மிஷ்கின் - மிஷ்கின் 
சினிமா

இளையராஜா என்று பெயர் வைத்தாலே வழக்கு பாயும்! – மிஷ்கின்

Staff Writer

கதாபாத்திரத்திற்கு இளையராஜா என்று பெயர் வைத்தால் அவர் வழக்கு போட்டுவிடுவார் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ், வெங்கட் பிரபு, கௌரி ஜி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அடியே'. பிரபா பிரேம்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு குறிப்பிட்டுள்ளது. இதையொட்டி நடந்த ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கினும் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், “இப்படத்தில் நானும் நடித்திருக்கிறேன். ஒரு இயக்குநருக்கு யாரையும் விமர்சித்து, யாரையும் நகைச்சுவை கதாபாத்திரமாக காண்பிக்க முழு உரிமை இருக்கிறது. தமிழ் சினிமாவில் நிறையப் பேர் கதை எழுதும்போது கதாபாத்திரத்திற்கு ஒரு பெயர் வைத்துவிடுவார்கள். அதற்காக இயக்குநர் மேல் வழக்குப் போடுவார்கள். எந்த இயக்குநரும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கதையை எழுதுவதில்லை. ஒரு பெயரை சினிமாவில் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம்.

நான் இப்போது எழுதி முடித்துள்ள கதையில் ஒரு கதாபாத்திரத்திற்கு பெயர் வைக்க 15 நிமிடம் யோசித்தேன். பிறகு யுவராஜ் என்று வைத்தேன். முதலில் இளையராஜா என்று யோசித்தேன். ஆனால், அது வழக்காகிவிடும். எங்க அப்பா தான் அவர். இருந்தாலும் அவர் வழக்கு போட்டுவிடுவார். அதனால் என்னை எப்படி வேண்டுமானாலும் காட்டுங்கள், மோசமானவனாகவும் காட்டுங்கள். உண்மையில் நான் மோசமானவன் தான். அதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது.” என்றார்.

மேலும், ”ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்தில் நல்லா ஐஸ் சாப்டாரு, நல்லா ஊக்கு குத்தினார். அதெப்படி எல்லாம் கதாநாயகனுக்குத்தான் கிடைக்கிறது. நமக்குக் கிடைக்க மாட்டுது. எனக்கும் விரைவில் கிடைக்கும் என்று நினைக்கிறேன், உடம்பை குறைக்கிறேன்.

நான் பொறுக்கி என்று சொன்னதைத் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அதை மட்டும் கொஞ்சம் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். விஷால் எப்போது பார்த்தாலும் துரோகத்தை மறக்கமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். என்ன துரோகம் என்று தெரியவில்லை. அவன் என் இதயத்துக்கு நெருக்கமானவன். கோபத்தில் சொன்ன அந்த வார்த்தையைத் தவிர்த்துவிடலாம். விஷால் கூட நிச்சயம் படம் பண்ண மாட்டேன். ” என கறாராக பேசி முடித்தார்.