வழக்கு எண் படத்தில் அப்பாவி இளைஞனாக கவனம் குவித்தவர் ஸ்ரீ. ஓநாயும் ஆட்டுக் குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு என்று தேர்ந்தெடுத்து நடிப்பவர். மாநகரம் படத்தில் சென்னைக்கு வேலை தேடி வரும் ஐடி இளைஞனாகப் பொருந்தியிருக்கிறார். வெவ்வேறு பின்புலம் கொண்ட நான்கு மனிதர்கள், கியோஸ் தியரிப்படி ஒருவரின் செயலால் மற்றவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை சென்னை நகரோடு பிணைத்து அட்டகாசமாக தந்திருக்கிறார்கள். மாநகரம் படத்தின் வெற்றியில் உற்சாகமாயிருக்கும் ஸ்ரீயுடன் அந்திமழைக்காக உரையாடினோம்.
விஸ்காம் முடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பை மீறி திரைத் துறையில் நுழைந்திருக்கிறார் ஸ்ரீ. கல்லூரி காலத்தில் மிமிக்ரி செய்ததில் தொடங்கிய இவரது ஆர்வம் தெரு நாடகங்கள், மைம் என்று நடிப்பிற்கான வாசலை திறந்துவிட்டிருக்கிறது. படிக்கும்போது இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிடாமல் ஏற்றுக் கொண்டு விட்டார். முதலில் பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார். நண்பர்களின் வற்புறுத்தலால் கலந்து கொண்டவர் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதேபோல் கல்லூரி படத்திற்கு அவர் தேர்வு செய்யப்படவுமில்லை. அதைப் பற்றி கவலைப்படாமல் கனா காணும் காலங்கள் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கப் போய் விட்டார் ஸ்ரீ.
ஆனால் ஸ்ரீ எதிர்பாராத விஷயம் ஒன்று நடந்தது. ‘வழக்கு எண்’ படத்திற்காக பாலாஜி சக்திவேலில் அழைப்பு அது. கல்லூரிக்காக முயற்சித்தவர் வழக்கு எண் வாய்ப்பை அள்ளிக் கொண்டார். வழக்கு எண் நீண்ட காலம் எடுத்துக் கொண்ட படம். படத்திற்காக அடித்தட்டு மக்களின் வாழ்கையையும், அவர்களின் உடல் மொழியையும் நேரடியாக கவனித்து உள் வாங்கியிருக்கிறார் ஸ்ரீ. வழக்கு எண் சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்தது. ஆனால் அதன் பிறகு உடனடியாக அடுத்த படத்திற்கு தயாராகவில்லை ஸ்ரீ. ‘ வழக்கு எண்ணிற்கு பிறகு ஏறக்குறைய 60 கதைகளை கேட்டிருப்பேன். ஆனால் எதுவுமே எனக்கு சரியாக வருகிற மாதிரி தெரியவில்லை. ஏற்கெனவே செய்த படத்தின் சாயலிலேயே நிறைய வந்தது. சில கதைகளுக்கு ஹீரோ தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் சரி, நமக்கு நடிப்பு அவ்வளவு தான். வேறு வேலை பார்க்க போகலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன். இ- பப்ளிசிங் நிறுவனத்தில் வேலைக்கு போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்’ அந்த சமயத்தில் இரண்டாவது முறையாக இவரின் வாழ்வில் முக்கியமான தொலைபேசி அழைப்பு வருகிறது. இம்முறை இயக்குநர் மிஷ்கினிடமிருந்து.
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் முழு கதையையும் மிஷ்கின் சார் என்னிடம் சொன்னார். அதற்கடுத்த வாரத்தில் படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் இரண்டு பெரிய ஸ்பைரல் வால்யூமாக கொடுத்து விட்டார். படித்த பிறகு முதலில் பயம் தான் வந்தது. படத்தின் பிற்பகுதியில் சில காட்சிகள் அதி தீவிரத்தன்மையுடன் இருந்தது. என்னால் அதைச் சரியாக செய்ய முடியுமா என்ற பயமும் இருந்தது. மிஷ்கின் சாரிடம் இதை சொன்னேன். அவர்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்’ என்கிற ஸ்ரீ முதல் இரண்டு படங்களும் தனக்கு மிக முக்கியமான படங்களாகக் கருதுகிறார். வழக்கு எண் ஆரம்பிக்கும்போது பாலாஜி சக்திவேல், ‘ கேரக்டருக்கு உங்களை தயார்ப்படுத்திக் கொள்ள ஹோட்டல்களில் சென்று வேலை செய்ய வேண்டியிருக்கும். ரிகர்சல் பார்க்க வேண்டியிருக்கும். அப்படி செய்யும்போது ஏற்கெனவே டிவியில் செய்த கேரக்டர் தானாக வெளியே போய்விடும்’ என்று சொல்லியிருக்கிறார். அதே போல ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கான வழ வழ முகத்துடன் மெடிக்கல் காலேஜ் பையனாக ரிகர்சல் செய்யும்போது முந்தைய பட கேரக்டர் வெளியேறிவிடும் என்று மிஷ்கினும் சொல்லியிருக்கிறார்.
இதுவரை நடித்த ஐந்து படங்களிலும் மிகவும் சீரியசான கதாபாத்திரத்தையே ஏற்று நடித்திருக்கிறார் ஸ்ரீ. வழக்கமான காதல், கல்லூரி இளைஞன் கதாபாத்திரங்கள் வருவதில்லையா, அல்லது சீரியசான கதாபாத்திரங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறாரா என்பதற்கு, ‘ ஸ்கிரிப்ட்டை தேர்ந்தெடுப்பதில் நான் அதிக கவனம் செலுத்துவேன். கொஞ்சம் அதிக காலமும் எடுத்துக் கொள்வேன். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் தான் நடிப்பேன் என்று சொல்வதில்லை. என்னிடம் வந்த கதைகளில் நல்ல கதைகள் இப்படி அமைந்துவிட்டது என்று சொல்லலாம். ஆனால் கிரைம் திரில்லர் படங்களாக வரிசையாக செய்து விட்டதாக இப்போது தோன்றுகிறது. இனி வரும் படங்களில் ஏற்கெனவே செய்த கதாபாத்திரங்களிலிருந்து வேறுபட்ட, வேறு விதமான கதைகளில் நடிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறேன்” என்கிறார் ஸ்ரீ.
ஒரு சமயத்தில் ஒரு படம் செய்தால் தான் அதில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும் என்பது ஸ்ரீயின் நம்பிக்கை. இனி வரும் படங்களிலும் வித்தியாசமான கதைக் களன்களுக்கான நாயகனாக உருவாகவேண்டும் என்பதே ஸ்ரீயின் விருப்பம்.
ஏப்ரல், 2017.