பராரி திரைப்படம் 
விமர்சனம்

பராரி: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

பொருளாதாரத்தில் ஒரே படிநிலையில் உள்ள சமூகங்கள் தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைய வேண்டிய தேவையை வலியுறுத்தும் திரைப்படம்தான் பராரி.

திருவண்ணாமலை அருகேயுள்ள ராஜபாளையம்தான் படத்தின் கதைக்களம். வருடத்தில் ஏழெட்டு மாதங்கள் மட்டும் வேலைவாய்ப்புள்ள இந்த கிராமத்தில், இருவேறு சமூகத்தினர் பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து மோதிக்கொள்கின்றனர். இந்த மோதலை இன்னும் அதிகப்படுத்துகிறது மாறன் (ஹரிசங்கர்) – தேவகி (சங்கீதா கல்யாண்) காதல். இந்த பகையுடன் பெங்களூருக்கு வேலைக்குச் செல்லும் இருதரப்பும் அங்கு தமிழர்கள் என்பதால் அச்சுறுத்தப்படுகின்றனர். இதை அவர்கள் எப்படி எதிர்கொண்டனர்? நாயகனின் காதல் கைகூடியதா? என்பதற்கான விடையை சொல்வதுதான் படத்தின் மீதிக்கதை.

அந்த கிராமம் எப்படி இருக்கிறது என்பதை பன்றி பிடிக்கும் காட்சியிலேயே காட்டும் இயக்குநர், முதல் பாதியில் இரு சமூகத்தினருக்கு இடையேயான பகை எப்படியெல்லாம் வளர்கிறது என்பதைக் காட்டுகிறார். இரண்டாம் பாதி கதை பெங்களூரில் நடக்கிறது. முதல் பாதி உண்டாக்கும் எதிர்பார்ப்பை, இரண்டாம் பாதி திசைதிருப்பி விடுகிறது. இயக்குநருக்கு எந்த முரண்பாட்டை முதன்மைப்படுத்துவது என்று தெரியாமல் திரைக்கதையை பராரியாக அலையவிட்டிருக்கிறார். திரைக்கதையில் அழுத்தம் இல்லையென்றாலும் புதிய கதைக்களத்திற்காவும் அது பேசும் அரசியலுக்காவும் படம் கவனம் பெறலாம்.

தானாக எந்த வம்பு தும்புக்கு போகாத நாயகன் கேரக்டரில் ஹரிசங்கர் கச்சிதமாக நடித்திருந்தாலும், இவரின் கதாபாத்திர வார்ப்பு அழுத்தமாக இல்லை. நாயகியாக சங்கீதா கல்யாண். காதலனை நினைத்து ஏங்குவதாக இருக்கட்டும், கையறுநிலையில் மனக்குழப்பத்துடன் இருக்கும் காட்சிகளாகட்டும், கிராமத்துப் பெண்ணாக கண்முன் நிற்கிறார். வெடி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள குரு ராஜேந்திரன், கன்னட வெறியராக நடித்திருக்கும் புகழ் மகேந்திரன், ஜெயக்குமார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரேம்நாத் என படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் மிரட்டுகிறார்கள். நெளிந்த தேகம், கறுத்த நிறம், உரத்துப் பேசுவது என அசல் கிராமத்தினராகவே வாழ்ந்துள்ளனர்.

அந்த கிராமத்தின் வாழ்வாதாரமாக உள்ள கரும்புத் தோட்டம், வெற்றிலை தோட்டம், செங்கல் சூளை என எல்லாவற்றையும் அதற்கே உரிய அழகியலுடன் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர். சண்டைக் காட்சியிலும் பன்றி பிடிக்கும் காட்சியிலும் அவரின் கேமரா கோணங்கள் ‘வாவ்’ சொல்ல வைக்கின்றன. ஷான் ரோல்டனின் பின்னணி இசை சில இடங்களில் படத்துக்கு பலமாக இருந்தாலும், சில இடங்கள் கதையோட்டத்துக்கு உதவி செய்யவில்லை. கதையை உள்வாங்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார் பாடலாசிரியர் உமாதேவி. ‘உன் சாமி என் சாமி’, ‘தேமாங்கனி’ பாடல்களில் அதை பார்க்க முடியும்.

புதுமுக நடிகர்களை தேர்வு செய்து, அவர்களை திருவண்ணாமலை மண்ணின் மைந்தர்களாக நடிக்க வைத்துள்ள படத்தின் கேஸ்டிங் டைரக்டர் சுகுமார் சண்முகம் உழைப்பு பாராட்டை பெறலாம்.

திருவண்ணாமலை வட்டார வழக்கை இயக்குநர் அப்படியே கொண்டு வந்துள்ளார். ‘காட்டையெல்லாம் அழிச்சிட்டு…கோழிக்கிட்ட மழை வருமானு கேட்குறான் பாரு…’, வாயும் வயித்துக்காவதான் வாயுறீங்க… அப்புறம் என்ன மேலா கீழ எல்லாம்’ என்பது போன்ற பல வசனங்கள் இயக்குநர் எழில் பெரியவேடியின் சமூக அக்கறையை காட்டுகிறது.

இளம் தலைமுறை இயக்குநர்கள் இதுவரை பேசப்படாத கதைக்களங்களை நோக்கி நகர்வதோடு, வாழ்வியலையும் அதோடு பிரிக்க முடியாதை அரசியலையும் பதிவு செய்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் கவனம் பெற்ற கொட்டுக்காளி, ரப்பர் பந்து போன்ற படங்களின் வரிசையில் பராரியும் இடம்பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!