“நான் செய்யும் தொழில் மேல் சத்தியமாக தமிழர்களை நான் இழிவாக பேசவில்லை” என்று நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை தன்யா பாலகிருஷணன் நடித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் தன்யாவின் முகநூல் பக்கத்தில் தமிழர்களை இழிவுப்படுத்தி பேசியதாக தற்போது அவர்மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கைவொன்றை தன்யா வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன். அதையே இப்பொழுதும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. அந்தக் கருத்து நான் கூறியதே அல்ல.
நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழில் தான். அதற்கு நான் என்றும் கடன்பட்டுள்ளேன். இந்த சர்ச்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது.
அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு....." என்று தெரிவித்துள்ளார்.