வாழை திரைப்படம் 
விமர்சனம்

விமர்சனம்: வாழை படத்தில் மாரி செல்வராஜ் சொல்வது என்ன?

தா.பிரகாஷ்

வற்றாத தண்ணீரும், வாழைத் தோட்டமும் நிறைந்த பகுதியில் வளரும் பதின் பருவ சிறுவனின் துயர சித்திரம்தான் ‘வாழை’ திரைப்படம்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த சிவனணைந்தான் (பொன்வேல்), தன் அம்மா, அக்காவுடன் (திவ்யா துரைசாமி) வளர்ந்து வருகிறான். அவனுடைய நெருங்கிய நண்பன் சேகர் (ராகுல்). வார விடுமுறை நாள்களில் வாழைத் தார்களைச் சுமந்து செல்லும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருவருக்கும் உள்ளது. ஒரு நாள் அம்மாவை ஏமாற்றி விட்டு காய் சுமக்கச் செல்லாமல் பள்ளிக்கு சென்றுவிடுகின்றான் சிவனணைந்தான். அன்று அவன் சந்திக்கும் பெருந்துயரமே இந்த ‘வாழை’.

மாரி செல்வராஜ், தன் பால்யகால வாழ்க்கையை கொஞ்சம் புனைவுடன் சொல்ல முற்பட்டிருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

மலை மேட்டிலிருந்து பெருங்குரலெடுத்துக் கத்தும் சிவனணைந்தானின் முகத்தில் உள்ள தவிப்பும் பதற்றமும் படம் முழுக்க வந்தாலும், பள்ளியில் டீச்சரை காணும்போது மட்டும் அவன் முகம் வாழைப்பூ போல் மலர்ந்துவிடுகிறது.

ரஜினி ரசிகரான சிவனணைந்தானுக்கும் கமல் ரசிகரான சேகருக்கும் இடையேயான காட்சிகள் குலுகுலுங்க சிரிக்க வைக்கிறது. இதில் சேகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராகுலை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை! உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் அவ்வளவு நேர்த்தி.

பூங்கொடி டீச்சராக நிகிலா விமல். சிவனணைந்தானும் சேகரும் அவர் மீது கொள்ளும் மையல், ‘நமக்கொரு டீச்சர் இப்படி இல்லாம போய்டாங்களே’ என ஏக்கம் கொள்ள வைக்கிறது. ஆசிரியருக்கும் - மாணவனுக்கும் இந்த காட்சிகள் கொஞ்சம் பிசகியிருந்தாலும் படம் வேறு அர்த்தத்தை கொடுத்திருக்கும். மாரி அதை மிக அழகாக கையாண்டிருக்கிறார்.

துடிப்பும் சுயமரியாதையும் கொண்ட இளைஞராக வரும் கலையரசனுக்கு (கனி) வழக்கம்போல் நெஞ்சை நிமிர்த்தி நடிக்கும் கதாபாத்திரம். சிவனணைந்தானின் அக்காவாக வரும் வேம்பு (திவ்யா துரைசாமி) புலியங்குளம் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே வரும் காதல் அத்தனை அற்புதம்!

தண்ணீர் தேங்கும் வயல்வெளிகள், தாமரை பூத்திருக்கும் குளம், பரந்து விரிந்திருக்கும் வாழைத் தோட்டம், கருவேல காடுகள் என முழு படமும் ஒரே கலர் டோனில் படமாக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு காட்சியையும் தன் ஒளிப்பதிவால் செதுக்கியிருக்கிறார் தேனி ஈஸ்வர். படத்தின் பெரும்பகுதி இசை நாதஸ்வரம், தவில், உருமி, வயலின் தான் ஆக்கிரமிக்கிறது. பின்னணி இசையில் கலக்கியிருக்கும் சந்தோஷ் நாராயணன் பாடல்களில் ஏனோ கொஞ்சம் கோட்டைவிட்டிருக்கிறார். பரியேறும் பெருமாள், கர்ணனில் அசைபோட வைத்த அளவுக்கு இதில் பாடல்கள் இல்லை.

‘மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்’, பூங்கொடிதான் பூத்ததம்மா’ போன்ற பாடல்கள் சிவனணைந்தான் பாடும் காட்சிகள் என்ன ஒரு அற்புதம்! பஞ்சு மிட்டாய் சேலை கட்டி’ பாடலுக்கு பூங்கொடி டீச்சர் நடனம் சொல்லித் தரும் காட்சிகள் புல்லரிக்க வைக்கிறது.

சிவனணைந்தானுக்கு பள்ளி மகிழ்ச்சி நிறைந்ததாகவும், வீடு துயரம் நிறைந்ததாகவும் காட்டப்படுவது படத்தில் முக்கியமான குறியீடு. வழக்கம்போல் மாரி படத்தில் வரும் பூனை, நாய், நாட்டார் தெய்வங்கள், மரவட்டை போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

அழுத்தமாக செல்லும் திரைக்கதை இலை உதிர்ந்து விழுவதுபோன்ற மிக இயல்பான முடிவைக் கொண்டிருக்கிறது. இது படத்தின் குறையாக தெரியலாம்!

இரண்டரை மணி நேரம் ஓடும் ’வாழை’ வறுமையும் ஏக்கமும் நிறைந்த சிறுவனின் துயர குரல்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram