விமர்சனம்

ருசியான விருந்து

வினோ

விக்ரம் நடிப்பில் வெளியாகி முதல் வாரமே பொட்டிக்கு திரும்பிய மெகா பட்ஜெட் பொக்கிஷம் தாண்டவம்.

படம் ரிலீஸாவதற்கு முன்பு இப்படம் குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள். இந்தப்படத்தின் கதை என்னுதுதான் என உதவி இயக்குனர் ஒருவர் வழக்கு தொடர.. இல்லை நானே கஷ்டப்பட்டு கொரியா போயி ரூம்போட்டு ஜிந்திச்சது என இயக்குனர் விஜய் மல்லுக்கட்ட ஒரே கசமுசா களேபரம். இதில் இயக்குனர்  சங்கமே இரண்டு பட்டு , பாரதிராஜாதான் கடைசியில் பைசல் பண்ணி தீர்ப்பு சொன்னதாக தெரிகிறது.

ஆனால் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களோ இந்தக் கதைக்கா  இப்படி அடிச்சிக்கிட்டீங்க.. என பாதிப்படத்திலேயே கதறியதை காதுகுளிர கேட்க முடிந்தது. இந்த படத்துக்கு எதற்காக லண்டன், எமிஜாக்சன் என்கிற விவரங்கள் தெரியவில்லை. இயக்குனர் விஜய் எங்காவது விளக்கினால் தேவலை. பாவம் விக்ரம்.. அவருக்கு நேரமே சரியில்லை.. அவருக்கு சோதனை மேல் சோதனை.. ?  யார் கண் பட்டதோ... ஷங்கரின் ஐ தான் காப்பாற்றவேண்டும்.

மாற்றான். சூர்யா+கேவிஆனந்த்+ஹாரிஸ் ஜெயராஜ் என சூப்பர் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான திரைப்படம்.

தாய்லாந்து படமான அலோனின் அட்டக்காப்பி என்று சொல்லப்பட்டாலும்.. அந்த படத்திலிருந்து கன்ஜாய்ன்ட் ட்வின்ஸ் என்கிற ஒட்டிப்பிறந்த இரட்டையர் என்கிற விஷயத்தையும்.. இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள் என்கிற மேட்டரையும்.. இரட்டையரில் ஒருவர் இறந்துவிடுவார் என்கிற ட்விஸ்டையும் மட்டும் எடுத்துக்கொண்டு.. ஆமா இதுக்குமேல என்னத்த எடுக்கணும்னு நீங்கள் நினைப்பது கேட்கிறது.

கேவிஆனந்த் கூட்டணியினர் சொந்தமாக யோசித்து எழுதிய மீதி கதைப்படி விஞ்ஞானத்தால் நம் நாட்டுக்கு சோதனை வருகிறது. ஏதோ வாயிலேயே நுழையாத பெயர்கொண்ட நாட்டின் ராணுவத்தை ஒன்மேன் ஆர்மியாக எதிர்த்து போராடி இந்தியாவை காப்பாற்றி ஜனாதிபதி கையால் விருதுவாங்குகிறார் சூர்யா!

இதுமாதிரி கதைகளில் பவர்ஸ்டார் கூட நடிப்பாரா என்பது சந்தேகமே.. சூர்யா மாதிரி அறிவிற் சிறந்த சான்றோர்கள் நடித்திருப்பது வேதனையான விஷயம்.

நம்பிக்கை தரும் இயக்குனர்களும் அசகாயசூர நடிகர்களும் நடித்த மெகா பட்ஜெட் படங்களே வந்தவேகத்தில் பெவிலியனுக்கு திரும்பிக்கொண்டிக்க.. யாருமே எதிர்பார்த்திடாத ஒரு சின்ன பட்ஜெட் படம் அனைவரையும் ‘’அட யார்ரா இந்த பையன், பிரமாதப்படுத்தியிருக்கானே” என திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

பெரிய ஸ்டார்கள் இல்லை, மிகமிக சிறிய பட்ஜெட்.. என தனக்கு கிடைத்ததை வைத்துக்கொண்டே அசத்தியிருக்கிறார் ஒரு புதுமுக இயக்குனர். வெறும் பத்தே பத்து பாத்திரங்களை வைத்துக்கொண்டே அருமையாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பீட்சாதான் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது.

படத்தின் கதையெல்லாம் இரண்டுவரியில் எழுதக்கூடியதே. பீட்சா டெலிவரி செய்யப் போன ஹீரோ ஒரு கதை சொல்கிறான், அந்த கதைக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது.. அதுதான் ட்விஸ்ட்டு. சாதாரண ஒரு கதையை எடுத்துக்கொண்டு அசாதாரணமாக திரைக்கதையை பின்னியிருக்கிறார் படத்தின் இயக்குனர். சில காட்சிகளில் தியேட்டரே பயந்து போய் அலறுகிறது.

இப்படிப்பட்ட படத்துக்கு ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு நச் கிளைமாக்ஸ் பீட்சாவில்  தூவின  டாப்பிங்ஸ்   போல அற்புதம். படத்தின் மிகப்பெரிய பலம் நாயகனாக நடித்திருக்கும் விஜயசேதுபதி. கிட்டத்தட்ட படத்தின் ஒருமணிநேரம் தன்னந்தனியாக நடித்திருக்கிறார். மோனோ ஆக்டிங் மாதிரிதான்.  ஆனால் மனுஷன் வெளுத்துவாங்கி யிருக்கிறார். என்ன மாதிரியான உடல்மொழி, எக்ஸ்பிரஷன்.. . என்ன ஒரு இயல்பான நடிப்பு. தமிழுக்கு இன்னொரு சிறந்த நடிகர் கிடைத்திருக்கிறார்.

இது நிச்சயமாக இயக்குனருடைய படம்தான். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் அதை உணரமுடிகிறது. பீட்சா என்கிற தலைப்பு பீட்டர்தனமாக இருக்கிறதே என அஞ்சவேண்டாம்... எல்லாதரப்பினரும் ரசிக்கும் வண்ணம் ருசியான த்ரில்லர் விருந்தே போட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். வாழ்த்துக்கள் பாஸ்.

தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் தமிழ் சினிமாவுக்கு உற்சாக ட்ரீட்டு இந்த பீட்சா! 

நவம்பர், 2012.