கங்குவா திரைப்படம் 
விமர்சனம்

கங்குவா: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

‘கங்குவா’ சூர்யாவின் திரைவாழ்வில் மிகப்பெரிய படமாக இருக்குமா? பான் இந்தியா படமாக ‘கங்குவா’ கலக்குமா? இதுவரை வந்த பிரமாண்ட படங்களுக்கு ‘கங்குவா’ டப் கொடுக்குமா? ஏன் இவ்வளவு கேள்வி என்றால் படம் வெளிவருவதற்கு முன் படக்குழுவினர் கொடுத்த பில்டப் அப்படி.

சிறார்களை வைத்து நரம்பு மண்டலத்தில் ஏதோ மாற்றங்களைச் செய்கிறது குழு ஒன்று. அங்கிருந்து ஒரு சிறுவன் தப்பிக்கிறான். அவன் கோவாவில் இருக்கும் பிரான்சிஸை (சூர்யா) தேடிச் செல்கிறான். அந்த சிறுவனை அந்த ஆராய்ச்சிக்கூட ஆட்கள் மீண்டும் தூக்கிச் செல்ல வருகிறார்கள் அப்போது கதை 1070ஆம் ஆண்டுக்கு நகர்கிறது. ஐந்தீவு என்று அழைக்கப்படும் இடத்தில் பெருமாச்சி ஊரின் இளவரசனாய் இருக்கிறார் கங்குவா (சூர்யா). இப்படி 1070இல் நடந்த கதைக்கும் 2024இல் நடக்கும் கதைக்கும் என்ன தொடர்பு என்பதுதான் கங்குவா படத்தின் திரைக்கதை.

பிரம்மாண்டமான நவீன ஆய்வுக்கூடம், சூர்யாவின் துள்ளலான ஸ்டைலான நடிப்பு, எச்சில் கூட்டி விழுங்க வைக்கும் தீஷா பதானியின் கவர்ச்சி... ஆகியவற்றுடன் படம் தொடங்குகிறது. இதையெல்லாம் டிரெய்லரில் பார்க்கவில்லையே என யோசித்துக் கொண்டிருக்கும்போதோ, படம் பத்தாம் நூற்றாண்டுக்கு பயணிக்கிறது. முதல் பாதி ஓரளவு ரசிக்க வைத்தாலும், ஓவரா பில்ட் அப் கொடுத்திட்டாங்களோ என தோன்ற ஆரம்பிக்கிறது. இரண்டாம் பாதி முழுக்க சண்டை... சண்டை... படத்தின் முடிவு என்ன? மனசை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கங்குவா – 2 வில் தான் பதில் கிடைக்கும் என படம் முடிகிறது.

பிரான்சிஸ் சூர்யா – கங்குவா சூர்யா. இரண்டு கதாபாத்திரத்திலும் சூர்யா அசுர உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அவரின் இறுக்கமான உடல் அமைப்பு இளவரசனுக்கு உரிய தோற்றத்தைக் கொடுத்தாலும், பெரிதாக சொல்லப்பட்ட முதலையை குத்தி கிழித்து கொள்ளும் காட்சி நம்பும்படியாக இல்லை. ‘ஐயய்யோ முதலையை எப்படி கொல்லப்போகிறாரோ சூர்யா...?’ என்ற பதற்றம் நம்மை தொற்றிக்கொள்ளவில்லை. படத்தில் பெரும்பாலான சண்டைக்காட்சிகள் கதையோட்டத்துக்கு பொருந்தும்படி இல்லை.

திஷா பதானி அரைகுறை ஆடையில் மட்டுமே வருகிறார். வணிகத்துக்கு மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிகிறது. யோகிபாபு செய்யும் காமெடிகளுக்கு தியேட்டரில் சிரிப்பு சத்தத்தையே கேட்கமுடியவில்லை.

கருணாஸ், நட்டி, கலைராணி, போஸ் வெங்கட், அவினாஷ் இப்படி பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். அவர்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு அவர்களை பத்தாம் நூற்றாண்டு மனிதர்களாகவே மாற்றியிருக்கிறார்கள் ஆடை வடிவமைப்பாளர்கள் அனுவர்தன், தட்ஷா பிள்ளை. கலை இயக்குநர் மிலனின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. சுப்ரீம் சுந்தர் சண்டைக்காட்சிகள் ரத்தம் தெறி தெறியென தெறிக்கிறது. கண்ணுக்குள் துகள் விழுவது போல் உள்ள 3டி எஃபெக்ட்ஸும் ரசிக்கவைக்கின்றன.

கடைசிக்காட்சியில் கார்த்தி பிரமாண்டமாக உள்ளே வருகிறார். அடுத்த பாகத்துக்கு லீட் கொடுக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் பாபி தியோல் மிரட்டுகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பலமாகவும் பலவீனமாவும் அமைந்திருக்கிறது.

வெற்றி பழனிசாமி, தான் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என கங்குவாவில் நிரூபித்திருக்கிறார். அபாரமான ஒளியமைப்பால் அசரடிக்கிறார்.

ஐந்து தீவுகளிலும் உள்ள பழங்குடி மக்களை போர் வெறியர்களாக, ரத்த காவு கேட்பவர்களாக சித்தரித்திருக்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டு மக்கள் இப்போது உள்ளது போன்றே பேசியிருக்கிறார்கள். வசனங்களை விட இசை அதிக சத்தத்துடன் இருந்ததால் பெரும்பாலான வசனங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழில் பெரிய பட்ஜெட் படங்களின் திரைக்கதைகள் அழுத்தமாகவும் ரசிக்கும்படியும் எழுதப்படுவதில்லை. சமீபத்தில் வந்த இந்தியன் – 2, வேட்டையன் வரிசையில் இப்போது கங்குவாவும் சேர்ந்துள்ளது என சொல்லலாம்.

கதை, பாத்திரங்களுக்கான எழுத்து, கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவை இயக்குநர் சிறுத்தை சிவா இன்னும் கச்சிதமாக எழுதி இருக்கலாம். கங்குவா அடுத்த பாகம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என நினைத்திருப்பாரோ?