திரை நேர்காணல்

"படம் செத்திருச்சு சார்!''

இயக்குநர் மிஷ்கின் நேர்காணல்

Staff Writer

ஆர். பி சௌத்ரி சார்கிட்ட வேலை பார்த்துட்டு வெளியே வந்து பண்ணின என்னோட முதல் படம் சித்திரம் பேசுதடி.

நான் போய் கதை சொன்ன தயாரிப்பாளருக்கும்  சினிமா தெரியாது. சொல்லப்போனால் படம் ஆரம்பிக்கும்போதும் எனக்கு சினிமாவே தெரியாது. நான் பாத்தது எல்லாம் பழைய சினிமா. எது அப்ப பரபரப்பா ஓடும்னே தெரியாது. இந்த படத்தைப் பண்ணி ஹிட் கொடுத்து, அடுத்த படத்துல டபுள் சேலரி வாங்கி, ஒரு நடிகையைக் காதலித்து... இப்படி எல்லாம் எந்த ஐடியாவும் கிடையாது. அந்த படத்துல என்கூட இரண்டு இணை இயக்குநர்கள் இருந்தாங்க. அவங்கதான் நரேனை இந்த படத்துக்கு சிபாரிசு பண்ணவங்க. அவங்களே நரேன்கிட்ட போயி,'சாரி, தப்பான ஒரு இயக்குநர்கிட்ட உங்களை சிபாரிசு பண்ணிட்டோம். இவனுக்கு சினிமாவே தெரியல. தப்புத் தப்பா எடுத்துகிட்டு இருக்கான்னு சொல்லுவாங்க. ஆர்ட் டைரக்டரெல்லாம் கூட இந்த படம் ஓடவே ஓடாதுன்னு சொல்லுவாங்க. அதுமாதிரியே ஏழாவது நாள் படத்தை தியேட்டர்லர்ந்து எடுத்திட்டாங்க. அந்த படம் ப்ளாப் என்பது எனக்குத் தெரியல. நான் முதல் ஷோ சந்திரன் தியேட்டர்ல பாத்தப்ப எட்டுபேர்தான் படத்தைப் பாத்தாங்க. நான் அந்த எட்டு பேரையுமே பாத்துகிட்டு இருந்தேன். எனக்கு அந்த எட்டுப்பேர் பாத்தது, எட்டுலட்சம் பேர் பாத்தமாதிரி இருந்துச்சு. அடுத்த ஷோவுக்கு 16 பேர், அப்புறாம் 32, அப்புறம் 64 பேர்னு அதிகரிச்சிகிட்டு இருந்தப்ப படத்தை தியேட்டர விட்டு எடுத்திட்டாங்க. எல்லாருமே என்கிட்ட,' உனக்கு படம் இயக்கவே தெரியலன்னு சொன்னாங்க.

கடைசில அலுவலகத்தில 27 பெட்டிகள் கிடக்குது. கடைசிப் பெட்டியை ஒரு தியேட்டர்ல இருந்து ஒரு பையன் கொண்டுவந்து கொடுக்கிறான். தம்பி, இன்னிக்கு வியாழக்கிழமை. வெள்ளிக்கிழமை வரைக்கும் படத்தை ஓட்டக்கூடாதான்னு அவன்கிட்டே கேட்டேன். ‘படம் செத்திருச்சு சார்.. அதான் திருப்பி எடுத்துட்டு வந்துட்டேன்' னு அவன் சொன்னான். நல்லா ஞாபகம் இருக்குது. உங்களுக்குப் படம் எடுக்கத் தெரியல..படம் நல்லா இல்லைன்னும் சொன்னான். தம்பி, நல்லா பேசுறீங்களே நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்டேன். சினிமால உதவி இயக்குநரா இருக்கேன்னு சொன்னான். 'தம்பி என்னவோ தோணுது சொல்றேன். அநேகமா இன்னும் பத்து நாள் கழிச்சி இதே பெட்டியை வந்து நீ கேட்பே.. பாரு..'ன்னு சொன்னேன். என்னமோ தெரியல. அடுத்த ரெண்டே நாளில் அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆயிடுச்சு. முதல் படமே இப்படி ஆனதால எனக்கு சக்சஸ்னா என்னன்னே தெரியல...

(எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி பிரபலங்களுடன் நிகழ்த்தும் உரையாடல் தொடர் Chat with Chen அந்திமழை யூட்யூப் சானலில் (AndhimazhaiTV)ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாலை வெளியாகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் மிஷ்கின் பகிர்ந்துகொண்டதில் சிறுபகுதி இது)

 இயக்குநர் மிஷ்கின் - உடன் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜியின் உரையாடல் காணொலி: