திரை நேர்காணல்

விமல் என்னோடு நடிக்காவிட்டால் நஷ்டமில்லை!

அ.தமிழன்பன்

களவாணி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஒவியா, அதன்பின் முத்துக்கு முத்தாக, மெரினா ஆகிய இரண்டு படங்களில் கதாநாயகியாகவும் மன்மதன் அம்பு படத்தில் கௌரவத் தோற்றத்திலும் நடித்திருந்தார். கலகலப்பு படத்தில் அஞ்சலிக்கும் அவருக்கும் நடந்த கவர்ச்சிப் போட்டியில் ஓவியாவுக்குத்தான் முதலிடம் என்று எல்லோருமே சொல்கிற அளவுக்குக் கவர்ச்சி காட்டியிருந்தார் ஒவியா. இப்போது விமலுடன் அவர் ஜோடிசேர்ந்திருக்கும்  சில்லுனு ஒரு சந்திப்பு வெளிவர-விருக்கிறது. தமிழில் நான்கு படங்கள் மட்டுமே நடித்-திருந்-தாலும் அவரைப் பற்றி, நிறையப் படங்களில் நடித்தவர்-களுக்கு வருகிற அளவு நேர்மறை மற்றும் எதிர்-மறைச் செய்திகள் ஏராளமாக வந்துவிட்டன. அவரை அந்திமழைக்காகச் சந்தித்தோம்.

நீங்கள் நடித்த களவாணி, மெரினா, கலகலப்பு ஆகிய மூன்று படங்களுமே வெற்றிப்படங்கள் என்றபோதிலும் அதற்கேற்ப அடுத்தடுத்து நிறையப் படங்கள் வராமல் ஒவ்வொரு படத்துக்கும் பெரியஇடைவெளி இருக்கிறதே ஏன்?

என்னைத்தேடிவருகிற எல்லாப்படங்களையும் நான் ஒப்புக்கொள்வதில்லை. படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் நிதானமாக இருக்கிறேன். எனக்குக் கதை பிடிக்கவில்லையென்பதால் பெரியஹீரோக்களோடு நடிக்கக் கேட்டுவந்த படங்களையே நான் மறுத்திருக்கிறேன் தெரியுமா? ஆனால் அது எந்தப்படம் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.சொன்னால் வம்பாகிவிடும். 

களவாணி, முத்துக்குமுத்தாக,மெரினா ஆகிய படங்களில் பள்ளிச்சீருடை மற்றும் பாவாடைதாவணியில் நடித்த நீங்கள் கலகலப்பு படத்தில் கவர்ச்சியை அள்ளித் தெளித்திருந்தீர்களே?

என்னால் இப்படியும் நடிக்கமுடியும் என்று காட்டுவதற்காகவே அந்தப்படத்தில் அப்படி ஒரு வேடம் என்று சொன்னதும் ஏற்றுக்கொண்டு நடித்தேன்.அது எனக்குப் பரவலான வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது என்றபோதும்,உடனே அதுபோன்றே நடிக்கவேண்டும் என்று கேட்டுவந்தவற்றை நான் ஒப்புக்கொள்ளவில்லை.அதற்குக் காரணம் படத்துக்குப்படம் வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என நான் நினைப்பதுதான். நான் நல்ல நடிகை என்று பெயரெடுக்க ஆசைப்படுகிறேன் அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் வேண்டும்! 

இப்போது தமிழில்என்ன படம் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

இப்போது மூடர்கூடம் என்றொரு படத்தில் நடித்துமுடித்துவிட்டேன். நவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப்படத்தில் முழுக்க நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்தப்படத்தில் காதல் இல்லை. காதல் பாடல்கள் இல்லை. படம் முழுக்க சிரித்துக்கொண்டேயிருப்பீர்கள்.  இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையே கலகலப்பு படத்தின் தெலுங்கு மாற்றத்தில் நடிக்கவிருக்கிறேன்!

நான்கு படங்கள் வெளிவருவதற்குள் உங்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுகள் வந்துவிட்டன ஏன் அப்படி?

நடிக்க வந்த பிறகு இதுபோன்ற செய்திகள் வெளிவருவது மிகவும் இயல்பான ஒன்று என்பதை நான் புரிந்து கொண்டேன் அதனால் அதுபற்றி நான் எப்போதும் கவலைப்படவில்லை.

நன்றாகத் தமிழ்பேசக்கூடியவராக இருக்கும் நீங்கள் இன்னும் ஒரு படத்தில்கூடச் சொந்தக்குரலில் பேசவில்லையே?

தமிழ் நன்றாகப் பேசவந்தபோதும் இதுவரை ஒருவரும், என்னை டப்பிங் பேசிவிடுங்கள் என்று சொன்னதில்லை. ஆனால் இப்போது ஜீவி.பிரகாஷ் தயாரிக்கும் படத்தில் நான் மலையாளத்துப்பெண்ணாகவே நடிக்கிறேன். அதனால் படத்தில் மலையாளவாசனையுடன் தமிழ் பேசக் கூடியவளாக இருப்பேன். இது எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால், நான் டப்பிங் பேசுகிறேன் என்று கேட்டுக்கொண்டேன். இயக்குநரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

விமலுடன் உங்களை நெருக்கமாக வைத்துப் பேசினார்கள். ஆனால் உங்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே இனி ஓவியாவுடன்  நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரே?

அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும். அதனால் எனக்கொன்றும் நஷ்டமில்லை. நான்கூட அவருடன் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்திருக்கிறேன். ஒரே ஜோடி தொடர்ந்து நடித்தால் மக்களுக்குச் சலிப்பாகிவிடும் என்று எனக்குத் தோன்றியது.அதுமட்டுமின்றி விமல்,என்னுடன் நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதால் என்ன நடந்து விடப்போகிறது? எனக்கு வருகிற படங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. நான் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் அடுத்ததாக ஒரு படம் நடிக்கிறீர்களாமே?

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் நான் அதுபற்றி எதுவும் இப்போது சொல்லமுடியாதே...

-நன்றாக நழுவக் கற்றுக்கொண்டிருக்கிறார் ஓவியா.

பிப்ரவரி, 2013.