பாலிவுட் நடிகர் கோவிந்தா 
சினிமா

பிரபல நடிகரின் காலில் பாய்ந்த குண்டு! - எங்கு... எப்படி நடந்தது?

Staff Writer

பிரபல பாலிவுட் நடிகரும் சிவசேனா கட்சியின் நிர்வாகியுமான கோவிந்தாவின் (வயது 60) காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் வசித்து வரும் நடிகர் கோவிந்தா இன்று அதிகாலை கொல்கத்தாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாகியை எடுத்து சாரிபார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது துப்பாகி எதிர்பாராத விதமாக வெடித்ததில் அவரது காலில் குண்டு பாய்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கோவிந்தாவின் காலில் இருந்து குண்டு அகற்றப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு உடல் நலத்துடன் அவர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கோவிந்தாவின் மேலாளர் கூறியதாவது:

“கொல்கத்தாவில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 6 மணி விமானத்தில் செல்ல இருந்தோம். நான் முன்னதாக விமான நிலையத்துக்கு சென்றுவிட்டேன். கோவிந்தா வீட்டில் இருந்து புறப்படும்போது இந்த விபத்து நடந்துள்ளது.

அலமாரியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்ததில் வெடித்துள்ளது. நல்வாய்ப்பாக அவரது காலில் குண்டு பாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நகைச்சுவை நடிகரான கோவிந்தா 165-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார்.

2004-ஆம் ஆண்டு மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கோவிந்தா வெற்றி பெற்று 5 ஆண்டுகள் எம்பியாக பதவி வகித்தார். தற்போது சிவசேனை கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram