மன்சூர் அலிகான் 
சினிமா

திரிஷா வருத்தம் அடைந்திருந்தால் நானும் வருத்தம் அடைகிறேன்! – மன்சூர் அலிகான் விளக்கம்

Staff Writer

“நான் பேசியதற்கு திரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” என்று சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.

மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, மன்சூர் அலிகானுக்கு நடிகர் சங்கம் உட்பட திரையுலகில் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அவர் மீது வழக்குப்பதியுமாறு தமிழக டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது. அதையடுத்து, 2 சட்டப்பிரிவுகளின்படி மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்பிணை கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல்செய்தார். நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மன்சூர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்ஜாமின் மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார்.

நீதிபதி அவரிடம், ”எதற்காக மனுவை தாக்கல் செய்தீர்கள்? எதற்காக தற்போது திரும்பப் பெறுகிறீர்கள்?” எனக் கேள்விகள் எழுப்பினார். எதிர்மனுதாரராக தவறுதலாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தினரைச் சேர்த்துள்ளதால் மனுவைத் திரும்பப் பெறுவதாக மன்சூர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்; நீதிமன்றம் விளையாட்டு மைதானம் இல்லை எனக்கூறி மனுவைத் திரும்பப்பெற அனுமதியளித்தார்.

நாளை, மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, இன்று மதியம் 2.30 மணியளவில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜரானார். காவல் ஆய்வாளர் தனலட்சுமி அவரிடம் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, மன்சூர் அலிகான் கைப்பட எழுத்தில் விளக்கம் அளித்தார்.

அதில், ”அந்த வீடியோவில் பேசியது நான்தான். நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன். திரிஷா அதைத் தவறாகப் புரிந்து கொண்டார். எந்த உள் அர்த்தமும் வைத்து, நான் அப்படிப் பேசவில்லை. நான் பேசியதற்கு திரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன். எனது குரல் பிரச்னைக்காக நாளை வருவதாக இருந்தேன். ஆனால், சமூக ஊடகங்களில் நான் தலைமறைவாக இருப்பதாக தவறாக வதந்தி பரவியதால் தற்போது ஆஜரானேன். இந்த வழக்கு விசாரணைக்காக எப்போது அழைத்தாலும் வரத் தயாராக உள்ளேன்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை முடிந்து காவல்நிலையத்தை விட்டு வெளியில் வந்த மன்சூர் அலிகான், இனி செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டேன் என கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.