத்த நித்தின் தேசாய் 1942 எ லவ் ஸ்டோரி வழியாக மிகப் பெரிய வெற்றியைக் கண்டார். பல மாபெரும் ஹிந்திப் படங்களில் பணியாற்றி இந்தியாவின் மிக முக்கியமான கலை இயக்குநர்களில் ஒருவராக மாறினார். நான் அப்போதும் மரச் சாமான்களுடன் முட்டி மோதிக்கொண்டிருந்தேன்.

(2019ல் வெளியான எனது 'சினிமா வெறியின் 40 ஆண்டுகள்' நூலின் இரு பத்திகள்) 

நித்தின் தேசாய் இன்று அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டார். நான் இப்போதும் வாழ்க்கையுடன் முட்டி மோதிக்கொண்டிருக்கிறேன்.