சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு படம் இயக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்து என்பதை இயக்குநர் பா. ரஞ்சித் கூறியுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கி விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.
விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது:
“சினிமா நம்ம வாழ்க்கைல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. நான் சினிமாவை நல்லா புரிஞ்சுக்கிட்டுத்தான் சினிமாவுக்கு வந்திருக்கேன். நான் கல்லூரிக்கு போனதுக்குப் பிறகுதான் பல உலக சினிமாக்கள் பாத்தேன். அதுதான் என்னை மாத்துச்சு. அதைல 'life is beautiful', 'cinema paradiso' படங்களுக்கு முக்கியமான பங்கு இருக்கு. அப்போதான் நம்மளுடைய வாழ்க்கையை பேசுவோம்னு முடிவு பண்ணேன். சினிமா என்னை தேர்ந்தெடுக்கல. நான்தான் சினிமாவை தேர்ந்தெடுத்தென். வரலாற்றை நம்ம படிக்கணும். வரலாற்றை என்னுடைய படங்களின் மூலமாகத் தேடுறேன். சினிமா இங்க மெயின்ஸ்ட்ரீம் மீடியமா இருக்கு. நான் நினைக்கிறதை எடுத்திடலாம்னு சினிமாவுக்கு வந்தேன்.
அப்போ என்னுடைய இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை 28 படத்தை எடுத்தாரு. அது எங்களுடைய வாழ்க்கைதான். அது மக்கள்கிட்ட அமோகமான வரவேற்பைப் பெற்றது. அவரிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயத்தின் அடிப்படையில்தான் அட்டகத்தி எழுதினேன். அந்த படத்துக்குப் பிறகு எனக்கு ஒரு நம்பிக்கை கிடைச்சது. அதன் பிறகுதான் நான் 'மெட்ராஸ்' பண்ணேன். அப்போ கார்த்தி சார்கிட்ட இதைதான் நான் பண்ணப்போறேன்னு வெளிப்படையாகச் சொன்னேன். மெட்ராஸ் பிடிச்சதுனாலதான் ரஜினி சார் கூப்பிட்டு 'கபாலி' கொடுத்தாரு. அதன் பிறகு காலா.
அட்டக்கத்தி படத்துல ஞானவேல் சார்கூட பயணம் ஆரம்பிச்சது. 'சார்பட்டா' படம் முடிஞ்சதும் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைச்சது. அந்த நேரத்துல நான் ஞானவேல் சார்கூடதான் படம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன். இந்தப் படத்தோட பட்ஜெட்ல பிரச்னைகள் வந்தது. ஆனா, என்னை எந்த சமரசமும் பண்ண வைக்காம படம் எடுக்கவிட்டுருக்காரு. உங்களுக்கு ஒரு தம்பியாக நான் ஒரு வெற்றியைக் கொடுப்பேன். அவரை தயாரிப்பாளராக பார்க்கல. எனக்கு உறுதுணையாக இருக்கிற ஒருத்தராதான் பார்க்குறேன்.
இந்த படத்துல கலையை நேசிக்கிற ஒருத்தரோட சேர்ந்து வேலைப் பார்த்துருக்கேன். 'ஐ' படத்துல சிறிய நேர காட்சிக்கு ரொம்பவே கஷ்டப்பட்டுருப்பாரு. என்னை ஆத்மார்த்தமாக விக்ரம் சார் புரிஞ்சுக்கிட்டாரு. அவர் ஓகே சொன்னதும்தான் எனக்கு சவால் வந்துச்சு. இந்தப் படத்தோட கதை என்னை பல இடங்களுக்கு கொண்டு போச்சு. எனக்கு மேஜிகல் ரியாலிஸம் ரொம்பப் பிடிக்கும். அதை வச்சு ஒரு புதிய ஜானர்ல இந்தப் படத்தை பண்ணியிருக்கோம்." என்று ரஞ்சித் பேசினார்.