இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ’ஜி ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை இன்று மாலை தொடங்கியுள்ளார்.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை இயக்கி தமிழின் முன்னணி இயக்குநர் அளவுக்கு உயர்ந்தார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
"ஐந்து படங்களின் இயக்கத்திற்கு பின் கதைசொல்லல், பொழுதுபோக்கின் நிலப்பரப்பை மறுவரையறை செய்ய எனது தயாரிப்பு முயற்சி - ஜி ஸ்குவாட் (G Squad) தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முதல் சில தயாரிப்புகள் எனது நெருங்கிய நண்பர்கள், உதவியாளர்களின் ஆக்கப்பூர்வமான யோசனைகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். நீங்கள் அனைவரும் இதுவரை எனக்கு அளித்த அதே ஆதரவை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். எங்கள் தயாரிப்பின் முதல் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் படத்தில், ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யா, கழுத்தில் தேளை பச்சைக்குத்தியிருப்பார். ரோலக்ஸ் கேரக்டரின் அடையாளமாக பார்க்கப்பட்ட தேள், ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவத்தின் லோகோவிலும் இடம்பெற்றுள்ளது.இதை சூர்யா ரசிகர்கள் எக்ஸ் செயலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.