மிதுன் சக்ரவர்த்தி 
சினிமா

மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!

Staff Writer

பழம்பெரும் நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்த மிதுன் சக்ரவர்த்தி 1976இல் வெளியான மிருகயா என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அறிமுக திரைப்படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகர் மிதுன் சக்கரவர்த்திதான். 1982இல் வெளியான ‘டிஸ்கோ டான்ஸர்’ என்னும் இந்தித் திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

பெங்காலி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடியா, பஞ்சாபி மற்றும் போஜ்புரி உட்பட பல்வேறு மொழிகளில் பணியாற்றியுள்ளார். 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் மிதுன் சக்ரவர்த்திக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மிதுன் சக்ரவர்த்தியின் சினிமா பயணம் எதிர்கால தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கிறது. மிதுன் சக்ரவர்த்தி இந்திய சினிமாவுக்கு செய்த முக்கிய பங்களிப்பிற்காக தாதாசாகேப் பல்கே விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருது அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும்.” என்று பதிவிட்டுள்ளார்.