திரை நேர்காணல்

பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்!

வசந்தன்

போர், வெடிகுண்டு தாக்குதல் போன்ற மானுட விரோத நடவடிக்கைளுக்கு எதிராக ஓர் உலகளாவிய பார்வையை ஏற்படுத்தியிருக்கிறது ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'. திரைக்கதையின் மையப்புள்ளியாக இருக்கும் மனிதம் என்பதையும் தாண்டி பழைய இரும்புக்கடை தொழிலாளர்கள், ஓட்டுநர்களின் பிரச்னைகளை இப்படம் பேசியிருக்கிறது. வட தமிழகத்தின் வட்டார வழக்கு,

சாதிய சமூக நடைமுறை போன்ற விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறது.

இப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரையுடன் உரையாடியதிலிருந்து...

‘‘பாடத்திட்டங்களுக்கு அப்பாலான  புத்தகங்களை நான் வாசிக்க தொடங்கியது கல்லூரியில்தான். பேராசிரியர்களின் ஆதரவில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவற்றில் பங்கேற்றது நல்ல அனுபவமாக இருந்தது. இதன்பிறகு சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் சிறுவாளையிலிருந்து சென்னைக்கு வந்தேன். திரைப்படத்துறையில் இயங்குவதென தீர்மானித்து வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தேன். செங்கல்பட்டில் ஏராளமான இளைஞர்களுக்கு ஓவியம், எழுத்து சார்ந்த பயிற்சிகளை அளித்துக் கொண்டிருந்தவர் ஓவியக் கவிஞர் ந. வீரமணி. அவரது அறிமுகம் எனக்கு ஒரு முக்கியத் திருப்புமுனை. அரசியல் சார்ந்த புத்தகங்களால் என்னை நெறிப்படுத்தியவர் அவர்.

சென்னையில் உதவி இயக்குநராக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தபோது ஒருசில தினங்கள் மட்டும் படத்தில் பணியாற்றிவிட்டு பின்பு அதை தொடராமல் இருந்துவிடுவேன். நான் வாசிக்கிற புத்தகங்களால் இங்கு இயங்குகிற சினிமாவும், அதிலுள்ள அதிகாரமும் எனக்கு முரணாகத் தெரிந்தது, மிரட்சியளித்தது. நமக்கு சினிமா பொருந்தாது என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன்.

சினிமாவுக்கான தேடல் மட்டுமன்றி எழுதுவதையும் நான் இணைந்தே செய்தேன். எனது முதல் கவிதை தொகுப்பு ‘யாரோ ஒருவன் யாரோ ஒருத்தி' வெளியானது. இதன் மூலமாக நிறைய தோழர்களின் அறிமுகத்தை பெற்றேன்.

சினிமாவுக்கு முன்பு சூழலின் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்திருக்கிறேன். அனிமேஷன் துறையிலும் இருந்தேன், பழைய இரும்புக்கடையிலும் வேலை செய்திருக்கிறேன். அனிமேஷன் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் என் வாழ்வின் மிகமுக்கிய மனிதரான கலை இயக்குநர் ராமலிங்கத்தைச் சந்தித்தேன். அவர் என் வாசிப்பையும், எழுத்தையும் புரிந்துகொண்டு தனது கல்லூரி நண்பர் பா. ரஞ்சித்தின் ‘அட்டக்கத்தி' படத்தில் உதவி இயக்குநராக  சேர்ந்து கொள்ளும்படி கூறினார். படம் தொடங்குவதற்கு சில காலமானது. இடையில் அனிமேஷன் துறையில் ஏற்பட்ட தொய்வு என்னை மீண்டும் இரும்புக்கடையை நோக்கி தள்ளியது. ராமலிங்கம் அண்ணனை சந்திக்கும் வாய்ப்பும் குறைந்தது. பொருளாதார சூழல் மட்டுமன்றி, எளிய தொழிலாளியாக வேலை செய்வதென்பது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. எனது சிந்தனைப் போக்குக்கு அனிமேஷன் பணியில் தினமும் ஷூ, ஷேவிங், நேர்த்தியான உடை என இருந்ததே அந்நியமாகத் தோன்றியது. ஆனால் எந்த வேலை செய்தாலும் சினிமாவின் மீதான சிந்தனையை கைவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இரும்புகடை மட்டுமல்ல லாட்ஜில் ரூம் பாயாக, சேல்ஸ்மேனாக சிப்ஸ் விற்றுக்கொண்டிருந்தபோதும்கூட என்னுள் சினிமா இருந்தது. ‘‘எந்த வேலை செய்தாலும் சினிமா பற்றி யோசித்துகொண்டிருந்தால் போதும் ஒருநாள் ஜெயிக்கலாம். அதற்காக கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதில்லை'' என்று ‘சினிமாவும் நானும்' புத்தகத்தில் இயக்குநர் மகேந்திரன் சொல்லியிருப்பதை நினைவில் நிறுத்திக்கொண்டேன்

‘அட்டக்கத்தி' தொடங்கும் தருவாயில் பா. ரஞ்சித்  அழைத்தார். எனினும், அரசியல் ரீதியாக இப்படம் நமக்கு சரிவருமா அல்லது ஏற்கெனவே சந்தித்த அதே அனுபவங்கள்தானா என்கிற ஊசலாட்டம் எனக்குள் இருந்துக்கொண்டே இருந்தது. படத்தின் உள்ளடக் கம் சார்ந்த கேள்விகள் மட்டுமல்ல. இயக்குநர்  - உதவி இயக்குநர் இடையிலான உறவே ஆண்டான் அடிமை போல் இருந்த சூழலில் உடன்படாமல் இருந்ததும் இந்தத் தயக்கத்துக்கு காரணம்.

அட்டக்கத்தி படம் முடிந்த பிறகு ஏறக்குறைய ஆறுமாத காலத்துக்கு அதனை வெளியிடும் போராட்டத்தில் பா. ரஞ்சித் இருந்தார். அப்போது அவரோடு உரையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. சிந்தனையளவில் இருவரும் ஒத்துப்போனதை அப்போதே உணர்ந்தேன். பின்பு அட்டக்கத்தி வெளியானவுடன் அதில் பதிவு செய்யப்பட்ட வாழ்வியல், பேசப்பட்ட அரசியல், வடிவம் ஆகியவற்றால் மிக முக்கியப் படம் என்பதை உணர்ந்து அவருடன் பணியாற்ற தீர்மானித்துவிட்டேன்.

மெட்ராஸ், கபாலி ஆகிய படங்களில் பா. ரஞ்சித்திடம் பணியாற்றிய பிறகு ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' கதையை படமாக்க முயற்சித்தேன். இதன் கதைக்கரு பலரையும் அச்சமூட்டியது. இராணுவத்தையும், அரசு அமைப்புகளையும் கேள்விகேட்பதாக பயந்து தயங்கினார்கள். பின்பு இறுதியாக நீலம் தயாரிப்பிலேயே படத்தை உருவாக்கினோம்.

இரும்புக்கடையில் வெடிகுண்டு என தெரியாமல் அதனோடு புழங்கிய அனுபவம் இருந்தாலும், இக்கதையைப் படமாக உருவாக்கலாம் எனும் முடிவுக்கு வர காரணம் உலகம் சார்ந்த புரிதல்தான்.

ஒளிப்பதிவாளர் கிஷோர், சத்யஜித் ரே திரைப்பட பள்ளியில் படித்துவிட்டு, ஜி. முரளியிடம் பணியாற்றியவர். நாங்கள் முந்தைய படங்களில் அறிமுகமானபோதே இணைந்து பணியாற்ற வேண்டுமென தீர்மானித்திருந்தோம். படத்தொகுப்பாளர் செல்வா இதேபோல் அவர் பிரவீனிடம் உதவியாளராக இருந்தபோதே அறிமுகமானவர். பாடலாசிரியர் உமாதேவியும் அப்படித்தான். எனக்கு தொழில்சார்ந்த அறிவாளிகளைவிட, உளவியல் ரீதியாக என்னுடன் இணக்கமாக இருப்பவர்களுடன் பணியாற்றுவது பிடித்திருந்தது. இவ்வாறு எனக்கான படக்குழுவை நானே தெரிவு செய்ய தயாரிப்பு நிறுவனம் எனக்கு முழு சுதந்திரம் வழங்கியது. கேஸ்ட்லெஸ் கலக்டிவ் போன்ற நிகழ்ச்சிகளில் தனது திறனை வெளிப்படுத்திய டென்மாவும் படத்துக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். ராமலிங்கம் அண்ணனைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. படத்துக்கு மட்டுமின்றி எனக்கும் எல்லாமுமாக இருந்திருக்கிறார். படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரின் உழைப்பும் ஈடுஇணையற்றதாக இருந்தது. எந்த இடதில்லும் சமரசம் செய்துகொள்ளாதவர்களாக உண்மையாக உழைத்திருக்கிறார்கள்.

என் வளர்ச்சிக்கு முழு காரணமாக இருந்தவர் மனைவி ஆதிரை. 24 வயதில் எங்களுக்கு திருமணமானது. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாக தான் உதவி இயக்குராகவே நான் பணியை தொடங்கினேன். அப்போது முதலே நான் ஜெயிப்பேன் என்கிற நம்பிக்கையோடு என்னுடன் போராடியவர் ஆதிரை. என் தாய் - தந்தை, சகோதரர்கூட என்னை நம்பினார்களா என்பது கேள்விகுறிதான். ஆனால் ஆதிரை நம்பினார். இரண்டு குழந்தைகளோடு வலிகளை சுமந்தார். அவரது நம்பிக்கைக்கும், போராட்டத்துக்குமான அடையாளமாகவே என் பெயர் அதியன் ஆதிரை என முழுமையடைந்திருக்கிறது. இந்த உணர்வுதான் படம் வெளியானவுடன் ஆதிரை கண்ணீர்விட காரணம். படத்துக்கு கிடைத்த வரவேற்பும், பாராட்டும் உணர்ச்சிவசப்படுத்திவிடவே அழுத அவரது புகைப்படத்தை நண்பர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட, பலரும் பகிர்ந்துவிட்டனர்.

படம் வெளியான பிறகு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு பெரும் மகிழ்ச்சியும்,

உற்சாகமும் அளிக்கிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து, குக்கிராமங்களிலிருந்து அழைத்து நெகிழ்கிறார்கள். தமது துயரங்களைப் பேசியிருப்பதாக லாரி ஓட்டுநர்கள் பலர் அழைத்து பேசியது உணர்வுபூர்வமாக இருந்தது. இரும்புக்கடையில் என்னுடன் உழைத்தவர்கள் கூட கைபேசி எண்ணை கண்டுபிடித்து பலவருடங்களுக்குப் பிறகு பேசினார்கள். பத்திரிகை, இணையதளம், சமூக வலைதளங்களின் மூலமாக படத்தை வெகுமக்களுக்கு கொண்டு சென்ற தோழர்களுக்கு எனது பெரிய நன்றியை இங்கு

சொல்லிக்கொள்கிறேன். குறைந்த பொருட்செலவில் எளிய மக்களின் வாழ்க்கையை பேசும் படத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென்கிற அவர்களது உணர்வு எங்களுக்குப் பெரும் உறுதுணையாக இருந்தது. விமர்சன ரீதியாககூட பலரும் படத்தை கூர்மையாக திறனாய்வு செய்திருக்கிறார்கள். அவையெல்லாம் எங்களை இன்னும் பக்குவப்படுத்துகிறது. பலரும் நான் நினைக்காத பார்வையில்கூட படத்தை நேர்மறையாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர். அதனை அவர்கள் சொல்லும்போது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து நடைபெறும் பாராட்டுக் கூட்டங்களும், கலந்துரையாடல்களும் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இப்போது அடுத்தகட்ட பணிகளில் கவனம் செலுத்த தயாராகிக்கொண்டிருக்கிறேன்,'' என முடிக்கிறார் அதியன் ஆதிரை.

ஜனவரி, 2020.