இயக்குநர் மிஷ்கின் கொட்டுக்காளி திரைப்படத்தைப் பாராட்டிப் பேசியிருக்கும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர்கள் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்த கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கிய இப்படம் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதன், டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “இந்த படத்துக்கு கொட்டுக்காளி என்ற பெயர் ஏன் வைத்தார்கள் என்று தெரியவில்லை. வினோத் ராஜ் என்னை சந்தித்தபோது கூழாங்கல் வெளியாகவில்லை. அடுத்ததாக, என்ன படம் எடுக்கப்போகிறாய் என கேட்டேன். கொட்டுக்காளியை எடுத்துக்கொண்டிருப்பதாகக் கூறி, இசையமைப்பாளர் என யாரும் இப்படத்திற்கு இல்லை என்றார். அப்போது, வினோத்தை மிகவும் திமிர்பிடித்தவன் என நினைத்தேன். இந்த மாதிரி படம் எடுத்துடாதீங்கடா என என் உதவி இயக்குநர்களுக்கு சொன்னேன். இந்த படத்தைப் பார்த்ததிலிருந்து பேய் பிடித்ததுபோல் இருக்கிறேன். தன் படத்தை வைத்தே அவன் என்னை செருப்பால் அடித்துவிட்டான். இசை வேண்டாம் என வினோத் முடிவு அசாத்தியமானது.
என் மகள் பிறந்தபோது நான் எந்தளவிற்கு மகிழ்ச்சி அடைந்தேனோ அதே அளவிற்கு இந்தப் படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் படம் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதற்காக நான் நிர்வாணமாக நிற்கவும், நடனமாடவும் தயார். இப்படத்தில், சூரியைத் தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது.
இந்தப் படத்திற்குப் பிறகு சூரியை மிகச்சிறந்த நடிகராக பார்க்கலாம். கொட்டுக்காளி பெரிய அனுபவம். இதைத் தயாரித்த, நடிகர் சிவகார்த்திகேயன் கொண்டாடப்பட வேண்டியவர். தெய்வத்தன்மையும் தாய்மையும் கொண்ட இப்படத்தை நாம் கைவிடக்கூடாது. இளையராஜாவின் காலுக்கு முத்தமிட்டிருக்கிறேன். அதற்கு அடுத்தபடியாக வினோத் ராஜின் காலில் முத்தமிடுவேன்” என மிஷ்கின் புகழ்ந்து பேசினார்.