சி.வி.குமார் 
திரை நேர்காணல்

ஸ்கிரிப்ட்தான் பட்ஜெட்டைத் தீர்மானிக்கிறது

இரா. கௌதமன்

அட்டகத்தி படத்தின் மூலமாக தயாரிப்பாளராக சினிமாவிற்குள் நுழைந்த சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மிக குறுகியகாலத்தில் அதிக இளம் இயக்குநர்களை அறிமுகப்படுத்திய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. பீட்சா,சூதுகவ்வும்,இன்று நேற்று நாளை என்று சமீபகாலத்தின் வித்தியாசமான முயற்சிகளுக்கு துணை நின்றிருக்கிறது. ‘மாயவன்’ என்ற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் மூலமாக இயக்குநராக புது அவதாரம் எடுத்திருக்கிறார் சி.வி.குமார். வளசரவாக்கத்திலுள்ள அவரது அலுவலகத்தில் மதியநேரத்தில் அந்திமழைக்காக அவரை சந்தித்தோம்.

வெற்றிகரமான தயாரிப்பாளரான நீங்கள் இயக்குநரானது எப்படி?

தொடர்ந்து படம் தயாரித்துக் கொண்டிருந்தேன். படத்தின் தயாரிப்பாளராக பணம் தருபவராக மட்டுமில்லாமல் படத்தின் அத்தனை தொழில் நுட்ப விஷயங்களையும் கூட இருந்து கவனித்து வந்திருக்கிறேன்.  ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கமுடியாது. அடுத்தது என்ன என்ற தேடல் இயக்குநர் இடத்திற்கு என்னை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. டெக்னிக்கலாக ஏற்கெனவே படித்திருக்கிறேன். ஐந்தாறு வருடங்களில் ப்ராக்டிக்கலாக சினிமாவையும் பார்த்துவிட்டேன். தொடர்ந்து சினிமாவில் ஏதாவது செய்ய வேண்டுமில்லையா?

சினிமா பின்புலம் எதுவுமில்லாமல் மதுரையில் டிராவல் ஆர்கனைசராக இருந்தவரை சினிமா  தயாரிப்பாளராக்கியது எது?

மதுரைல சினிமா தவிர வேறு பொழுதுபோக்கு எதுவுமே இல்லை. அதனால மதுரைக்காரர்களுக்கு இங்கு இருப்பவர்களை விட அதிக சினிமா ஆர்வமும் விஷயமும் இருக்கும். அதே மாதிரி எனக்கும் சினிமா பிடிக்கும். டிராவல் ஆர்கனைசராக வெளிநாடுகளுக்கு போய் பார்க்கும்போது அவர்களின் சினிமா எனக்குள்ளிருந்த சினிமா ஆர்வத்தை தூண்டிவிட்டிருச்சி. சினிமா தயாரிப்பை வியாபாரமாகத்தான் நான் பார்க்கிறேன். டிராவல் ஆர்கனைசிங்ல இருந்தப்ப வெவ்வேறு விதமான மனிதர்களை சந்தித்து அவர்களின் தேவைகள், விருப்பங்களின் அடிப்படையில் பயணத்தை திட்டமிட்டு அதை செயல்படுத்துவோம். சினிமாவும் அதே மாதிரிதான். பல்வேறுவகையானஆட்களைக் கொண்டு சரியான திட்டமிடல், செயல்படுத்துதல். அவ்வளவுதான்.

குறுகிய காலத்தில் அதிக வெற்றிப் படங்களை கொடுத்த தயாரிப்பாளராக இருக்கிறீர்கள். நீங்கள் படித்த சைக்காலஜி இதற்கு காரணமா?

இல்லை. எம்.எஸ்.சி சைக்காலஜி ஆட்களை நிர்வகிப்பதற்கு உதவியாக இருப்பது உண்மைதான். ஆனால் ஒரு ஸ்கிரிப்டை முடிவுசெய்ய அது எந்தவிதத்திலும் உதவியாக இருந்ததில்லை. ஒரு ஸ்கிரிப்ட் எனக்கு பிடித்திருந்தால் மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். பெரும்பாலான சமயங்களில் அது சரியாக இருக்கிறது. சில சமயங்களில் அது தவறுவதும் உண்டு. வெற்றி, தோல்வி இரண்டையும் சரிசமமாக பார்த்து அடுத்த வேலைக்கு நகர்ந்தால்தான் இந்த தொழிலில் நிலைக்கமுடியும். ஒவ்வொரு படத்திலும் நிறைய விஷயங்களைகற்றுக் கொள்கிறோம். படத்தோட கதை மட்டுமே வெற்றியை தீர்மானிப்பதில்லை. படத்தோட வெற்றியை அந்த படத்துடன் ரிலீசாகும் படங்கள், அந்த படத்திற்கு முந்தினவாரம், அடுத்த வாரம் வெளியாகும் படங்கள் என்று பல காரணிகள் தீர்மானிக்குது. பல நல்ல படங்கள் கண்டுகொள்ளப்படாமலே போய்விடுகிறது. மார்க்கெட்டிங் மிக முக்கியமான விஷயம்.

முதல் படத்திலிருந்தே படத்தின் விளம்பரங்களுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவமும் செலவும் செய்து வந்திருக்கிறீர்கள். படத்தின் வெற்றிக்கு மார்க்கெடிங் எந்த அளவிற்கு தேவை என்று நினைக்கிறீர்கள்?

சினிமா என்பது கான்செப்ட் விற்பனை போன்றது. நான் ஏற்கெனவே வேலைசெய்த டிராவல் ஆர்கனைசிங்கும் அதே மாதிரிதான். இன்ன இடத்திற்கு அழைத்து போகிறோம், அங்கு இப்படி இருக்கும் என்று மக்களை நம்ப வைத்து அழைத்து போகிறோம். அவர்கள் திருப்தியடையும் போது நம்முடைய கான்செப்ட் ஜெயிக்கிறது. இது இந்த மாதிரியான சினிமா, இந்த படத்தில் இன்னின்ன இருக்கிறது என்பதை மக்களுக்கு கொண்டு சேர்த்து ஆர்வத்தை தூண்ட மார்க்கெட்டிங் மிக அவசியம். விளம்பரப்படுத்தாமல் படம் ஜெயிக்காது.

ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி என்று நிறைய புது அலை சினிமாவிற்கான இயக்குநர்களை அறிமுகப்படுத்தியது எப்படி?

இன்றைய இளைஞர்களின் சிந்தனையும் வெளிப்பாடும் புதுமையாக இருக்கிறது. டிஜிட்டல் உலகம் நிறைய கதவுகளை திறந்து விட்டிருக்கிறது. நான் யார்கிட்டேயும் போய் நல்ல ஸ்கிரிப்ட் இருக்கான்னு கேட்பதில்லை. என்னிடம் நிறைய ஸ்கிரிப்டுகள் வருகிறது. அதில் எனக்கு பிடித்ததை தேர்வு செய்கிறேன்.

குறும்பட இயக்குநர்களுக்கு அதிக அளவில் நீங்கள் வாய்ப்பு கொடுப்பதாக சொல்லப்படுவது பற்றி...

சரபம், எனக்குள் ஒருவன் இயக்குநர்கள் குறும்பட இயக்குநர்கள் இல்லை. இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் குறும்படங்கள் எடுத்திருந்தாலும் அதன் பிறகு கனா கானும் காலங்கள் சீரியலில் எல்லாம் வேலை பார்த்துவிட்டு பிறகுதான் படம் எடுக்க வந்தார். எனக்கு ஸ்கிரிப்ட் தான் முக்கியம். குறும்பட இயக்குநரா, இல்லை வேறு இயக்குநர்களிடம் வேலை பார்த்தவரா என்று நான் பார்ப்பதில்லை. ஸ்கிரிப்ட் பிடித்திருக்கிறதா, அதை இவர் சரியாக எடுப்பாரா என்று மட்டும் தான் பார்ப்பேன். படத்தின் வெற்றி தோல்வி தாண்டி நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சரபம், 144, எனக்குள் ஒருவன் ஆகியவை வியாபார ரீதியாக தோல்வி படங்கள். ஆனால் இந்த படங்களை மோசமான படங்கள் என்று யாரும் சொல்ல முடியாது.

சிக்கனமான தயாரிப்பாளர், படத்தின் பட்ஜெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர், என்று உங்களை பற்றி சொல்லப்படுவது பற்றி...

சினிமாவுல நிறைய தவறான புரிதல்கள் இருக்குது. அதுல ஒண்ணு பட்ஜெட். ஸ்கிரிப்டை முடிவு செய்த உடனே படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் இதுக்கு இவ்வளவு செலவாகும்னு எல்லாரும் உட்கார்ந்து முடிவு செய்கிறோம். அதிலிருந்து பத்து, பதினைஞ்சு சதவீதம் மாறுதல் வரும்போது பிரச்னையில்லை. அத விட அதிகமா ஆகும்போது எங்கயோ தவறு இருக்குன்னு புரிஞ்சிடுது. படத்துக்கு என்ன தேவைன்னாலும் என்னிடம் கேட்கலாம், 200 நாள் ஷீட்டிங் தேவை, தினம் நூறு துணை நடிகர்கள் வேணும் இப்படி எதுவானாலும். ஆனால் அதை முதலிலேயே சொல்லிவிட வேண்டும். ஷீட்டிங் போன பிறகு புதுசு புதுசா சொல்லக்கூடாது. தெகிடி படத்த முடிவு செய்த சமயத்திலேயே இதை நூறு தியேட்டர்லதான் ரிலீஸ் செய்யறோம்னு முடிவு செய்து விட்டோம். அதுக்கு மேல அந்த ஸ்கிரிப்ட் ரீச் ஆகுமான்னு எங்களுக்கு தெரியல. தெகிடி ஹிட். செலவு செஞ்சதை விட ஐம்பது சதவீதம் அதிகமா லாபம் கொடுத்தது. முதல்லயே முடிவு செய்தால்தான் அந்தப் படத்தில் லாபம் பார்க்க முடிந்தது. ஸ்கிரிப்டுக்கு தேவையான செலவு செய்ய எப்பவுமே நான் தயாரா இருக்கேன். சினிமாங்கறது சீரியசான பிசினஸ். நான் அதை சரியா செய்யணும்னு நினைக்கிறேன். 2011 ல் என்னோட படத் தயாரிப்புக்கு உள்ள வந்த பல பேர் இன்னிக்கு இல்ல. பெரிய தயாரிப்பு நிறுவனங்களே சில சமயம் தடுமாறுது. நான் மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்தவன். பணத்தோட அருமை தெரியும். என்னோட பிசினஸ்ல நான் கறாராகத்தான் இருப்பேன்.

உங்களைப் போல சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவிற்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது...

 கவுண்டமணி சார் ஃபெப்சி மீட்டிங்ல பேசும்போது ,

 ‘ சினிமாவுல நுழைவதற்கு அதிர்ஷ்டம் வேணும். நீடிச்சு நிற்க உழைப்பு வேணும். ஜெயிப்பதற்கு அர்ப்பணிப்பு வேணும்’ என்றார். இது மூணும் இருந்தா எங்கேயும் ஜெயிக்கலாம்.

டிசம்பர், 2016.