விமர்சனம்

ஓடும் படமும் ஓடாத படமும்

வினோ

கோடம்பாக்கத்தில் இப்போது கடல் சீசன்போல.. ஆளாளுக்கு ஒரு படகும் துடுப்புமாக படமெடுக்க கடலுக்குள் குதிக்க துவங்கியிருக்கிறார்கள். எல்லாருக்குமே இலங்கை கடற்படை நம்மூர் மீனவர்களை சுட்டுக்கொல்வதன் அரசியலைப் பற்றி பேச, கடலில் கட்டுமரத்தில் வாழ்க்கை நடத்தும் மீனவர்களின் வாழ்க்கையை படம் பிடிக்க, அந்தக்கால செம்மீன் போல கடல்சார்ந்த காதலை பேச ஆசையிருக்கிறது என்பது இப்படங்களை தொடர்ந்து பார்க்கும்போது தெரிகிறது.

இதோ இப்போது மரியான்!

ஏஆர் ரஹ்மான், தனுஷ், வந்தேமாதரம் ஆல்பம் புகழ் இயக்குனர் பரத்பாலா, வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் மார்க்கோனிக்ஸ், எழுத்தாளர் ஜோடிகுரூஸ் என பிரமாண்ட டீம் வேலை பார்த்திருக்கிற படமென்பதால் இயல்பாகவே படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படமோ கொஞ்சமும் உயிர் இல்லாமல் காய்ந்துபோன கருவாடாகவே வந்திருப்பது வேதனை!

காதலியின் கடனை அடைக்க வெளிநாட்டு வேலைக்கு போன காதலன் அங்கே தீவிரவாதிகளிடம் சிக்கி எப்படி உயிரோடு திரும்பி வருகிறான் என்பது ஒன்லைன்! இந்த ஒருவரியை ஒன்றரை முழத்துக்கு நீட்டி முழக்கி நம்மை அவ்வப்போது தூங்கவைத்து எரிச்சலூட்டி.. புரட்டி எடுக்கிறார் பரத்பாலா! படத்தின் முதல்பாதியில் காதல் என்ற பெயரில் கரகாட்டக்காரன் காலத்து காட்சிகளை காட்டுகிறார்கள் என்றால் இரண்டாம் பாதியில் தனுஷ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டேயிருக்கிறார். உயிர் பிழைத்தல்தான் படத்தின் இரண்டாம் பாதி என்றாலும் அதை பார்க்கிறவர் பதறும் வகையில் பரபரவென சொல்லியிருக்க வேணாமா? ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாயில் இயக்கிய 127 ஹவர்ஸ் திரைப்படமும் கிட்டத்தட்ட இதேமாதிரியான உயிர்பிழைத்தல் தொடர்பான கதைதான் என்றாலும் ஒன்றரை மணிநேரமும் நம்மை கதற அடித்திருப்பார். தனுஷை துரத்திக்கொண்டு தீவிரவாதிகள் வருவதும் அவர்களிடமிருந்து தனுஷ் தப்பிப்பதுமாக ஓட்டமாய் ஓடியிருக்க வேண்டிய படம் அழுதும் தூங்கியும் வழிகிறது!

தூங்கி வழிந்திருக்க வேண்டிய ஒரு படத்தை பரபரவென எடுத்து பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்ப வைத்திருக்கிறார் ராகேஷ் ஒம்பிரகாஷ் என்கிற பாலிவுட் இயக்குனர். ஏற்கனவே அமீர்கான் நடிப்பில் ரங் தே பாசந்தி என்கிற படமெடுத்து ஹிட்டடித்தவர் இப்போது ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தோடு வந்திருக்கிறார். முன்னாள் தடகள வீரர் மில்காசிங்கின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துள்ளார்! இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் வீடிழந்து திருடனாக திரிந்து இராணுவத்தில் சேர்ந்து பின் தடகள வீரனாக இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த ஒரு மகத்தான விளையாட்டு வீரனின் நீண்ட நெடிய சோகமும் மகிழ்ச்சியும் கலந்த கதையை கொஞ்சமும் சமரசமின்றி இயல்பாக அழகாக படமாக்கியிருக்கிறார் ராகேஷ்.

தேவையில்லாத மெலோடிராமா காட்சிகளையெல்லாம் தவிர்த்துவிட்டு ஒரு மனிதனின் வாழ்க்கையின் உன்னதமான தருணங்களை தொகுக்கிற வகையில் கதையை அமைத்திருப்பதோடு எந்த காட்சியும் கொஞ்சமும் சலிக்காத வகையில் திரைக்கதையை உருவாக்கியிருப்பது சிறப்பு. படம் மூன்றுமணிநேரம் ஓடியிருப்பதை படம் முடிந்த பின்தான் உணர முடிகிறது. அதோடு படம் வெறும் மில்கா சிங்கின் வாழ்க்கையாக மட்டுமேயில்லாமல் அதனூடாக சுதந்திரத்துக்கு பின்பான சீக்கிய மக்களின் வரலாற்றையும் தொட்டுச் செல்கிறது. ஆனால் எதுவுமே அளவுக்கதிகமாக இல்லை.. இப்படம் நிச்சயம் ஒரு அற்புதமான அனுபவம்!

ஆகஸ்ட், 2013.