ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினருடன் ரஜினிகாந்த் 
சினிமா

“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஒரு குறிஞ்சி மலர்:" படக்குழுவைப் பாராட்டி ரஜினி கடிதம்!

Staff Writer

“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஒரு குறிஞ்சி மலர்” என்று நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவுக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாகக் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளியானது.

இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படம் குறித்து கடிதம் வாயிலாகத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா? என பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார்.

திருவோட கேமிரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குநரின் உழைப்பு பாராட்டிற்குரியது. திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி தான் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

இந்தப் படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை. வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டிப் போட்டு கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அற்புதம்.

இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களைக் கைதட்ட வைக்கிறார். பிரமிக்க வைக்கிறார். சிந்திக்க வைக்கிறார். அழவும் வைக்கிறார். கார்த்திக் சுப்புராஜை எண்ணி பெருமை கொள்கிறேன். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தை ஜிகர்தண்டா படக்குழுவினர் நேரில் சென்று சந்தித்த அவரிடம் வாழ்த்துகளைப் பெற்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். எஸ்.ஜே.சூர்யா இதுகுறித்து தன் எக்ஸ் பக்கத்தில், “தலைவருடனான குறிஞ்சி கணங்கள். உங்கள் கடிதம் மூலம் நாங்கள் நெகிழ்ச்சியானோம். மிக்க நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார்.