ஜப்பான்  
விமர்சனம்

ஜப்பான்: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

இன்றைய தமிழ் சினிமாவில், டூ கே கிட்ஸ்கள் விரும்பும் கதைகள்தான் ஹிட் படமாகிறது. அவர்களுக்கு குடும்ப செண்டிமெண்ட் கதைகள் என்றால் கசக்கும். அல்லது க்ரிஞ்ச் என ஒதுக்கிவிடுவார்கள். அவர்கள் ரசிப்பதாக சொல்லப்படும் ரத்தம் தெறிக்கும் வன்முறை, துரோகம், பாசமற்ற உலகம், கழட்டிவிடும் காதலி, போதை, கொட்ட வார்த்தை போன்ற சமாச்சாரத்தோடு அம்மா செண்டிமெண்ட்டும் சேர்ந்து வந்திருக்கிறது ’ஜப்பான்’ திரைப்படம்.

இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் ’ஜப்பான்’ கார்த்தியின் 25ஆவது படம். இதனால், படத்துக்கு ஏகப்பட்ட புரோமோஷன் செய்து, ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கூட்டினர். அதைப் படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம்.

கொலை, கொள்ளை என்று இருப்பவனுக்கும் மனசாட்சி, ஆசாபாசம் இருக்கும் என்பதை இயக்குநர் சொல்ல வருகிறார். இதை எந்தளவுக்கு கமர்சியலாக கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு கொடுக்க முற்பட்டிருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன். ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட் என எல்லாவற்றையும் படம் தொட்டுச் செல்கிறது.

வழக்கமாக படம் தொடங்கிய இருபது நிமிடத்தில் கதை ஆரம்பித்துவிடும். ஆனால், ஜப்பானில் கடைசி அரை மணிநேரத்தில்தான் கதை தொடங்குகிறது. அதுவரை திருடன்,போலீஸ் விளையாட்டுதான்.

கார்த்தியின் அசால்டான உடல்மொழி, முனைவாயிலிருந்து பேசுவது எல்லாம் அட்டகாசம். கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். அவர் போட்டிருக்கும் துணி மணிகளும், அவர் பயணிக்கும் வண்டியும் படு மாஸ். அம்மா செண்டிமெண்ட் காட்சியில் கார்த்தி நம்மை கொஞ்சம் கண் கலங்க வைத்தாலும், அவரின் கேரக்டரை இன்னும் அழுத்தமாக எழுதி அசத்தியிருக்கலாம்.

அனு இம்மானுவேல் ஹிரோயினா? அல்லது துணை நடனக் கலைஞரா? என்ற அளவுக்கு அவரின் கதாபாத்திரம் உள்ளது.

இயக்குநர் விஜய் மில்டன், சுனில் இருவரும் படம் முழுக்க வந்தாலும் அவர்களின் பாத்திரம் கச்சிதமாக இல்லை. சுனில், வாகை சந்திரசேகர் பாத்திரம் ரசிக்கும்படி உள்ளது. எழுத்தாளர் பவா செல்லதுரை, ரகுபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நச்சென்று மனதில் நிற்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ் இருவரும் ஓரளவு நன்றாகவே நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை ஒரு சில இடங்களில் படத்தின் விறுவிறுப்புக்கு கைகொடுத்தாலும் நிறைய இடங்களில் பொருந்தாமல் உள்ளது. அம்மா செண்டிமெண்ட் பாடலை தவிர, மற்ற பாடல்கள் எதுவும் எடுபடவில்லை. ரவி வர்மா ஒளிப்பதிவு அட்டகாசம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில், காமிர கோணங்கள் தரமாக உள்ளது.

இரண்டாம் பாதி வரும்போதுதான் ஜப்பான் ராஜூ முருகன் படம் என்பதை உணர முடிகிறது. அரசியலை கிண்டல் பண்ணும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. "ஓட்டு போடும் போது லாஜிக் பார்க்காம; ஓட்டை போடும் போது லாஜிக் பாக்குறீங்களா?", "என்ன சொன்னாலும் நம்பற பொது ஜனமா நீ?", "கால நக்கறதே ஏறி மிதிச்சு மேல போகத்தான்" இதுபோன்று உள்ளன.

ஜப்பான் ராஜு முருகன் படமாக வந்திருந்தால் தீபாவளிக்கு சரவெடியாய் வெடித்திருக்கும்.