திரை நேர்காணல்

புறாக்களுக்குப் பயந்தேன்

டி.வி.எஸ்.சோமு

பாக்யராஜ் - பூர்ணிமா நட்சத்திர தம்பதியின் மகன், சாந்தனு, சுமார் இருபது வருடங்களுக்கு முன், ‘வேட்டிய மடிச்சுகட்டு' படத்தில், சுட்டிப் பையனாக அறிமுகமானார். 2008ல் ‘சக்கரகட்டி' படத்தில் ஹீரோவாக தோன்றி,  பல படங்களில் நடித்தவர் தற்போது  ‘மாஸ்டர்' படத்தில் நடித்து,  அதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்.

நடிப்பு, அதில் தனது எதிர்காலம், இயக்கம் குறித்தெல்லாம் தெளிவான தீர்மானங்களுடன் பேசுகிறார் சாந்தனு.

‘‘அப்பா , அம்மா இருவருமே முக்கிய நட்சத்திரங்கள் என்பதால், சிறு வயதில் இருந்தே திரையுலத்தின் மீது ஈடுபாடு இருந்தது. அந்த ஆசையில்தான், அப்பா சொன்னவுடனே, ‘வேட்டிய மடிச்சு கட்டு' படத்தில் நடிக்க ஆர்வமானேன். அப்பா, சொல்லிக் கொடுத்ததை செய்தேன்.

அந்தப் படப்பிடிப்பில் மறக்க முடியாத அனுபவம் ஒன்று உண்டு. ஒரு காட்சியில், ஏராளமான புறாக்கள் அமர்ந்திருக்க... அவற்றைக் கடந்து நான் செல்ல வேண்டும். புறாக்கள் கொத்திவிடுமோ என்கிற பயத்தில் பயந்தேன். நாம் நடந்து சென்றாலே புறாக்கள் பறந்து ஓடிவிடும் என்பது அப்போது தெரியாது. இதை அப்பா சொல்லியும் பயம் போகவில்லை. தயங்கித் தான் நடந்தேன். அப்பா சொன்னபடி புறாக்கள் ஓடிவிட, எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

பின்னர் ப்ளஸ் டூ படித்து முடித்தவுடனேயே, ‘சினிமாவுக்குத்தான் போவேன்' என்று அடம் பிடித்தேன்.

ஆனால் அம்மாவும் அப்பாவும், ‘ ஏதாவது ஒரு டிகிரி படி. பிறகுதான் சினிமா!' என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள்.

ப்ளஸ் டூவில் எகனாமிக்ஸில் 91 சதவிகிதம் மார்க் வாங்கியிருந்தேன். ஆகவே லயோலாவில், அதே துறையில் எளிதாக சீட் கிடைத்தது. பாடங்கள் எனக்கு கடினமானதாக இல்லை.

ஆகவே நடிப்பு உள்ளிட்ட இதர விசயங்களில் என்னால் கவனம் செலுத்த முடிந்தது. கூத்துப் பட்டறையில் இணைந்து நடிப்பு பயிற்சி மேற்கொண்டேன்.

‘மிருகம்' படத்தில் அறிமுகமான ஆதி, ‘மணல் கயிறு & 2'ல் நடித்த அஸ்வின் சேகர், ‘நெடுஞ்சாலை' ஆரி ஆகியோரும் கூத்துப்பட்டறையில் என்னுடன் பயிற்சி பெற்றனர். இங்கு ஏற்கெனவே பயிற்சி பெற்ற நடிகர் பசுபதி உள்ளிட்டோரும் வகுப்பு எடுத்தனர்.

அப்போது அங்கு, ‘கலிலியோ' என்ற ஆங்கில நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து நாடகம் நடந்தது. அதில் நான்தான் கலிலியோ. நாடகம் முழுதும் தூய தமிழில் பேச வேண்டும்.

நாடகத்தைப் பார்க்க அப்பா வரமுடியாது என்று சொல்லிவிட்டார். அவர், ‘‘நீ சொதப்பிவிட்டால் எனக்கு மனசு கஷ்டமாயிடும்!'' என்றார்.

‘‘நீங்க வந்தாத்தான் நடிப்பேன்!'' என்று உறுதியாக

சொல்லிவிட்டேன். ஆகவே நாடகம் துவங்கியவுடன், சத்தம்போடாமல், கடைசி வரிசையில் வந்து அமர்ந்து, பார்த்தார்.  அவர், ‘‘நான் பயந்தது மாதிரி இல்லாம, அசத்திட்டே!'' என்று பாராட்டினார். அந்த பாராட்டை மறக்கவே முடியாது.

2008ல், ‘சக்கரகட்டி' படத்தில் ஹீரோவாக அறிமுகமானேன். தொடர்ந்து ‘அம்மாவின் கைபேசி' உள்ளிட்ட படங்களில் நடித்தேன். அப்போது என்னிடம் மாற்ற வேண்டிய ஒன்று இருப்பதை உணர்ந்தேன்.

சாதாரணமாகவே நான் சத்தமாக பேசுவேன். நாடகப் பயிற்சி எடுத்ததால், திரைப்படங்களிலும்

சத்தமாக பேசுவது தொடர்ந்தது. நாடகத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக அப்படி பேசுவது வழக்கம்.

அடுத்து, ஓவர் ஆக்டிங். நாடகத்துக்கு அது தேவை. குரலைப் போலவே, உடல் அசைவும், தூரத்தில் உள்ளவர்களுக்குத் தெரிய வேண்டும் அல்லவா.. அதற்காக அப்படிச் செய்வார்கள். இவை, சினிமாவில் அது தேவையில்லை என்பதை உணர்ந்தேன்.

இதற்காக நாடகத்தை குறைத்துச் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால், சினிமாவுக்கு வருபவர்கள், நாடகப் பயிற்சி முடித்து வந்தால் கூடுதல் பலம் என்பதே என் கருத்து. இதை அனுபவபூர்வமா உணர்ந்திருக்கிறேன். இதை உணர்ந்த பிறகு, ‘கோடிட்ட இடங்கள்' உள்ளிட்ட பல படங்களில் இயல்பாக நடித்தேன்.

 தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும், ‘மாஸ்டர்' உள்ளிட்ட படங்களின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அடுத்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ‘ராவண கோட்டம்', சுதா கொங்கரா இயக்கத்தில் புதியப டம் என்று திரைப்பயணம் தொடர்கிறது.

ஸ்ரீஜர் இயக்கும், ‘முருங்கைக்காய் சிப்ஸ்' படத்திலும் ஹீரோவாக நடிக்கிறேன். அப்பாவின், ‘முந்தானை முடிச்சு' படத்தில் வரும் முருங்கைக்காய் காட்சி மிகவும் பிரபலம். ஆனால் அதற்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு உண்டா இல்லையா என்பதை இப்போது சொல்வது சரியாக இருக்காது. அதை வெள்ளித் திரையில் காண்க! (சிரிக்கிறார்.) நடிப்பு என்பதோடு, இயக்கத்திலும் எனக்கு ஆர்வம் உண்டு.

2005ல், அப்பா இயக்கிய, ‘பாரிஜாதம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பாடல்களுக்கு ஆக்டிங் டைரக்டராக இருந்தேன். அதெல்லாம் சிறப்பான அனுபவங்களைக் கொடுத்தன.

தவிர, விஜய், ‘‘உன் அப்பா பெரிய இயக்குநர்.. அதற்கும் முயற்சி செய்யலாமே!'' என்பார். அதே போல தனுஷ், ‘‘ எழுதவும் முயற்சிக்கலாமே!'' என்பார். இதையெல்லாம் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால், இயக்கம் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒட்டுமொத்த படத்தை & அதன் அத்தனை பிரிவுகளை கண்ட்ரோல் செய்யும் பணி. ஆகவே தற்போதைக்கு அந்த ஐடியா இல்லை... நடிப்புதான்!

அதே நேரம், இந்த ஊரடங்கு காலத்தில்

வீடடங்கிக் கிடக்கிறோம். ஆகவே வீட்டிலேயே ஒரு குறும்படத்தை இயக்கி நடிக்கலாமே என்று தோன்றியது. அதில் நானும் என் மனைவி கீர்த்தியும் மட்டும் நடிக்கலாம் என முடிவு செய்தேன். குடும்பத்தினருக்குள் சமூக இடைவெளி தேவையில்லை அல்லவா? (சிரிக்கிறார்)

ஐ போன் கொண்டு எடுக்கப்பட்ட ‘கொஞ்சம் கொரோனா கொஞ்சம் காதல்' என்ற அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது மகிழ்ச்சி. ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பது, இருக்கும் பொருட்களை கொண்டு சிக்கனமாக வாழ்க்கையை நடத்துவது, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உதவுவது போன்ற விஷயங்களைப் பற்றி அந்தப் படத்தில் சொல்லியருப்பதை பலரும் பாராட்டினார்கள்.

கீர்த்தி என்றவுடன் நினைவுக்கு வருகிறது. பள்ளி காலத்தில் துவங்கிய காதல், கல்லூரி பருவத்திலும் தொடர்ந்து, நட்சத்திரங்களான பிறகும் நீண்டு திருமணத்தில் நிறைந்தது.

சிலர், ‘‘திரைப்பட நட்சத்திரங்கள், தங்கள் காதலை மறைத்தே வருகிறார்களே! செய்தியாளர்கள் கேட்கும்போதெல்லாம், ‘அப்படி ஏதும் இல்லையே!' என அப்பாவியாக சொல்லி ஏமாற்றுகிறார்களே!'' என்று கேட்கிறார்கள்.

இதில் ஏமாற்ற ஒன்றுமில்லை. செய்தியாளர்கள் சிலர், என்னிடம் நல்ல முறையில் பேசிவிட்டு, செய்தியை பரபரப்புக்காக மாற்றி வெளியிட்டு விடுகிறார்கள்.

சமீபத்தில், ‘மாஸ்டர்' படத்தைப் பற்றிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். ‘‘இந்த படத்தில் உங்களுக்கு என்ன ரோல்?‘‘ என்று கேட்டார்கள். அதைச் சொல்வது முறையில்லை என்பதால் அந்தக் கேள்வியைத் தவிர்த்தேன். மீண்டும் மீண்டும், ‘‘உங்களுக்கு முக்கியமான ரோலா.. எந்த மாதிரி ரோல்..?‘‘ என்று கேட்டார்கள்.

வேறு வழியே இன்றி, ‘‘இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது படங்களில் எல்லா கதாபாத்திரங்களுக்குமே முக்கியத்துவம் தருவார். அப்படி ஒரு ரோல் எனக்கு!'' என்றுதான் சொன்னேன். ஆனால் டிவி ப்ரமோவில், ‘‘நான் இல்லை என்றால், ‘மாஸ்டர்' படமே இல்லை!

சாந்தனு அதிரடி!'' என்று வெளியிட்டார்கள்.

இதனால்தான் செய்தியாளர்களிடம் பேசவே, டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ திரையுலகினர் யோசிக்கிறார்கள். இதற்காக அவர்களை குறை சொல்லவில்லை. எதார்த்தம் அப்படி இருக்கிறது.

‘பெரிய திரை ஆளுமைகளின் மகன் என்பது பாஸிடிவா, நெகடிவா' என்பது காலம் காலமாக எழும் கேள்வி. இரண்டும் இருக்கிறது. அதாவது எண்ட்ரி எளிது. ஆனால் அதை தக்கவைப்பது அவரவர் திறமையில்தான் இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை வேறுவிதமான அனுபவம். என் அப்பா நடிகர் மட்டுமின்றி பெரிய இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர். அதனால், என்னை நடிக்க வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், அணுகுவதற்கு தயங்குவார்கள். முக்கியமான சில படங்களில் நான் நடிக்க வேண்டியது அப்படி தடைபட்டன.

சில சமயங்களில் கதை கேட்டும் ஏதோ காரணங்களால் நடிக்க முடியாமல் போனது உண்டு. அப்போது புது இயக்குநர்கள் சிலர், ‘பாக்யராஜ், கதையை மாற்றுகிறார்!'' என்று கூற, வேறு சிலியக்குநர்களும் என்னை அணுக தயங்கினர்.

அதனால் நான் மட்டுமே கதை கேட்க ஆரம்பித்தேன். இப்போது அனைவரும் புரிந்துகொண்டார்கள்.

ஆனால் வாழ்க்கை முழுதுமே போராட்டங்கள்தான். அதன் ஒவ்வொரு கட்டத்தையும் போராடித்தான் வெற்றி பெறவேண்டும். ‘வேட்டிய மடிச்சு கட்டு' படத்தில் புறாக்களைப் பார்த்து தயங்கியதைச்  சொன்னேன்அல்லவா? ஆனால் நாம் நடக்க நடக்க, புறாக்கள் பறந்தோடிவிடும். அப்படித்தான்

சவால்களும்! அவற்றை எதிர்கொண்டால், வெற்றி நிச்சயம்! ஆம்.. சவால்களை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன்!'' முடிக்கிறார் சாந்தனு.

ஆகஸ்ட், 2020.