திரை நேர்காணல்

வெங்கட் பிரபு கொடுத்த அதிர்ச்சி!

தா.பிரகாஷ்

பதினான்கு வருடத்தில் நூறு படங்கள். ஒரு தேசிய விருது. கையிருப்பில் எட்டு படங்கள் என படத்தொகுப்பில் முத்திரை பதித்திருப்பவர் கே.எல்.பிரவீன். மாநாடு திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

‘‘பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, கல்லூரியில் கேட்ட சீட் கிடைக்காததால், அந்த ஆண்டு கல்லூரி

சேரவில்லை. ஒருவருடம் எப்படி சும்மா இருப்பது என்று நினைத்து ‘ஈநாடு‘ என்ற தெலுங்கு தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்தேன். அந்நிறுவனத்தில் நான்கு வருடம் படத்தொகுப்பாளருக்கான பயிற்சி கொடுத்தார்கள். மிகவும் தரமான பயிற்சி அது. படத்தொகுப்பு பணியையே தொழிலாக மாற்றிக் கொள்ளலாமா என்று நினைத்த போது பாலுமகேந்திரா இயக்கிய ‘கதை நேரம்‘ தொலைக்காட்சி தொடரில் உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. நமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்துடன் தான் அவரிடம் சேர்ந்தேன். அந்த ஆணவத்தை மூன்றே நாட்களில் உடைத்துவிட்டார் பாலுமகேந்திரா. அப்போது எனக்கு 21வயது,'' என்ற பிரவீன், தன்னுடைய இளங்கலை வணிகவியல் மேலாண்மை படிப்பைத் தொலைதூரக் கல்வி முறையில் படித்துள்ளார். அதேபோல், திரைப்படங்களைப் பார்ப்பதில் அதிகம் ஆர்வம் உடையவராக இருந்துள்ளார்.

‘‘பாலுமகேந்திராவிடம் நான் உதவி படத்தொகுப்பாளராக இருந்ததுபோல், வெற்றிமாறன் இணை இயக்குநராக இருந்தார். எனக்கும் வெற்றிமாறனுக்கும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தார். எடிட்டிங்கில் சவுண்ட் கட் எப்படி செய்ய வேண்டும், ஓவர் லேப் எங்கு செய்ய வேண்டும், என்ன சவுண்ட் எபெக்ட் சேர்த்தால் எமோஷன் அதிகமாகும் என்பதை எல்லாம் அவர் சொல்லிக் கொடுத்தார். எடிட்டிங்கில் மார்க்கிங் பாயிண்ட் என்று ஒன்று சொல்வார்கள். அது எந்த ப்ரேமில் வைக்க வேண்டும் என எனக்கு சொல்லிக் கொடுத்தவர் அவர்தான். உதாரணத்துக்கு கிரேன் ஷாட் என்றால், மூன்று ப்ரேம் தள்ளி கட் செய்தால் தான் ஷாட் ஸ்மூத்தாக இருக்கும் என்பார்.

பொதுவாக எல்லா மொழிகளிலும் மா, ப, பா என்ற வார்த்தைகள் இருக்கும். அதில் ‘ப' என்ற உச்சரிப்பு வரும் போது கட் செய்தால் கொஞ்சம் துல்லியமாக இருக்காது. அதே ‘மா' என்ற உச்சரிப்பில் கட் செய்தால் ஸ்மூத்தாக இருக்கும். இது போன்ற சின்ன சின்ன நுணுக்கங்களை எந்த திரைப்படக் கல்லூரியிலும் கற்றுக்கொள்ளமுடியாது. இதையெல்லாம் நான் பாலுமகேந்திராவிடம் தான் கற்றுக்கொண்டேன்.

பிறகு சிங்கப்பூரில் டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராஃபி உள்ளிட்ட சில சேனல்களில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் அங்கு சென்றுவிட்டேன். கிட்டத்தட்ட 10 வருடங்கள் சிங்கப்பூரில் வேலை பார்த்தேன். அங்கும் ஒருகட்டத்திற்கு மேல் வளர்ச்சி இல்லை. இந்தியா திரும்பி வரலாம் என்று நினைத்தால் இங்கு எதிர்பார்க்கிற அளவுக்கு சம்பளம் தரமாட்டார்கள். என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான், ஜே.கே.சரவணா என்ற நண்பர் மூலமாக வெங்கட் பிரபு அறிமுகமானார். அப்போது அவருடன் எஸ்.பி.பி. சரணும் வந்திருந்தார்.

வெங்கட் பிரபு முதல் முறையாக இயக்கிய இரண்டு பாடல்களை எடிட் செய்து கொடுத்தேன். என்னுடைய எடிட்டிங் பிடித்துப் போனதால், ‘சென்னை 28' படத்தில் பணியாற்றுவதற்கு அழைத்தார். இதற்காக மூன்று மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு, சென்னை வந்து படத்தை எடிட் செய்து கொடுத்தேன். அப்படம் வேலைகள் முடிந்தவுடன் மீண்டும் சிங்கப்பூர்

சென்றுவிட்டேன். அப்போதும் எனக்கு சினிமாவிற்குள் வரவேண்டும் என்ற எண்ணம் இல்லை.

கே.எல்.பிரவீன்

‘சென்னை 28' வெளியாகி செம ஹிட் என்பதால், எஸ்.பி.பி.சரண் ‘நாணயம்', ‘குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்', ‘ஆரண்ய காண்டம்' என அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். நிறைய நண்பர்களும், படங்களில் பணியாற்றுவதற்கு அழைத்தனர். மீண்டும் வெங்கட் பிரபு இயக்கிய ‘சரோஜா' படத்தில் வேலை பார்த்தேன். அதுவரைக்கும் சிங்கப்பூரில் தான் இருந்தேன். ‘சரோஜா' படத்திற்கு மாநில அரசின் விருது கிடைத்தது. அந்த விருது எனக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், சினிமாவிற்குள் வர வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்கியது. பிறகு நிரந்தரமாக சென்னைக்கு வந்துவிட்டேன். ‘சென்னை 28' படத்தில் வேலைபார்த்த பிறகு, நான் கேட்ட இரண்டாவது கதை ‘ஆரண்ய காண்டம்'. ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வருவதற்குள் நான் எட்டுப் படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிவிட்டேன்.

ஆரண்யகாண்டத்துக்கு எட்டு மாதங்கள் படத்தொகுப்புப் பணி மட்டும் நடைபெற்றது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் வெளியான அடுத்த வாரத்திலேயே தியேட்டரிலிருந்து எடுத்துவிட்டனர். இதனால் படக்குழுவினருக்குப் பெரிய மனவருத்தம். படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து படத்தொகுப்பிற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது பெரிய ஆறுதலாக இருந்தது.

தேசிய விருது வாங்கிய பிறகு பாலுமகேந்திராவை சென்று சந்தித்தேன். ‘என்னுடைய ஸ்கூல்ல இருந்து போன இரண்டு பிள்ளைகள் தேசிய விருது வாங்கியிருப்பது மிகப்பெரிய சந்தோஷம்' என்று சந்தோஷப்பட்டார். அப்போது வெற்றிமாறனும் தேசிய விருது வாங்கியிருந்தார். விருது பெற்ற போது எனக்கு 31 வயது. விருது பெற்றது, நிறைய நல்ல படங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் கொடுத்தது.

இயக்குநர்களிடம் கதை கேட்கும்போது அதில் எதாவது ஒரு விஷயம் பிடித்திருந்தால் பட்ஜெட் பற்றியெல்லாம் யோசிக்கமாட்டேன், படத்தில் பணியாற்ற ஒப்புக்கொள்வேன். ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் பணியாற்றும் போது ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் படத்தொகுப்பை முடித்துக் கொடுக்க வேண்டும். அவர்களின் படங்கள் கோடிக்கணக்கான முதலீடு என்பதால், அந்த சமயத்தில் வேறு எந்த வேலைகளையும் வைத்துகொள்ளாமல், அந்தப் படத்தின் வேலைகளை மட்டும் பார்ப்பேன்.

இப்போது மாநாடு எனக்கு நூறாவது படம். வெங்கட் பிரபுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. அவர் எந்த கதை எழுதினாலும், என்னிடம் தான் முதலில் சொல்வார். அப்படி ஒரு கதை சொன்னார். படம் தொடங்கிய முதல் நாற்பது நிமிடத்தில் ஹீரோ இறந்துவிடுவார் என்றார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. எனக்கு அது ‘டைம் லூப்' கதை என்று தெரியாது. வெங்கட் பிரபு கதையை முழுமையாகச் சொல்லி முடித்ததும், கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. படத்திற்குள் சிம்பு இணைந்த பிறகு படம் அடுத்த தளத்திற்கு சென்றது.

டைம் - லூப் கதை என்பதால், கதை குழம்பினால், படம் ஓடாது. இதனால், தொடக்கத்திலிருந்தே படப்பிடிப்பைக் கவனமாக நடத்தினோம். அதேபோல், படத்தொகுப்பிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. வழக்கமாக ஒரு படத்தை எடிட் செய்வதற்கு எனக்கு அறுபது நாட்கள் ஆகும் என்றால், மாநாடு படத்திற்கு தொண்ணூறு நாட்கள் ஆனது. கூடுதலான அந்த முப்பது நாட்கள், படத்தில் என்ன குழப்பங்கள் உள்ளன? அது எதனால் ஏற்படுகிறது? என்பதைக் கண்டறிந்து வெட்டி எடுப்பதற்கு மட்டுமே தேவைப்பட்டது. படத்தொகுப்பாளர் என்பதைத் தாண்டி ஒன்றிரண்டு படங்களாவது இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நிறையப் படங்களுக்கான கதையைக் கேட்டதால் வந்த தைரியம் இது. ஒரு படத்திற்கான கதையை இரண்டு வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு நிச்சயம் படப்பிடிப்பிற்கு சென்றுவிடுவேன்.' என்றார் நம்பிக்கையுடன். நல்வரவு!

ஜனவரி, 2022