திரை நேர்காணல்

நீண்ட காத்திருப்பு சங்கடமாகத்தான் இருந்தது!

பாலாஜி

தமிழ் சினிமாவில் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ஆறு திரைப்பட விழாக்களில் பங்குபெற்று திரையுலகத்தினரை திரும்பிப் பார்க்கவைத்தது. சென்னை திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்ப்படமாக தேர்வாகி, யார் இந்த படத்தின் இயக்குநர் என்று அறிந்துகொள்ளும் ஆவலை அனைவரிடத்திலும் ஏற்படுத்தியது. தேசிய விருது பெற்று, குற்றம் கடிதல் என்ற படம் மேலும் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனாலும் அது கிட்டதட்ட 10 மாதங்களுக்குப் பிறகுதான் திரையரங்குக்கு வரமுடிந்தது. படத்தின் இயக்குநரான பிரம்மநாதன் என்கிற பிரம்மாவை நாம் சென்ற இளைஞர் சிறப்பிதழில் நம்பிக்கை நட்சத் திரமாக அறிவித்திருந்தோம். இப்போது குற்றம் கடிதம் படத்தின் மூலம் அனைவரின் நம்பிக்கையையும் பெற்றிருக்கும் இயக்குநர் பிரம்மாவிடம் வாழ்த்துகளுடன் பேசினோம். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிகச் சாதாரணமாக அவர் சினிமா இயக்குநர் ஆன கதையை பேசத்தொடங்கினார்.

“சென்னை லொயோலா கல்லூரியில் பி.எஸ்சி., கிரெஸெண்ட் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்தேன். நாடகங்கள்தான் என்னுடைய தொடக்கச் செயல்பாடாக இருந்தன. மேடை நாடகங்கள், வீதி நாடகங்கள், கார்ப்பரேட் நாடகங்கள், தொண்டு நிறுவனங்களுக்கான நாடகங்கள், நவீன நாடகங்கள் என  செயல்பட்டேன். இந்த காலகட்டத்தில் நாடகத்தில் தேசிய சாம்பியன்ஷிப் வெற்றியை பெற்றிருக்கிறோம் அடுத்து ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்தேன். அதன் பிறகு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் இணை இயக்குநராக வேலை செய்தேன். இங்கு வேலை செய்யும்போதுதான் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. நிறைய மனிதர்களைச் சந்தித்தேன். அப்போது வாக்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் ஜஸ்ட் வோட் என்ற குறும்படம் இயக்கினேன். பிறகு ஒரு விளம்பரப் படம் பண்ணேன். இந்த நேரத்தில்தான் எனது நண்பர் கிறிஸ்டி சிலுவப்பன் நாம ஏன் ஒரு படம் பண்ணக்கூடாது என்று கேட்டார். அப்படி எடுக்கப்பட்ட படம்தான் குற்றம் கடிதல்.

குற்றம் கடிதல் திரைப்படம் ஜிம்பாப்வே, மும்பை, பெங்களூரு, கோவா, சென்னை, ஆகிய இடங்களில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் இடம்பெற்றது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்ற ஒரே தமிழ் திரைப்படம் இதுதான். சென்னையில் திரையிடப்பட்டபோது குற்றம் கடிதலுக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரத்தில் பொறுப்பு கூடுதலாகியுள்ளதை உணர்ந்துள்ளேன்.

குற்றம் கடிதலில் வேலை செய்த எல்லோருமே புதியவர்கள்தான். இது  முழுக்க முழுக்க ஒரு டீம் ஒர்க்தான். படம் முடிந்த பிறகு இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் ஜெ.சதீஷ் குமார் படம் பிடித்துப்போய் இது என்னுடைய படம் என்று ஆட்கொண்டார்.

இன்றைய தமிழ் சினிமாவில் நடைபெற்று வரும் மாற்றங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ் சினிமா என்று மட்டுமில்லாமல் வேறு எந்த துறையாக இருந்தாலும் அது காலந்தோறும் மாறுதல் பெற்று இருக்கிறது. அதே போல சினிமாவும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. அதில் ஒருவனாக நானும் இருப்பதில் பெருமையாக நினைக்கிறேன்.

இப்போது சினிமாவை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் அது பொருள் பொதிந்ததாகவும் பார்க்கும் காலம் வந்துள்ளது. எவ்வளவு பெரிய நாயகனாக இருந்தாலும் படம் சரியில்லை என்றால் அதை ஒதுக்கித் தள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால், இன்று கலைஞர்கள் நிறைய மெனக்கெட வேண்டியுள்ளது.

ஒவ்வொரு தனிமனிதனும் இன்று நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்கள். இணையத்தில், உலக நாடுகளின் பல மொழி சினிமாக்களைப் பார்க்கிறார்கள். இது போல தங்கள் மொழியில் தங்கள் நாட்டில் ஒரு படம் வெளிவரவில்லையே என்று ஆதங்கப்பட தொடங்கிவிட்டார்கள். இதனால், இந்த மாற்றம் நிகழ்ந்துவருகிறது.

அதே நேரத்தில் இன்று யாருக்கும் நேரமில்லாமல் போய்விட்டது. கிரிக்கெட் 50 ஓவர்களிலிருந்து எப்படி 20 ஓவர் கிரிக்கெட்டாக மாறியதோ அதே போல நேரமில்லாததால் இரண்டு மணி நேரமெல்லாம் ஒரு படத்தை உட்கார்ந்து பார்க்க முடியாது என்று வருங்காலங்களில் மக்கள் குறும்படங்கள் மட்டுமே பார்க்கிற மனநிலைக்குகூட தயாராகலாம். அப்போது இதுபோன்ற இரண்டு மணிநேரம் ஓடுகிற பெரிய படங்களே இல்லாமல் கூட போகலாம். அதனால், எல்லா மாற்றங்களுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

சினிமாவைப் பற்றி உங்களுடைய பார்வை என்ன?

படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு நம்முடைய படம் பொறுப்புள்ளதாக இருக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள், வீதி நாடகங்கள் நடத்தியபோதான அனுபவங்கள், நிறைய மக்களின் சந்திப்புதான் எனக்கு சினிமாவுக்கான உந்துதலைக் கொடுத்தது. நிறைய மனிதர்கள், காதுபட கேட்ட அவர்களின் வாழ்க்கைக் கதைகள், பெரும்பாலானவை நமது சினிமாக்களிலும், இலக்கியங்களிலும் பதிவாகாத எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கின்றன. அதை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் உள்ளது.

மாற்றம் என்று சொல்லப்படுவது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் எல்லா மாற்றங்களும் நிர்ப்பந்தத்தின் பேரில்தான் மாற்றம் கொள்கின்றனர். இப்போது நடைபெறும் மாற்றமும் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டுதான் மாற்றம் கொள்ளத் தொடங்கியுள்ளது.

இந்த மாற்றம் நடைபெறும் சூழலில் கலைஞர்கள் முதலில் தன்னை நம்ப வேண்டியுள்ளது. எல்லோரும் செய்வதை நாமும் செய்வதில் அர்த்தம் இல்லை. மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக சொல்வதற்கு நம்மிடம் புதியதாக ஒன்று இருக்க வேண்டும்.

நீங்கள் படங்களின் மூலம் ஏதாவது சொல்ல வேண்டு என்று நினைக்கிறீர்களா?

 படத்தில் மெசேஜ் சொல்லத் தேவையில்லை. மக்களுக்கு எந்த அறிவுரையும் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் மக்களுக்கு எல்லாம் தெரியும். தவறான விஷயங்களை சொல்லாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன்.

 வெளிநாட்டுப் படங்கள் குறித்து உங்களுடைய பார்வை என்ன?

உலக சினிமான்னு ஒண்ணு இல்லைனு நினைக்கிறேன். இங்கு உலக சினிமாக்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் அந்தந்த நாட்டிலுள்ள அந்த மக்கள் பேசும் மொழி, வாழ்க்கை, காலாசாரம் பண்பாடு சார்ந்ததாக இருக்கிறது. நாம அப்படி சொல்லத் தவறியதால்தான் நம்முடைய மொழியில் இதுபோன்ற படங்கள் வரவில்லையே என்ற ஆதங்கம் வருகிறது. அதே போல நம்முடைய மக்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை எல்லாவற்றையும் அனுமானிக்க தவறியுள்ளோம்.

சிவாஜி கணேசனை நாம் இன்னமும் ஓவர் ஆக்டிங் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அன்றைய காலகட்ட சூழலால் மனிதர்கள் ஒரு உணர்ச்சிவயப்பட்டவர்களாகவே இருந்தார்கள். அதைத்தான் நாம் ஓவர் ஆக்டிங்க் என்று அதை ஏற்கத் தயங்குகிறோம். நம்முடைய மக்களின் வாழ்க்கையை படமாக்குவதன் மூலம்தான் இதை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

உங்களுடைய படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட படம் வெளியாவதற்கு காத்திருந்துள்ளீர்கள்? ஏன் இந்த தாமதம்?

இந்த நீண்ட காத்திருப்பு ரொம்ப சங்கடமாகத்தான் இருந்தது. மக்களுக்காக எடுக்கப்பட்ட படம் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லையே என்று மேலும், சங்கடமாக இருந்தது. ஒரு பெரிய காத்திருப்புக்குப் பிறகு குற்றம் கடிதல் வெளியாகி மக்களிடம் பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இது முன்னாடியே வெளியாகியிருந்தால் போட்டி கொஞ்சம் குறைவாக இருந்திருக்கும். கடுமையான போட்டி நிலவும் இந்த சூழலிலும் வெளியாகி படம் வெற்றி பெற்றிருக்கிறது மகிழ்ச்சிதான்.

குற்றம் கடிதல் நல்ல சினிமாவாக இருந்தும் திரையரங்குகளில் வெளியாவதில் என்ன பிரச்சினை இருந்தது?

 பொதுவாக தெரிஞ்ச நடிகர்கள் இருந்தால்தான் படம் நல்லா இருக்கும் என்கிற மனநிலை இருக்கிறது. ஏற்கெனவே படங்களில் நடித்து வெற்றிபெற்ற நடிகர்கள் உள்ள படத்தின் மீதுதான் மக்களும் நம்பிக்கை வைக்கிறார்கள். மக்களின் இந்த எண்ணம்தான் விநியோகிஸ்தர்கள் மத்தியிலும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பிரதிபலிக்கிறது. ஒரு படம் நல்ல படம் என்பதற்கு கதை, திரைக்கதை, இயக்குநர்களை எல்லாம் தாண்டி வெற்றி பெற்ற நடிகர்கள் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையை மாற்றுவதற்கு குற்றம் கடிதல், காக்கா முட்டை மாதிரி படங்கள் நிறையவரும்போதுதான் எல்லோருடைய நம்பிக்கைகளும் மாறும்.

படத்துக்கு கிடைத்திருக்கு வெற்றியை எப்படி பார்க்கிறீங்க?

விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றிருக்கிறது. இன்றுவரை எல்லா தியேட்டரும் ஹவுஸ் ஃபுல்தான். படம் வெளியான பிறகு மேலும், 40 தியேட்டர்ல வாங்கி வெளியிட்டிருக்காங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது.

உங்களுடைய அடுத்த படம் என்ன?

ஓர் அரசியல் த்ரில்லர் படத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அக்டோபர், 2015.