கோட் திரைப்படம் 
சினிமா

கோட் நிஜமாகவே கோட் தானா?: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

‘நீ என் குடும்பத்தை அழிச்சா… நா உன் குடும்பத்தை அழிப்பேன்டா’ என்ற ஒரு வரி கதையை நவீன தொழில்நுட்பத்தின் வசதியோடு இன்றைய தலைமுறைக்கு ஏற்றப்படி சொன்னால் அதுதான் கோட் திரைப்படம்.

இந்தியாவின் உளவு அமைப்பான ’ரா’வின் கீழ் செயல்படுகிறது பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் படை. இதன் தலைவராக உள்ள காந்தி (விஜய்) தன் மனைவி, மகனுடன் தாய்லாந்துக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராதவிதமாக நடக்கும் சம்பவம் அவரின் வாழ்க்கையையே சிதைத்துப் போடுகிறது. இதனால், உளவு அமைப்பிலிருந்து விலகுகிறார். இதற்கிடையே, மீண்டும் பணிக்குத் திரும்பும் காந்திக்கு, பேரதிர்ச்சி காத்திருக்கிறது. இதன் பின்னர் நடக்கும் மோதல்களும், பாச போராட்டமும் தான் கோட் படத்தின் கதை.

டமால் டுமீல் என தொடங்கும் படத்தின் முதல் பகுதியில் விஜய் – சினேகா இடையேயான காதல் - மோதல் கொஞ்சம் ஆறுதல்! இடைவேளைக்கு முன்பு வரும் தளபதி – இளைய தளபதி இடையேயான சந்திப்பு மனதை கலங்க வைக்கிறது. குடும்ப ஆடியன்ஸை இழுக்க இந்த ஒரு காட்சி மட்டுமே போதும் என நினைத்துவிட்டார் போல இயக்குநர் வெங்கட் பிரபு. இரண்டாம் பாதி முழுக்க சண்டையாய் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இடையிடையே பாட்டும் போடுகிறார்கள்.

முழு படத்தையும் கமர்சியல் என்ற பெயரில் பப்ஜி கேம் விளையாடுவது போன்று விளையாடி வைத்திருக்கிறார் இயக்குநர். பொதுவாக விஜய் படம் என்றால் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சென்டிமெண்ட், நான்கு நல்ல பாடல்கள் இருக்கும். இதில் எல்லாம் மிஸ்ஸிங். கதை, திரைக்கதை என எல்லாவற்றிலும் ‘கோட்’டை விட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

படத்தில் ஒரே ஆறுதல் விஜய்யின் நடிப்பு. டபுள் ஆக்‌ஷனில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். மைக் மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ் என பெரிய நடிகர்கள் படையே இருந்தாலும், அவர்களுக்கான கேரக்டரை பாஸ்ட்புட் செய்வது மாதிரி எழுதியிருக்கிறார்கள். யோகி பாபு, பிரேம்ஜியின் காமெடிகள் சொல்லி சிரிக்கும்படி இல்லை. சின்ன விஜய்யும் பெரிய விஜய்யும் செய்யும் காமெடிகள் ஓகே ரகம்.

சாதாரண குடும்ப பெண்ணாக வரும் சிநேகாவின் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. மற்ற பெண் கதாபாத்திரங்களுக்கு அந்தளவுக்கு ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குநர் சென்டிமெண்ட் காட்சிகளுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஏஐ மூலமாக உயிர்கொடுக்கப்பட்டிருக்கும் விஜயகாந்தின் காட்சி சிலிர்க்க வைக்கிறது. வழக்கம் போல் அவர் நாட்டுக்கு எதிரான சதியை முறியடிக்க வருகிறார். அவரிடமிருந்துதான் படம் தொடங்குகிறது. பல பிரபலங்களும் சிறிது நேரம் வந்து நடித்து தூள் கிளப்பியுள்ளனர்.

படத்தின் தொழில்நுட்ப குழு பெரிய பலம் எனலாம். ஏஐ விஜயகாந்த், டீ ஏஜிங் விஜய், க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சேப்பாக்கம் மைதானம் எல்லாம் முடிந்தளவு தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கதையின் பரபரப்புக்கு கைகொடுத்திருந்தாலும் பாடல்கள் எடுபடவில்லை. சண்டைக் காட்சிகளில் சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவும் வெங்கட் ராஜனின் படத்தொகுப்பும் அபாரம்.

புதிய மொந்தையில் பழைய கள்ளைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. ’கோட்’ என்ற பெயருக்கு தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் கொடுத்த விளக்கத்தில் இருந்த புதுமை படத்தில் இல்லாமல் போனது ஏமாற்றம்தான்!