சினிமா

மாமன்னன்: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

அதிகாரத்திற்கு வந்தாலும் சமமாக உட்கார முடியாது என்ற ஆதிக்கத்தை உடைத்து, தனது தந்தையை அரியணைக்கு ஏற்றும் மகனின் கதையே மாமன்னன் திரைப்படம்.

சேலம் மாவட்டம் காசிபுரம் தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் மாமன்னன் (வடிவேலு). அவர் இருக்கும் கட்சியின் மாவட்டச் செயலாளராக உள்ள ரத்னவேலு (பகத் பாசில்), பண பலமும், சாதி ஆதிக்கமும் கொண்டவராக உள்ளார். மாமன்னனின் மகனான அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்) தந்தையின் செயல்பாடுகளில் தலையிடாமல் தற்காப்பு பயிற்சி மையம் ஒன்று நடத்திக் கொண்டுள்ளார். இந்த சூழலில், இவர்கள் மூவரும் ஒரு பிரச்னையை தீர்ப்பதற்கான பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது, அப்பாவை நாற்காலியில் உட்காரச் சொல்லுகிறார் அதிவீரன். இது ரத்னவேலுவுக்கும் அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்த, அது கைகலப்பில் முடிகிறது. இத்தனை ஆண்டுகாலம் கைக்கட்டி வாய் பொத்தி பதில் சொன்னவர்கள், சுயமரியாதையுடன் நடத்த சொல்வதை நினைத்து மாமன்னனைப் பழிவாங்கத் தொடங்குகிறார் ரத்னவேல். இதில் என்னவெல்லாம் நடந்தது? இறுதியில், மாமன்னன் என்ன ஆனார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

சமூகநீதி பேசும் தமிழக அரசியலில் சாதி எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை முடிந்தளவு யதார்த்தமாகப் பேசியுள்ளார் இயக்குநர் மாரிசெல்வராஜ். நிகழ்கால அரசியலும், கலை நேர்த்தியும் கொண்ட சிறந்த திரைக்கதை மாமன்னன். தன் முந்தைய படங்களைப் போல நிறையக் குறியீடுகளை மாரிசெல்வராஜ் இதில் பயன்படுத்தியுள்ளார்.

மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு, நடிப்பில் மாமன்னன் என்பதை நிரூபித்துள்ளார். தன்னை பார்க்க வருபவர்களிடம் பரிவு காட்டுவது, அதிகாரத்தின் முன்பு வாயடைத்து நிற்பது, மகனை நினைத்து ஏங்குவது என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார். இவருக்கு இணையாக பகத் பாசில் நடிப்பையும் சொல்லலாம். ஆதிக்கமும், குரூரமும், நயவஞ்சகமும் கொண்ட கதாபாத்திரத்தில் அசால்டாக நடித்துள்ளார்.

சமூக நீதி பேசும் கட்சிகளிலும் சாதி ஆதிக்கம் கொண்டவர்கள் இருப்பார்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, இந்தப் படத்தில் நடிக்க வந்த உதயநிதியைப் பாராட்டலாம். நடிப்பிலும் ஓரளவு தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். கம்யூனிஸ்ட்டாக வரும் கீர்த்தி சுரேஷூக்கு வழக்கமான நாயகி பாத்திரம். மற்றபடி படத்தில் லால், சுனில் ரெட்டி, அழகம் பெருமாள், கீதா கைலாசம், விஜய குமார் போன்ற நிறையப் பேர் இருந்தாலும், அவர்களுக்கு போதுமான காட்சிகளோ, வசனங்களோ இல்லை.

வறண்ட மலைகளையும், கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தையும் கண் முன் கொண்டு நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். முதல் பாதியின் விறுவிறுப்பிற்காக படத்தொகுப்பாளரைப் பாராட்டலாம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மிரள வைக்கிறது. இது படத்திற்கு கூடுதல் பலம். 'ராசா கண்ணு', 'நெஞ்சமே நெஞ்சமே' பாடல்கள் மட்டுமின்றி, மற்ற பாடல்களும் ரசிக்க வைக்கிறது. யுகபாரதியின் பாடல் வரிகள் கதையின் போக்கிற்கு ஏற்றார் போல் உள்ளது.

‘நான் யானையில் போவதற்கு வழிசொல்றேன்…நீ கழுதையில் போவதற்கு வழி சொல்ற’ என்று பகத் பசில் பேசும் வசனமும், ‘ஒருவனுடைய கோபம் ஆயிரத்தெட்டு பேருடைய கோபமா மாறுது பார்’ என்று உதயநிதி பேசும் வசனமும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி எழுதப்பட்டுள்ளது.

படத்தின் குறைகளாக, மாமன்னனுக்கும் – பகத் பாசிலுக்கு இடையேயான மோதல், ஏதோ சாதாரண இரு மனிதர்களுக்கான மோதலாகக் காட்டுவது, பிரச்னை தொடங்கிய இடமான கல்வி மையம் பற்றிய காட்சிகள் இல்லாமல் போனது, கைக்கட்டி நிற்பவராக இருக்கும் வடிவேலு, கடைசியில் ” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என சமத்துவம் பேசுவது, இளைஞர்கள் எல்லாம் சமத்துவத்தை விரும்புவதாகக் காட்டுவதெல்லாம் திரைக்கதையின் பலவீனம்.

மாமன்னன் – மாரிசெல்வராஜ் கட்டி எழுப்பிய வீரன்!