நடிகர் சிவகார்த்திகேயன் 
சினிமா

மாவீரன்: திரைவிமர்சனம்!

Prakash

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாவீரன் திரைப்படம், தரமற்ற நிலையில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள், இடிந்து விழுந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

வட சென்னையில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அரசு சார்பில் புதிய குடியிருப்பு கட்டித்தரப்படுகிறது. சொந்த இடத்தை விட்டு, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு குடியேறும் மக்களுக்கு அதிர்ச்சியும் புறக்கணிப்புமே காத்திருக்கிறது. அந்த குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதும் அதை கட்டியது அமைச்சருக்கு (மிஷ்கின்) சொந்தமான நிறுவனம் என்பதும் அம்பலமாகிறது. அந்தக் குடியிருப்பில் வசிக்கும் சத்யா (சிவகார்த்திகேயன்) ஒரு விபத்தில் சிக்கி, உயிர் பிழைக்கிறார். அதிலிருந்து அவருக்கு ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அந்தப் பிரச்சினையுடன் அவர் எப்படி அமைச்சரை எதிர்கொண்டார், மக்களை அவர் எப்படி காப்பாற்றினார் என்பதே படத்தின் மீதிக் கதை.

மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற மடோன் அஸ்வின் இயக்கும் படம் என்பதால் மாவீரன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதை ஓரளவு படம் பூர்த்தி செய்திருக்கிறது. முதல் பாதியோ 'செம', இரண்டாம் பாதியோ 'சுமை' என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதை உள்ளது.

குடிசை பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனை, அரசியல்வாதிகளின் பாசாங்கு, ஊழல், ஊடகங்களின் அதிகார சார்பு போன்றவற்றை சாகச நாயகன் கதைக்குள் கொண்டு வந்த இயக்குநர், முடிவை எழுத தடுமாறியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தோற்றத்தில் கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தாலும், அவரது கதாபாத்திரம் வழக்கமானதுதான். சிவகார்த்திகேயன் அம்மாவாக நடித்திருக்கும் சரிதா கவனிக்க வைக்கிறார்.மகனை நினைத்து ஏங்கும் போதும், கோபப்படும் போதும், கொண்டையை அள்ளி முடிந்தது கொள்ளும் போதும் யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். அமைச்சராக வரும் மிஷ்கின் பார்வையில் எப்போதும் ஆக்ரோஷம். யோகிபாபு செய்யும் காமெடிகள் படத்தின் உயிர்நாடி.

விது அய்யன்னாவின் ஒளிப்பதிவும் பரத் சங்கரின் இசையும் படத்தை தாங்கி பிடிக்கிறது. 'சீனா சீனா' பாடலும், மான்டேஜாக வரும் 'வண்ணாரப்பேட்டையில' பாடலும் ரசிக்க வைக்கின்றன. படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் கண்ணை மூடிக்கொண்டு பல காட்சிகளை வெட்டி வீசி இருக்கலாம்.

விஜய் சேதுபதியின் குரலில் வரும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. கதை சொல்லும் பாணியிலான தூய தமிழ் வசனங்களை கச்சிதமாக பேசியுள்ளார் விஜய் சேதுபதி.

மாவீரன் கடைசியில் கொஞ்சம் சோதிக்கிறான். ஆரம்பத்தில் கலக்கியதற்காகப் பொறுத்துக்கொள்ளலாம்!