இயக்குநர் பா.ரஞ்சித்தின் விருப்பமான படத்தொகுப்பாளர். பரியேறும் பெருமாள், கர்ணன், சார்பட்டா, நட்சத்திரம் நகர்கிறது, வீட்ல விஷேசம் போன்ற ஹிட் படங்களின் மூலம் கவனம் பெற்றவர். மாமன்னன், தங்கலான், பொம்மை நாயகி உள்ளிட்ட அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருப்பவர் படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா. அவரை மாலை நேரம் ஒன்றில் சந்தித்துப் பேசினோம்.
‘வீட்டில் அப்பா தூங்கிட்ட பிறகு, நானும் அம்மாவும் நடுஇரவு வரை படம் பார்ப்போம். அம்மாவுடன் சேர்ந்து பார்த்த படங்கள் நிறைய. தியேட்டருக்கு சென்று படம் பார்த்தபோதுதான் ஒருவித பிரமிப்பு ஏற்பட்டது. ரஜினி சார் நடித்த ‘அண்ணாமலை' படத்திற்கு ரசிகர்கள் செய்த ஆரவாரம் இன்றும் நினைவிருக்கிறது. சோர்வாக இருக்கும் போதெல்லாம் படங்கள் தான் எனக்கு புத்துணர்ச்சி பானங்கள் போல...' என பேச்சைத் தொடங்கினார் ஆர்.கே.செல்வா ‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை அயனாவரம் தான். இப்போது குடும்பத்துடன் வடபழனியில் வாசம். சிறு வயதிலிருந்தே எதன் மீதும் பெரிய விருப்பம் இருந்ததில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் ஐஐடியில் சேரவேண்டும் என நினைத்தேன். அதற்காக கோச்சிங் எல்லாம் சென்றேன். ஐஐடி தேர்வில், ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததால் அங்கு சேரமுடியவில்லை. அதனால், அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கலாம் என நினைத்தேன், அங்கும் சீட் கிடைக்கவில்லை. வேறு எதாவது படிக்கலாம் என்ற விருப்பத்தில், சிறந்த கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டியலைத் தயார் செய்தேன். அதில் லயோலா கல்லூரியும் ஒன்று. அங்கு பி.எஸ்ஸி., கம்பியூட்டர் சயின்ஸ், பி.எஸ்ஸி., விஸ்காம் படிப்புகளுக்கு விண்ணப்பித்தேன். விஸ்காம் கிடைத்தது.
கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தபோது, சிறு வயதிலிருந்த சினிமா மீதான ஆர்வம் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. கூடவே ஐஐடி கனவும். காலம் செல்ல செல்ல அங்கு சந்தித்த மனிதர்கள், புதிய பழக்க வழக்கங்கள் சினிமா மீதான ஆர்வத்தை மட்டும் அதிகப்படுத்தியது.
கல்லூரி மூன்றாவது வருடத்தில் இயக்குநர், ஒளிப்பதிவாளர் என யாரிடமாவது இன்டர்ன்ஷிப் செல்லலாம் என நினைத்து சிலரைச் சென்று சந்தித்தேன். நான் விரும்பியது நடக்கவில்லை. நண்பர் ஒருவரின் உதவியால் படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீனிடம் இன்டர்ன்ஷிப் சென்றேன். அப்போது படத்தொகுப்பு என்றால் என்னவென்றுக் கூடத்தெரியாது. படத்தொகுப்புப் பணிகளை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு விஷயம் மட்டும் தெரிந்தது, படம் முழுமையாகின்ற இடம் எடிட்டிங் டேபிளில் தான் என்று.
முதலில் படத்தொகுப்பாளர் ஆகலாம், பின்னர் இயக்குநர் ஆகலாம் என்ற யோசனையில் பிரவீன் சாரிடம் உதவி யாளராக சேர்வதற்கு வாய்ப்புக் கேட்டேன். கிடைத்தது. அந்த சமயத்தில் கல்லூரிப் படிப்பு முடியாததாலும், படத்தொகுப்பு பற்றி தெரியாததாலும் சில மாதங்கள் கழித்து சேர்ந்து கொள்கிறேன் என்றேன். அவரும் சரி என்றார்.
வீட்டில் இருந்தவாறே நிறைய வீடியோக்கள் பார்த்து படத்தொகுப்பு பற்றி கற்றுக் கொண்டேன். கல்லூரியில் எடுத்த ஒரு குறும்படத்தை ஆறு விதமாக எடிட் செய்தேன். அது ஒரு மேஜிக் மாதிரி இருந்தது. அதேபோல், சிறந்த இயக்குநர்களாக அறியப்படுபவர்கள் எல்லாம் படத்தொகுப்பாளராக இருந்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் பிரவீன் சாரை சென்று சந்தித்தேன். அவரிடம் போதுமான உதவியாளர்கள் இருந்ததால், பிறகு பார்க்கலாம் என்றார். பிறகு இரண்டு மாதங்கள் கழித்து, அவரிடமே உதவியாளராகச் சேர்ந்தேன். அங்கிருந்த ஸ்ரீகாந்த்
சார் என்னை இரவில் பணிக்கு வர சொல்லியிருந்தார். பகல் நேரத்தில் முடிக்க முடியாமல் போன பணிகளை இரவில் முடித்துவைப்பேன். இன்றும் இரவு நேரத்தில் தான் படத்தொகுப்புப் பணிகளை செய்கிறேன்.
வேலைக்கு சேர்ந்த நான்கைந்து மாதங்கள் கழித்து, பகல் நேரத்தில் அலுவலகத்திற்கு சென்ற போது ‘டேய் என்னடா உன்னை ஆளயே காணோம்' என்றார் பிரவீன் சார். ‘சார் நான் இங்க தான் வேலைப் பாக்குறேன். நைட் எட்டு மணிக்கு வந்து காலையில் ஏழு மணிக்குத் தான் வீட்டுக்குப் போறேன்' என்றேன். ‘அப்போ நைட் வேலை முழுக்க நீ தான் செய்றீயா? நான் ஒரு வேலை சொல்றேன் அதைச் செய்' என்றார். அப்படித்தான் ‘அரவாண்' உள்ளிட்ட பத்துப் படங்களுக்கு மேல் உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர், ‘அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் பணியாற்றுவதற்கு என்னை தனியாக அனுப்பி வைத்தார். மற்றொரு இணை படத்தொகுப்பாளர் வருவதாக இருந்தது. அவர் வரவில்லை. நானே அந்தப் படத்தின் அனைத்து வேலைகளையும் செய்தேன். அதனைத் தொடர்ந்து ‘பிரியாணி', ‘மெட்ராஸ்' போன்ற படங்களில் இணை படத்தொகுப்பாளராகப் பணியாற்றினேன்.
பிரவீன் சார் அலுவலகத்திற்கு எப்போது வந்தாலும் அவரிடம் சந்தேகம் கேட்காமல் இருக்கமாட்டேன். அவர் வந்தவுடனே சொல்லிவிடுவார் ‘டேய் சந்தேகம் எதுவும் கேட்காத‘ என்று. அவரிடம் கேட்ட சந்தேகங் களும், அனைத்து வேலைகளையும் நானே செய்த அனுபவமும் நான் படத்தொகுப்பாளராக ஆன போது கைகொடுத்தது.' என்றவர் உற்சாகம் குறையாமல் படத்தொகுப்பாளர் ஆன கதை சொல்லத் தொடங்கினார்.
‘அலெக்ஸ் பாண்டியன்‘ படத்தில் வரும் ‘பேட் பாய்ஸ்‘ பாடலை நான் எடிட் செய்திருந்ததால் இயக்குநர் சுராஜ் சாரை தெரியும். திடீரென ஒருநாள் என்னைப் பற்றி கேட்டவர் ‘பேட் பாய்ஸ் பாட்டை நாங்க வேற மாதிரி எடுத்தோம், அதை நீ இன்னும் நல்லாக்கிட்ட. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நாம அடுத்த படத்தில் ஒர்க் பண்ணலாம்‘ என்றார். அவர் இயக்கிய ‘சகலகலா வல்லவன்‘ தான் என்னுடைய முதல் படம். எந்த சிரமும் இல்லாமல் படத்தின் பணிகளை நிறைவு செய்தேன். ஆனால் முடித்த வேலையை சரிபார்ப்பதற்கு யாரும் இல்லாதது கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது.
முதல் படமே எதிர்பார்த்த அளவிற்கு கவனம் பெறாமல் போனது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், அடுத் தடுத்து ‘ராஜா மந்திரி', ‘இவன் தந்திரன்', ‘காலக்கூத்து' போன்ற படங்களில் பணியாற்றினேன். மெட்ராஸ் படத்தில் இணை படத்தொகுப்பாளராக வேலைப் பார்த்த சமயத்தில் ரஞ்சித் அண்ணாவுடன் பழக்கம் ஏற்பட்டது. ‘நீ நல்லா ஒர்க் பண்ற. நேரம் வரும்போது சேர்ந்து ஒர்க் பண்லாம்' எனச் சொல்லியிருந்தார். ஒருநாள் என்னை கூப்பிட்டு, ‘நீலம் புரடாக்சன்ஸ்ல முதல் படம் பண்ணப் போறோம், இதுதான் ஸ்கிரிப்ட், ரொம்ப எமோசனலான ஸ்கிரிப்ட், முழுசா படிச்சிட்டு சொல்லு' என்றார். ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு போய் ‘யார் அந்த அப்பா கேரக்டர் பண்ண போறாங்கன்னு' கேட்டேன். படத்தின் முழு ஸ்கிரிப்டும் படித்ததால் என்னால் ஈசியாக பரியேறும் பெருமாள் படத்தில் வேலைப் பார்க்க முடிந்தது. படத்தின் முதல் பதினைந்து நாள் படப்பிடிப்பு காட்சிகளை எடிட் செய்வதற்கு மாரிசெல்வராஜ் கொண்டு வந்திருந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் வீட்டுக்குப் போகாமல், தூங்காமல் கொள்ளாமல் எடிட் செய்தோம். மாரிக்கு முதல் படம் என்பதால் மிகுந்த பயத்துடன் இருந்தார். அவரின் பயம் எனக்கும் தொற்றிக் கொண்டதால் நுட்பமாக வேலை செய்யவேண்டியிருந்தது. எடிட் செய்த காட்சிகளைப் பார்த்த ராம் சார் பிரமித்துப் போனார். ரஞ்சித் அண்ணாவிடமும் காட்டினோம். அவர் வெகுவாக பாராட்டியதோடு, இந்தப் படம் பயங்கரமாக இருக்கும் என்றார். அது தான் படத்தின் முதல் பதினைந்து நிமிடக் காட்சி.
பரியேறும் பெருமாள் எதிர்பார்த்த மாதிரியே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவரை என் மீதிருந்த கமர்சியல் படத்தொகுப்பாளர் என்ற பிம்பத்தை துடைத்தெறிந்தது. அடுத்ததாக ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு‘ திரைப்படத்தில் வேலை பார்த்தேன். இந்த இரண்டு படங்களும் ரஞ்சித் அண்ணாவிற்குப் பிடித்திருந்தால் ‘சார்பட்டா‘ படத்தில் வேலைப் பார்க்க அழைத்தார்.
‘சார்பட்டா‘படத்திற்கு எடுத்த காட்சிகளை வைத்து சார்பட்டா -1, சார்பட்டா -2 என வெளியிட்டிருக்கலாம். அவ்வளவு காட்சிகள் எடுத்திருந்தனர். ஐந்து மணி நேர படத்தை மூன்று மணி நேரத்திற்கு குறைக்க ரொம்ப கஷ்டப்பட்டோம். எடுத்த எல்லா காட்சிகளும் படத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார் ரஞ்சித் அண்ணா. அதனால், படத்தின் எடிட்டிங் ஸ்டைலே வித்தியாசமாக இருக்கும்.
ஆர்யா (கபிலன்) குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி திரிவது போன்ற காட்சி வரும். அதை மட்டும் கொஞ்சம் குறைக்கலாம் என்றேன் ரஞ்சித் அண்ணாவிடம். நாற்பத்தைந்து நிமிடங்கள் இருந்த அந்த பகுதியை ஏழு நிமிடமாக குறைத்துள்ளோம். மேலும் குறைக்க வேண்டாம் என்றவர், ‘எல்லோர் வாழ்விலும் தொய்வு என்பது ஒன்று இருக்கும். கபிலனின் வாழ்க்கையில் அந்தகாலம் தொய்வு நிறைந்தது. அதனால் அது அப்படியே இருக்கட்டும்' என்றார். அவர் சொன்னது சரியென்றுபட்டதால், அந்த ஏழு நிமிட காட்சியை அப்படியே விட்டுவிட்டோம். சார்பட்டா பெற்ற வெற்றி எல்லோருக்கும் தெரியும். எனக்கு நிறைய பாராட்டையும் மரியாதையையும் வாங்கிக் கொடுத்தது.
சார்பட்டா, கர்ணன் படத்திற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் நல்ல கதைகளைத் தேர்வு செய்வதுதான் முக்கியமான வேலையாக இருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி நடித்த எல்.கே.ஜி படத்தின் ட்ரைலர் நான் தான் கட்செய்தேன். அந்த பழக்கத்தின் அடிப்படையில் ‘மூக்குத்தி அம்மன்', ‘வீட்ல விஷேசம்‘ போன்ற படங்களில் வேலைப் பார்த்தேன். நயன்தாரா நடித்த 'O2' திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் என்னுடைய நண்பன் என்பதால் அதிலும் பணியாற்றியுள்ளேன். அதன் பின்னர் ‘நட்சத்திரம் நகர்கிறது‘ படத்தில் வேலை பார்த்த அனுபவம் முக்கியமானது. புது இயக்குநர் ஒருவரிடம் வேலைபார்த்தது போன்று இருந்தது. இப்படம் படத்தொகுப்பிற்காகத் தனித்த கவனம் பெற்றது.
சினிமா விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அடுத்ததாக தங்கலான், மாமன்னன், கொலை, பொம்மை நாயகி, ப்ளு ஸ்டார், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் பணியாற்றுகிறேன். என்னுடைய லட்சியம், இயக்குநர் ஆகவேண்டும் என்பதுதான். நிச்சயம் ஆவேன்.
அதேபோல், பொறுமை இல்லாதவர் படத்தொகுப்பாளராக முடியாது. இயக்குநர் நினைப்பதை செய்துகாட்ட வேண்டும். இல்லையெனில், கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும்' என படத்தொகுப்பாளருக்கான இலக்கணத்தை நறுக்கென்று சொல்லி நேர்காணலை நிறைவு செய்தார், ஆர்.கே செல்வா.
பிப்ரவரி, 2023