திரை நேர்காணல்

பத்து மணி நேரம் தண்ணீரில் நின்றேன் - வர்ஷா

அ.தமிழன்பன்

மணிவண்ணனின் அமைதிப்படை இரண்டாம் பாகத்தில் நடிக்கும் பேராண்மை வர்ஷா, இனிமேலும் வாய்ப்பு தேடும் கதாநாயகி இல்லை. டேவிட் என்பவரது இயக்கத்தில் பனி விழும் மலர்வனம், மலையாளத்தில் டோண்ட் வொர்ரி பீ ஹேப்பி என சுறு சுறுப்பாகிவிட்டார்.  நீர்ப்பறவை படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்திருந்தாலும் அந்தப்படத்தில் நந்திதா தாஸை விசாரணை செய்யும் காவல்துறைஅதிகாரியாக நடித்திருந்தார். இந்தப்படத்தில் இவரைத்தான் கதாநாயகியாக நடிக்கவைக்க நினைத்தாராம் சீனு ராமசாமி. இவருடைய அழகே இவருக்குக் கிடைக்கவிருந்த வாய்ப்பைத் தடுத்துவிட்டதாம். ஆனாலும் இவரை விட மனமில்லாமல் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார் சீனுராமசாமி.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட வர்ஷா நன்றாகத்  தமிழ் பேசுகிறார். அப்பா கப்பல் துறையில் வேலை செய்ததால்  தூத்துக்குடியிலேயே கடந்த இருபது வருடங்களாக வாசம். பள்ளிப்படிப்பு முழுக்க அங்கேயே என்பதால் தமிழ் முழுமையாகக் கைவந்திருக்கிறது.

அழகிப்போட்டியின் மூலம் நடிக்க வந்தவர் அல்லவா நீங்கள்?

ஆம். 2006 ஆம் ஆண்டு மிஸ்சென்னை போட்டியில் கலந்துகொண்டு சென்னை அழகி மற்றும் சிரிப்பழகி என்று தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னைப் பார்த்தவுடன் பேராண்மை படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தந்தார் இயக்குநர் ஜனநாதன். பேராண்மை படப்பிடிப்பின்போது காலில்அடிபட்டிருந்த நிலையிலும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டது மட்டுமின்றி கால் வீக்கத்துடனே நடனமும் ஆடவேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியான நான் தேடிவந்த பல படங்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

அமைதிப்படை பாகம் இரண்டு அனுபவம் எப்படி?

இதில்  நான்தான் நாயகி.இந்த ஒரு படத்திலேயே எனக்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என்று இரண்டுவகை வேடங்கள் அமைந்திருகின்றன. படத்தில் சத்யராஜ், மணிவண்ணன் ஆகிய இருவருடனும் சேர்ந்து நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. தொடக்கத்தில் அமைதியான பெண்ணாக இருந்து பின்பு பழிவாங்கும் வேடம் எனக்கு. மொத்தத்தில் நல்ல நடிகை என்று பெயர் வாங்கக்கூடிய வேடம்.பேராண்மை மற்றும் நீர்ப்பறவை ஆகிய படங்களில் என்னைப் பார்த்தவர்கள், அந்தப்பெண்தானா இது என்று வியக்கிற மாதிரி முற்றிலும் வேறுபட்ட வேடம் என்பதோடு முதன்முறை கிளாமராகவும் தோன்றுகிறேன்.இந்தப்படத்துக்காக ஒரு மழைக்காட்சி எடுக்கப்பட்டபோது சுமார்  பத்துமணிநேரம் தண்ணீரிலேயே நின்று கொண்டிருந்தேன். கை, கால்களெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்த போதும், நன்றாக நடித்தேன் என்று இயக்குநர் பாராட்டியது பெருமையாக இருந்தது. சத்யராஜ்  போன்ற சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது எனக்குப் ப்ளஸ்தான்.அவருடைய இவ்வளவுகால அனுபவங்களைப் பற்றி நான் தெரிந்துகொள்ள முடியும். அவை என்னுடைய கேரியர் முழுவதும் பயன்படும் எனும்போது அது நல்ல விசயம்தானே?

வேறு என்ன படம் நடிக்கிறீர்கள்?   

அமைதிப்படை படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடக்க வேண்டியிருக்கிறது.  அதற்கிடையில்   பனிவிழும் மலர்வனம்  என்கிற படத்திலும்  நடித்துக் கொண்டிருக்கிறேன். படத்தின் நாயகன்,ஒரு நான்கு வயதுச் சிறுவன். அவனுக்குத் தாயாக நான் நடிக்கிறேன். நடிகை என்று வந்த பிறகு எல்லா விதமான வேடங்களிலும் நடிப்பதுதானே பொருத்தமாக இருக்கும்?  கேட்கிறார் வர்ஷா.

ஜனவரி, 2013.