படப்பிடிப்புதளம் (மாதிரிப்படம்) 
சினிமா

சினிமா படப்பிடிப்புகள் ரத்து… என்ன காரணம்?

Staff Writer

படப்பிடிப்புகளில் சண்டைப் பயிற்சியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தொடா்பாக சிறப்புக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதால், திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்வதென ‘பெஃப்சி’ அமைப்பு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு
“ஜூலை 17- ஆம் தேதி ‘சா்தாா் 2’ படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் நமது தென்னிந்திய திரைப்பட- டிவி சண்டை இயக்குநர்கள் சண்டைக் கலைஞா்கள் சங்கத்தின் உறுப்பினர் ஏழுமலை மரணம் அடைந்தார்.

படப்பிடிப்பில் பணிபுரியும் போது உறுப்பினா்களுக்கு தகுந்த பாதுகாப்பு கருவிகள், படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும், ஆம்புலன்ஸுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்று பல முறை தொடர்ச்சியாக தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பு நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

சில நிறுவனங்களைத் தவிர பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பாதுகாப்பு விதிகளை சிறிதளவும் பின்பற்றுவது இல்லை. மேலும், படப்பிடிப்பில் திரைப்பட கலைஞர்கள் தொழிலாளா்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரிவதால் பல உறுப்பினா்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களிலேயே மரணமடையும் அபாயகரமான சூழல் ஏற்படுகிறது.

எனவே, உறுப்பினா்களுக்கு பாதுகாப்புக் கருவிகள் வேண்டியும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டும் வியாழக்கிழமை (ஜூலை 25) வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில், திரைப்பட கலைஞர்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடா்பான சிறப்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

மேலும், அன்றைய தினம் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக சென்னை நகரில் உள்ளூா் படப்பிடிப்புகள் சின்னத்திரை, பெரியத்திரை மற்றும் அனைத்து படப்பிடிப்புகள் நடைபெறாது.’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.