விமர்சனம்

பரதேசி

இரா. கௌதமன்

உங்கள் அமைதி தவழும் இல்லத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் சுற்றியிருக்கையில் மனதுக்கு இதமளிக்கும் ஒரு கோப்பைத் தேநீரை உறிஞ்சும்போது அதற்காக அந்த ஆண்டுகளில் உங்களுடைய வற்றைவிட எளிய ஆனால் உங்களுடையதைப் போன்றே இன்பமும் அமைதியும் நிலவிய ஆயிரமாயிரம் இல்லங்கள் சிதைக்கப்பட்டன, அழித்து நாசமாக்கப்பட்டன என்பதை நினைவு கூறுங்கள்

- பி.எச்.டேனியல், ‘எரியும் பனிக்காடு’ முன்னுரையில்....

நாம் தினந்தோறும் அருந்தும் தேநீரின் பின்னணியிலுள்ள ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் வாழ்கைதான் பாலாவின் பரதேசி. எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் படைப்புகளில் உணவிற்காக, உணவு பந்தல்களில் அவமானப்படும் நிகழ்வு பல இடங்களில் வெளிப்பட்டிருக் கிறது. இதனின் உச்சம் ‘இடலாக்குடி ராசா’ சிறுகதை. கதாநாயகனுக்கு ராசா கதாபாத்திரம் கொடுத்து பரதேசியை உருவாக்கியுள்ளார் பாலா. ஆனால் சிறுகதையில் உணர்வுபூர்வமாக வெளிப்பட்ட ராசா படத்தில் நகைச்சுவைக்கு மட்டுமே பயன் பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்திலுள்ள சாலூர் என்ற கிராமத்திலிருந்து தொடங்குகிறது கதை.

செழியனின் கேமரா குடிசைகளின் வழி புகுந்து கிராமத்திலுள்ள ஒவ்வொரு மனிதரையும், குடிசையையும் அறிமுகப்படுத்துகிறது. அந்தகால திருமண சடங்குகளில் தொடங்கி உணவுவகைகள் வரை போகிறபோக்கில் விவரித்துக் கொண்டே செல்கிறார்கள். கதைப்படி உள்ளூரில் சுரண்டப்படும் ஏழை மக்கள் கங்காணியின் ஆசை வார்த்தைகளில் மயங்கி தேயிலைதோட்டம் என்னும் நரககுழியில் மாட்டிக் கொள்கிறார்கள். ஆனால் படத்தில் சாலூரில் மக்கள் அனைவரும் மகிழ்சியாக இருப்பதாகவே காட்டப்பட்டுள்ளது. ‘ஒட்டுப்பொறுக்கிக்கு தெரிய வேணாம். பாவம் இன்னிக்காவது நம்ம சனங்க நெல்லு சோறு சாப்பிடட்டும்’ என்று கவிஞர் விக்ரமாதித்யனின் மனைவியாக வருபவர் பேசும் ஒரு வரி வசனம் மட்டுமே போதும் என்று நினைத்துவிட்டாரா பாலா?  மூட்டை முடிச்சுகளுடன் அணிவகுக்கும் மக்களின் பயணக்காட்சி அந்த மக்களின் வலியை பார்வையாளனுக்கு கடத்துகிறது. வழியில் சுருண்டு விழுபவனை அப்படியே விட்டுவிட்டு அவனுடைய மனைவியை இழுத்துச் செல்லும் போது அசையும் அவனது கைவிரல்களில் உறையும் கேமரா இரண்டாவது பகுதியில் இவர்கள் அனுபவிக்கப் போகும் துன்பத்தை முன்னமே உணர்த்திவிடுகிறது.

இரண்டாம் பகுதி முழுக்கவே ஆங்கிலேயர்கள், கங்காணி, தாயத்து கட்டும் லோக்கல் சாமியார், மருத்துவர் போர்வையில் வரும் அட்டண்டர் மற்றும் கிறிஸ்தவ மருத்துவர் என்று சுற்றி யுள்ளவர்களால் அம்மக்கள் சுரண்டப் படும் வலி மிகுந்த கதை. அதர்வா தனக்கு கொடுக்கப் பட்ட பாத்திரத்தின் தன்மையை உணந்து அதை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒட்டுப் பொறுக்கியின் பாட்டியாக வரும் கிழவி நம்முடைய கிராமங்களில் வலய வரும் பாசமிகு பாட்டியின் வார்த்தெடுப்பு. காமிரா உணர்வே இல்லாமல் நடித்திருக்கிறார். படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்களை கூட சிறப்பாக வடித்திருக்கும் பாலா கதாநாயகி வேதிகாவை மட்டும் வழக்கமான தமிழ் சினிமா லூசுப்பெண்ணாகவே அலைய விட்டிருக்கிறார்.

படத்தில் இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் உறுத்தும் ஒரு விஷயம் மருத்துவரின் பாத்திரப்படைப்பு. உண்மையில் தமிழ் நாட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனையை ரெட் டீ நாவல் மூலம் வெளிச்சத் திற்கு கொண்டுவந்ததே அந்த மருத்துவர்தான். அவரின் நாவலை படித்து அதனை அடிப்படையாகவைத்து திரைப்படம் எடுத்த பாலா மருத்துவரின் பாத்திரப்படைப்பை கொச்சைப்படுத்தலாமா?  அதிலும் அந்த குத்தாட்ட பாடலும் அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயன் சொல்லும்’ இவன் கங்காணியை விட ஆபத்தானவன்’ என்னும் வசனமும் அருவருப்பானது(ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்படுகிறது).

இதனையும் மீறி பரதேசி தமிழ் சினிமாவின் முக்கியமான படம். தமிழ்  சினிமா கேட்கவே விருப்பப்படாத புறக்கணிக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் கதையை பாலாவை தவிர வேறு யாரிடமிருந்து எதிர்பார்க்க முடியும்?

ஏப்ரல், 2013.