திரை நேர்காணல்

ரஞ்சித்தின் உதவி இயக்குநர் என்பதாலேயே நிறைய தயாரிப்பாளர்கள் கதை கேட்க முன்வரவில்லை!

தா.பிரகாஷ்

'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'  ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த நீலம் நிறுவனம்,  தற்போது ஐந்து திரைப்படங்களை தயாரித்து கொண்டிருக்கிறது. அதிலொரு படம் தான் 'ரைட்டர்'. இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ஃப்ராங்களின் ஜேக்கப்பை சந்தித்து உரையாடினோம்.

 ‘‘எங்க ஸ்கூலை சுத்தி ஒரு எட்டு ஒன்பது தியேட்டர் இருக்கும். வார வாரம் படத்துக்குப் போவதுதான் எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் வேலையே. எங்களுடைய ரிவியூக்காக மொத்தப் பேரும் காத்திருப்பாங்க. படம் நல்லா இருந்ததுன்னு சொன்னா போதும் அடுத்த நாளே மொத்த பேரும் படத்துக்கு கிளாம்பிடுவாங்க. அதேபோல, என் வீட்டை சுத்தியும் தியேட்டர்தான். சொல்லப்போனால் நான் தியோட்டரை சுத்தி தான் வளர்ந்தேன்'' என்றார் சிரித்துக் கொண்டே.  ஃப்ராங்களின் ஜேக்கப்புக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருச்சி திருவெறும்பூரில் பிறந்தவர் ஃப்ராங்களின். அப்பா ராணுவத்தில் பணியாற்றியவர், அம்மா அங்கன்வாடி டீச்சர். ‘‘நான் ஐடிஐ வரை தான் படிச்சேன். சின்ன வயசிலேயே நிறைய சினிமா பாத்ததால சினிமா மேல ஒரு காதல் வந்துச்சி. அப்பாவுக்கு சினிமா பாக்க பிடிக்காது என்பதால, அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்மாவே என்னை சினிமாவுக்கு கூட்டிட்டுப் போவாங்க. அம்மாவுக்கு சினிமா பாக்க ரொம்ப பிடிக்கும்.

 என்னுடைய அம்மா வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில் ஒரு நூலகம் இருந்தது. அங்கிருந்து சுஜாதா, சாண்டில்யன், ரமணிசந்திரன் ஆகியோரது புத்தகங்களை அம்மா படிப்பதற்காக வீட்டுக்கு கொண்டு வருவாங்க. அவங்களுடன் சேர்ந்து நானும் அந்த புத்தகங்களைப் படித்துவிடுவேன். அதேமாதிரி, அப்பா திராவிடக் கழக பற்றாளர். அது தொடர்பான புத்தகங்களை, செய்தித்தாளைப் படிப்பார். குமுதம், விகடன் போன்ற வார மற்றும் மாத இதழ்களும் எங்க வீட்டுக்கு வரும். அதனால இந்த புத்தகங்களை நானும் படிக்க ஆரம்பித்தேன். திருவெறும்பூர் தொழில் நகரம் என்பதால், இடதுசாரி மற்றும் திராவிட கழகத்தின் பங்கு அங்கு அதிகமா இருந்தது. இடதுசாரிகள் வீதி நாடகம் போடுவார்கள். அந்த நாடகங்களைப் பார்க்க  அப்பா என்னைய கூட்டிக்கிட்டு போவார். இப்படி தான் என் வாசிப்பு பயணம் தொடங்கியது. தீவிர இலக்கியம் பக்கம் திரும்பிய காலம் என்றால் அது அட்டக்கத்தியில் வேலை பார்த்த போதுதான். அப்போது தான் ரஷ்ய இலக்கியம், லத்தீன் அமெரிக்க இலக்கியம், ஐரோப்பிய மற்றும் அரபு இலக்கியங்களை வாசிக்க தொடங்கினேன்.

அப்போ என்னோட நண்பன்  பிரின்ஸ் ரான்சன் ஜோனாஸ் சினிமால இருந்ததால, தைரியமா 23 வயசிலேயே சென்னை வந்துட்டேன். சினிமா சம்பந்தமா எதாவது ஒண்ணு கத்துக்கணும்னு நினைத்து அனிமேஷன் படித்தேன். அதன் பிறகு சி.வி.குமார் சார்கிட்ட உதவி இயக்குநராக சேர்ந்தேன். அப்போ அவர் தயாரித்த திரைப்படம் ட்ராப் ஆனதால், அவருடைய டிராவல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே உதவி இயக்குநராக சேர்வதற்கும், விஜய் டிவியில் பகுதி நேரமாக சில வேலைகளையும் செய்தேன்'' என்ற ஃப்ராங்களின் தொடர்ந்து ஆர்வமாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘உதவி இயக்குநராக வேலை பார்த்தபோது செலவுக்கெல்லாம் அம்மா தான் பணம் கொடுத்து அனுப்புவாங்க. இதற்கிடையே வி.சேகர்கிட்ட ‘சரவண பொய்கை' என்ற படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன், அந்தப் படம் வெளியாகவில்லை. பெரிய போராட்டத்துக்குப் பிறகு தான் சி.வி குமார் மூலமாக இயக்குநர் ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவரிடம் போனபோதுதான் சினிமா பற்றியும், வாசிப்பு குறித்த  பார்வையும் மாற ஆரம்பித்தது. அதேபோல் ஒளிப்பதிவாளர் முரளி புனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர் என்பதால் அடிக்கடி வந்து வகுப்பெடுப்பார். இவர்களிடமிருந்துதான் நான் முழுமையாக சினிமாவைக் கற்றுக் கொண்டேன். 2011ஆம் ஆண்டிலிருண்டு 2015ஆம் ஆண்டு வரை ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக வேலைபார்த்தேன்'' என்றவர் தான் திரைக்கதை எப்படி எழுதினேன் என்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘ திரைக்கதை என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதுதான் திரைப்படம் எடுப்பதில் உள்ள முதல் சவால். வெற்றி பெறக்கூடிய கதைக்களங்களை மட்டுமே தான் தமிழில் திரைப்படங்களை எடுக்க முடியும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி முதலில் ஒரு கதை எழுதி பலரிடம் சொன்னேன், யாரும் கண்டுக்கவே இல்லை. அதன் பின்னர் தான் இந்த கதையை எழுத ஆரம்பித்தேன். ஆனால், இந்த கதையை படமா எடுக்கப் போறமா? என்ற எண்ணம் அப்போ இல்லை. அது ஒரு போலீஸ் பற்றிய கதை என்பதால் நிறைய ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு சமகாலத்தில் நடந்த பல்வேறு விஷயங்கள் திரைக்கதை எழுதுவதற்கு உதவியாக இருந்தன.

தமிழில் போலீஸ் பற்றிய படம் என்றால் அது சாமி, சிங்கம் மாதிரியான கதைகள் தான் வந்திருக்கு. இந்த மாதிரியான போலீஸைத்தான் மக்கள் நாயகர்களாகப் பார்க்கின்றனர். இதில், கீழ்நிலை போலீஸாக உள்ளவர்களை மக்கள் தரக்குறைவாகப் பார்க்கும் நிலை உள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் கீழ்நிலை போலீஸ்கள் தான் எல்லாவிதமான பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் தான் மக்களிடம் நேரிடையாக தொடர்பில் உள்ளனர். இதனால் தான் கடைநிலை போலீஸ்களுக்கும் பொதுமக்களுக்கும் முரண்பாடு ஏற்படுகிறது.

விசாரணை திரைப்படம் போன்று போலீஸாரை எதிர்மறையாகவும், சாமி, சிங்கம் திரைப்படங்கள் போன்று நேர்மறையாகவும் பேசக்கூடாது என்பதை உணர்ந்து, காவல் துறையின் எதார்த்த நிலையைப் பேசவேண்டும் என்று நினைத்தேன். காவல் துறையிலேயே ஒடுக்கப்படும் காவலர்களும் இருக்கிறார்கள். இதில் முக்கியமானவர்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இருக்கும் ரைட்டர்கள். அப்படி ரைட்டர்களாக இருக்கக் கூடியவர்கள் யார்? அவர்கள் எந்த பின்புலத்தில் இருந்து வருகிறார்கள்? அதிகாரம் இல்லாமல் இருக்கும் காவலர்களைப் பற்றிப் பேசும் படம் தான் ரைட்டர்.

தினந்தோறும் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குச் சென்றுவிடுவேன். காலை முதல் மாலை வரை அங்கேயே இருப்பேன். நீதிமன்றத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை கவனிப்பேன். காவல் துறையினர் பயன்படுத்தும் சில முக்கியமான சொற்களை அப்போது கற்றுக் கொண்டேன். யாரும் என்னை எதுவும் கேட்கமாட்டார்கள், ஒவ்வொரு நாளும் ரொம்பா ஜாலியாக போகும். வழக்கறிஞர் மோகன், காவல் ஆய்வாளர் லாரன்ஸ், ஓய்வு பெற்ற சில காவலர்கள் பல்வேறு விஷயங்களை சொன் னார்கள். அவற்றையெல்லாம் அப்படியே யதார்த்தமாகக் கொண்டு வர முற்பட்டுள்ளேன்.'' என்றார்.

 ‘‘ இந்த கதை எழுதி முடித்தவுடன் சில தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொன்னேன்.  இப்படி இரண்டு இடத்தில் கதை சொல்லி ஒரு மாசம் கழித்து ரஞ்சித்  ஒரு நாள் அழைத்து  கதையை அனுப்பி வைக்கச்சொன்னார். கதையை படிச்சவர் பாராட்டினார். சில மாற்றங்கள் மட்டும் சொல்லி தயாரிக்க முன்வந்தார். அதன் பிறகு உடனடியாக படப்பிடிப்புக்குத் தயாரானோம். திரைக்கதையை இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்த சமுத்திரக்கனி  படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல், சுப்ரமணியன் சிவா, இனியா, லிஸ்சி, மகேஷ்வரி, மேற்குத் தொடர்ச்சி மலையில் நடித்த ஆண்டனி, ஹரி, மெட்ராஸ் படத்தில் நடித்த ஜானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் ஃபோஸ்டருக்கு அதிக வரவேற்பு கிடைத்தற்கு கபிலனுக்கு முக்கிய பங்குண்டு. அதேபோல், படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடலை கவிஞர்கள் யுகபாரதி, முத்துவேல் எழுதியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவாளர் பிரதீப். படத்தொகுப்பாளர் மணிகண்டன். படத்தின் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை பார்த்தனர். இதனால் தான் படத்தின் படப்பிடிப்பை 35 நாட்களில் முடிக்க முடிந்தது'' என்றார்.

இறுதியாகப் பேசுகையில், ‘‘ரஞ்சித்தின் உதவி இயக்குநர் என்பதாலேயே நிறையத் தயாரிப்பாளர்கள் கதை கேட்க முன்வரவில்லை. கடுமையாக நிராகரிக்கப்பட்டேன். ஒடுக்குமுறைக்கு எதிராக இருக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் செவிசாய்க்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இன்றைய தேவை அம்பேத்கரியமா? பெரியாரியமா? மார்க்சியமா?னு  விவாதம் போயிகிட்டு இருக்கு. இது தேவையில்லாது ஒன்று. இந்த மூன்று சக்திகளுமே ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். எந்தவிதமான ஒடுக்குமுறையாக இருந்தாலுமே அதை எதிர்க்கவேண்டும், என்பதைத்தான் இந்த மூன்று சித்தாந்தங்களுமே முன்மொழிகின்றன,'' என்கிறார் பொறுப்புடன்.

மே 2021