ஹாலிவுட் நடிகரும், பின்னணி குரல் கலைஞருமான ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் (செப்டம்பர் 9) காலமானார். அவருக்கு வயது 93.
1931ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள், சினிமா என பலவற்றிலும் நடித்து படிப்படியாக வளர்ந்து வந்தார். “Roots: The Next Generations”, “Field of Dreams”, “The Hunt for Red October”, “Coming To America”, “Patriot Games” உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டும்மல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் முத்திரை பதித்தார். குறிப்பாக ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தில் டார்த் வேடர் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியது இவரது பின்னணி குரல் தான். பிரபலமான வில்லன் கதாபாத்திரத்துக்கு தன்னுடைய குரலால் புது அடையாளம் சேர்த்தார் ஜேம்ஸ் ஏர்ல். அதேபோல ‘தி லயன் கிங்’ படத்தில் முஃபாசாவுக்கு இவர் கொடுத்த பின்னணி குரல் காலத்தால் அழியாதது.
எமி விருது, கிராமி விருது, கோல்டன் குளோப், ஆஸ்கார் விருதுகளை வென்றவர் ஜேம்ஸ். கடந்த 2011ஆம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கு ஆஸ்கார் அகாடமி கவுரவித்தது.
இந்நிலையில் ஜேம்ஸ் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் நியூயார்க்கில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 93. அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.