எனக்குக் கிடைத்திருக்கும் திரைக்கதை தேர்வு செய்யும் திறன், அப்பா (எடிட்டர் மோகன்), அண்ணன் (டைரக்டர் மோகன்ராஜா), இவர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் தான் என் சினிமா வாழ்வை உயர்த்திச் செல்கிறது,'' என இயல்பாகப் பேச்சைத் தொடங்குகிறார், ஜெயம்ரவி.
‘நானும் மதுரைக்காரன். எப்படின்னா, எங்கப்பாவுக்கு சொந்த ஊர் மதுரை அருகே திருமங்கலம். 1954 ல் அப்பா ஊரைவிட்டு சென்னைக்கு வந்து விட்டார். அப்போது பிரபலமாக இருந்த நகைச்சுவை நடிகர் கே ஏ. தங்கவேல் சாரிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அவரிடம் ஐந்து வருடம் பணியாற்றி சினிமாவை கற்றுக் கொண்டார். வெறும் பி.ஏ.வாக மட்டும் இருந்து விடாதே, சினிமாவில் ஏதேனும் ஒரு தொழில் கற்றுக்கொள். அது எதிர்காலத்தில் கைகொடுக்கும் என்று தங்கவேலு அய்யாவே அப்பாவை எடிட்டிங் பயிற்சி பெற நெப்டியூன் ஸ்டுடியோவில் உதவி எடிட்டராக சேர்த்துவிட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் கோவிந்த சாமி, ஜோஷி, வீரப்பன் ஆகிய மூவரிடம் உதவி யாளராக இருந்து தொழிலைக்கற்றார். அப்போது மாதம்15 ரூபாய் சம்பளம் பெற்றுவந்தார். 1964 முதல் அப்பா தனியாக எடிட்டிங் செய்ய தொடங்கினார். முதல் படம் 'புரட்சி வீரன் புலித்தேவன்'. சாண்டோ சின்னப்பா தேவரின் பல படங்களுக்கு எடிட்டராக வேலை பார்த்திருக்கிறார்.
எடிட்டிங்கிற்கு கற்பனை வளம் முக்கியம். படம் பார்க்கும் ரசிகராக தன்னைக் கற்பனை செய்து கொண்டு அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைத் தெரிந்து செய்யவேண்டும். ஓடாத சில ஆங்கிலப் படங்களை ரீஎடிட் செய்து ஓட வைத்திருக்கிறார். எடிட்டிங் கலையில் உள்ள நுணுக்கங்கள் பற்றி அப்பா நிறைய சொல்வார். அண்ணா அவரிடம்தான் எடிட்டிங் கத்துக்கிட்டார். ஒரு படத்தின் வெற்றிக்கு எடிட்டிங் எத்தனை முக்கியமானது என்பதற்கு ஒரு விஷயத்தை அப்பா சொல்லியிருக்கிறார்:
ராமுகாரியத் மலையாளத்தில் மீனவர் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து செம்மீன் படத்தை இயக்கினார். படத்தை எடிட் செய்ய ஒருவரை நியமித்திருந்தார். எடிட் செய்யப்பட்ட படத்தை போட்டுப் பார்த்த போது அதில் என்னவோ குறையிருப்பதை உணர்ந்தார். அவருக்கு ரிஷிகேஷ் முகர்ஜியுடன் பழக்கம் இருந்தது. அவரிடம் தமது படத்தை எடிட் செய்து தருமாறு வேண்டினார் . சிறந்த தொழில்நுட்ப வல்லுனரும் எடிட்டிங் கலையில் வல்லவருமான முகர்ஜி செம்மீன் படம் பார்த்தார்,கேரளத்துக் கடற்கரையில் அடிக்கும் பல்வேறுவிதமான அலைகளை படமாக்கச் சொன்னார். சாதாரண அலை, பொங்கிவரும் அலை, நடுத்தர அலை என பலதரப்பட்ட அலைகள் படமாக்கப்பட்டன. அவற்றை வைத்து காட்சிகளை மாற்றியமைத்து சரி செய்தார். காட்சியின் சூழலுக் கேற்ப அலைகள் காட்டப்பட்டன. ராமுகாரியத்துக்கு ஏகத் திருப்தி. ரிஷிகேஷ் முகர்ஜியின் கைவண்ணம்.அந்தப்படம் தங்கப்பதக்கம் வென்றது. அதன் முக்கிய காரணம் எடிட்டிங்தான் என்பார் அப்பா.
1979 முதல் அப்பா தயாரிப்பாளராகி விட்டார். 1980&ல் நான் பிறந்தேன். எனக்கு அண்ணன் ராஜா. அக்கா ரோஜா ஒரு பல் டாக்டர். அம்மா வரலட்சுமிக்கு என்மேல் கொள்ளை பிரியம். வீட்டில் நான்தான் கடைக்குட்டி என்பதால் எல்லோரின் செல்லம் நான்.
ஜவஹர் வித்யாலயா பள்ளியில் எல்கேஜி முதல் ப்ளஸ் டூ வரை. சுந்தர்பிச்சை எனக்கு சீனியர் என்பதில் கூடுதல் பெருமை. அந்தப் பள்ளி நாட்கள் மறக்க முடியாதவை.
எங்க பள்ளியில் டான்ஸ் புரோகிராம் நடந்தால் முதல் பரிசு எனக்குத்தான் கிடைக்கும். காரணம் நான் 12 வயசுலேயே பரத நாட்டியம் கற்றிருந்தேன். எங்கம்மா பரதம் கற்க ஆசைப்பட்டார். ஆனால் முடியவில்லை. அந்தாசையை என்மூலம் நிறைவேற்றினார். என் நாட்டிய அரங்கேற்றத்திற்கு தங்கவேலு, அன்றைய பிரபல நடிகர் ராம்கி, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் வந்து வாழ்த்தினார்கள்.
அப்பா ஏழாவது வரை மட்டுமே படித்தவர். நாங்களெல்லாம் நன்றாகப் படித்து டிகிரி வாங்கணும் என்பார். எங்களை மட்டுமல்ல, அம்மாவையும் எம்.ஏ. படிக்க வைத்தார்.
எனக்கு அம்மான்னா உயிர். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் அம்மா வேடம், எங்கம்மாவை வைத்துதான் உருவாக்கப்பட்டது. சின்னவயதில் நான் கிரிக்கெட் விளையாடி அக்கம்பக்கத்து வீட்டு சன்னல் கண்ணாடிகளை உடைத்திருக்கிறேன். அப்போதெல்லாம் அம்மாதான் போய்ப் பேசி, அப்பா வருவதற்குள் சமரசம் செய்து என்னை காப்பாற்றி விடுவார்.
நான் லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்தபோது ஒரு குறும்படம் எடுத்தேன். அதற்கு கதை வசனம் எழுதியது அம்மா வரலட்சுமி தான் அம்மாவுக்கு கற்பனைவளமும், இலக்கிய அறிவும் அதிகம்.
அப்பா பிரபல எடிட்டர், தயாரிப்பாளர் ஆக இருந்ததால், எனக்குள் சினிமா ஆர்வம் பெருகியது.அப்பா எடிட்டிங் செய்யும் போதும்,எங்கள் பட ஷூட்டிங் போதும் நானும் கூடபோவேன். நான் டைரக்ஷன் கற்றுக்கொள்ள ஆசைப்படுவதை சொன்னபோது, நீ நம்ம படத்தில் வேலை செய்தால் சரியாக இருக்காது. படமுதலாளியின் மகன்னு சலுகை கொடுக்கலாம். சரியாக கத்துக்க மாட்டே, என்று என்னை டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் அனுப்பிவைத்தார். அப்போது அவரிடம் ஆளவந்தான் படப்பிடிப்பில் கடைசி அசிஸ்டெண்டாக பயிற்சி பெற்றேன்.
நான் ப்ளஸ்டூ முடித்ததும் சினிமாவில் நடிக்க விரும்பும் விஷயத்தைச் சொன்ன போது ‘நீ நடிகனாவதில் ஆட்சேபனையில்லை, முதல்ல படிச்சு ஒரு டிகிரி வாங்கு ! அப்பறம் பார்க்கலாம்' என்று சொல்லிவிட்டார். பின் அதுபோலவே எனக்காக தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக, 12 வெள்ளிவிழா படங்களைக் கொடுத்த அப்பா தமிழுக்கு வந்தார். என்னோட ஆசைக்காக, என்னை ஒரு ஹீரோவாக தூக்கி நிறுத்தும்வேலையில் முழுகவனம் செலுத்தினார். அப்பாவின் முயற்சியும் அண்ணனின் உழைப்பும் இங்கு உங்கள் முன் வந்து நிற்கும் தகுதியை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தது. தமிழின் முக்கியமான இளம் ஸ்டார்களில் ஒருவனாக வளர்ந்து நிற்கிறேன். 24 படங்கள் முடித்து விட்டேன். என் வெற்றிக்கு பின்னால் ஊக்கசக்தியாக அப்பாவும் அண்ணனும் இருக்கிறார்கள்.
2003 - ல் ஜெயம் என் முதல் படம்வெற்றி, அடுத்த ஆண்டில் தமிழக அரசு சிறந்த புதுமுகநடிகர் விருது கொடுத்தது. 2006 ல் கலைமாமணி. ஆனாலும் இங்கு ஒரு விஷயத்தைச் சொல்வது அவசியம்.
அப்பாவும் அண்ணனும் சினிமாவில் இருந்ததால் சினிமாவுக்குள் நுழைவது ஈசியாக இருந்தது, ஆனால் நடிப்பு லேசில் வந்துவிடாது. அதற்கு நிறைய உழைக்கணும் என்பது உள்ளே வந்து தெரிந்து கொண்டேன். முதல் படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும்போது 9 டேக் வாங்கியிருக்கேன், அது ரொம்ப சுலபமான காட்சியாக இருந்தும் வேலை வைத்துவிட்டது. கல்யாணி என்ற குட்டிப்பெண் ரெயில் பெட்டியில் ரகசியதகவலை எழுதிவிட்டுப் போயிடுவா. எனக்கு ஓண்ணும் புரியல, முதலில் அதைப் படிக்கணும், அப்புறம் அந்தப் பெண் போவதைப் பார்த்து ஒரு ரியாக்ஷன் காட்டணும்.வெறுமனேயில்லாம அது பல விதத்தில் அர்த்தத்தை வெளிப்படுத்துகிற மாதிரி இருக்கணும். அது வரமாட்டேன்னு அடம்பிடிச்சுது. அதுக்கு 9 டேக்குகளுக்கு பிறகு பண்ணிமுடித்தேன்.
எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி படத்தின் உச்சக் கட்டக் காட்சியில்( ஹீரோவின் அம்மா நதியா இறந்து விடும் சீன்) நான் துடித்து வெடித்து அழ வேண்டும், நான் எவ்வளவு முயன்றும் இயல்பாக அழுவதுபோல பாவனை செய்ய முடியவில்லை. என் முகத்தில் எதார்த்தமான அழுகை இல்லை. டைரக்டர் அண்ணன் ராஜா. 'உன் அழுகையில் உயிரில்லேடா,' என்றவர், என் காது அருகில் வந்து ‘ இந்தக் காட்சி படத்துக்கு ரொம்ப முக்கியமானது, ஆனால் நீ அழறது ஏனோ காட்சியோடு ஒட்டலை. உன் மனசுல நம்ம அம்மாவே இறந்துட்ட மாதிரி நெனைச்சுக்கிட்டு நடி ரவி' என்று சொன்னதும், எனக்கு தன்னால் அழுகை அழுகையாக வந்தது. அந்தக் காட்சிஓகே ஆன பிறகும் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அப்போ அண்ணன் என் முதுகில் கைவைத்துத் தட்டியதும் எனக்குக் கோபம் பொங்கியது. அண்ணன் மேல் அடிக்கப் பாய்ந்தேன்,‘எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஒரு வார்த்தைய சொல்வே,' என்று அண்ணனுக்கு ரெண்டு குத்து விட்டேன். 'டேய், நானும் அவங்க மகன் தான்டா,' என்று அண்ணன் சமாதானம் செய்தார்.
நடிப்பு விஷயத்தில் எனக்கு ஒரு பயிற்சிக் களமாக அமைந்தது, எஸ்.பி ஜனநாதன் சாரின் பேராண்மை படம். அதன்பின் நடிப்பு புரிந்தது. ஈசியானது. அதற்குப்பின் நிறைய படம் பார்க்க ஆரம்பித்தேன், பிலிம் பெஸ்டிவெல் போவேன், எல்லா மொழிப் படங்களும் பார்க்கத் தொடங்கினேன்,தொடர்கிறேன்.
தற்போது என்னிடம் மறக்காமல் கேட்கப்படும் ஒரு கேள்வி: எப்போது டைரக்ஷன் என்பது தான் ,அது ரொம்ப பெரிய விஷயம், தூரத்து ஆசை. நிச்சயம் டைரக்ட் பண்ணுவேன், எனக்குள் இரண்டு ஸ்கிரிப்ட் ரெடி செய்து வைத்திருக்கிறேன். அதை அப்பா தயாரிப்பார்.
சினிமா மாதிரி அனுபவப்பள்ளி இல்லை, இங்கு படித்து தேறியவர்கள் வெளியே தோற்றதில்லை!'' விடைதருகிறார் ஜெயம் ரவி.
ஏப்ரல், 2019.