நடிகர் அஜித்துக்கு அறுவைச் சிகிச்சை முடிந்த நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
‘துணிவு’ வெற்றிக்குப் பின் நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் ’விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்தது.
அடுத்தகட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற உள்ளதால், நடிகர் அஜித் குமார் நேற்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அஜித் உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அஜித் குமாருக்கு மூளையில் கட்டி என்பதெல்லாம் உண்மையில்லை. வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்ட அரை மணி நேரத்தில் அதற்கான சிகிச்சை முடிந்து, நேற்றிரவு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையிலிருந்து இன்று இரவு அல்லது நாளை வீடு திரும்புவார்” என அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை தரப்பிலிருந்தும் அஜித் குமார் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.