திரை நேர்காணல்

‘நிலத்தை விற்று படத்தை எடுத்தேன்!’

Staff Writer

நடுநாட்டு வாழ்வியலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் பார்க்க முடிந்தது. அதை ‘எறும்பு'திரைப்படத்தின் மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார், அப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ஜி. காபி ஷாப் ஒன்றில் அந்திமழைக்காக சந்தித்துப் பேசினோம்.

‘காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள அறந்தாங்கி என்னுடைய சொந்த ஊர். அங்கேயே பள்ளிப்படிப்பு முடிந்தது. பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில்தான் சினிமா மீது ஆசை வந்தது.

அதேபோல், பொறியியல் படிப்பு மீதும் ஆர்வம் இருந்ததால், சினிமா ஆசையோடு சென்னைக்கு பொறியியல் படிக்க வந்தேன். பாடப்புத்தகங்களோடு சுஜாதா, கருந்தேள் ராஜேஷ் எழுதிய திரைக்கதை பற்றிய புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். சினிமா எடுப்பது தொடர்பான நிறைய யூடியூப் வீடியோக்கள் பார்த்தேன். எதாவது ஒரு படம் வந்தால், அதேமாதிரி குறும்படம் எடுப்பேன். இதெல்லாம் செய்து பார்த்த பிறகு தான் திரைக்கதை எப்படி எழுதவேண்டும் என்ற ஐடியா கிடைத்தது.

நான்கு ஆண்டு கல்லூரி முடித்ததும், வியாபாரம் குறித்து படிப்பதற்காக சிங்கப்பூருக்கு சென்றேன். குடும்பத்தை பொருளாதார ரீதியாக பலப்படுத்திவிட்டு, பிறகு சினிமாவுக்கு செல்லலாம் என முடிவெடுத்ததால் தான் அந்த குறுகிய கால வெளிநாட்டுப் படிப்பு. சிங்கப்பூர் சென்ற ஓரிரு நாட்களிலேயே சினிமா தொடர்பான நபர்களின் அறிமுகம் கிடைத்தது. அந்த சமயத்தில் ஒரு ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நண்பர் ஒருவரின் மூலம், அந்த படப்பிடிப்பு தளத்திற்கு தினந்தோறும்

சென்றுவிடுவேன்.  இதற்கிடையே, ஒரு நிறுவனம் ஒன்றில் ஒரு மாத காலம் பகுதி நேரமாக வேலைப்பார்த்தேன். தொடர்ந்து அங்கேயே வேலைப் பார்த்தால், ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக சொன்னார்கள். படிப்பு முடிந்ததால், அக்காவின் திருமணத்திற்காக வந்துவிட்டேன்,' என்றவரிடம், முதல் குறும்பட அனுபவம் பற்றிக் கேட்டோம்.

‘அக்காவின் திருமணத்தை முடித்த கையோடு ‘அது இல்லனா இது' என்ற நாற்பத்தைந்து நிமிட குறும்படம் எடுத்தேன். பின்னர் ‘ஜாடிக்கேத்த மூடி' என்ற குறும்படம் எடுத்தேன். அந்தப் படம் பாண்டிச்சேரி திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு சிறந்த திரைக்கதை, நடிப்பு உள்ளிட்ட நான்கைந்து பிரிவுகளில் விருதுகளை வென்றது. அந்த அங்கீகாரம், ‘நம்மாலும் இயக்குநர் ஆக முடியும்' என்ற நம்பிக்கை கொடுத்தது.

‘அது இல்லனா இது' குறும்படத்தில் எடிட்டராக வேலைப் பார்த்த செந்திலின் மூலமாக ஆர்.கே இயக்கிய ‘உன்னோடு கா'படத்தில்  உதவி இயக்குநராக வேலைப்பார்த்தேன்.  பிறகு நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் பண உதவிபெற்று  ‘போதை'என்ற என்னுடைய முதல் படத்தை நானே தயாரித்து இயக்கினேன். பட்ஜெட் காரணமாக பன்னிரண்டு நாட்களில் படப்பிடிப்பை முடித்தேன். படப்பிடிப்பில் செய்து கொண்ட சமரசங்கள் தவறு என்று பிறகு தான் உணர்ந்தேன். படத்தின் வெளியீட்டிற்கு மட்டும் என்னுடைய நலன் விரும்பி ரமணி ராமச்சந்திரன் என்பவர் சிலபல லட்சங்கள் கொடுத்து உதவினார். படம் எண்பத்து இரண்டு தியேட்டரில் வெளியானது.

முதல் படத்தில் கிடைத்த அனுபவத்துடன் நிறைய தயாரிப்பாளர்களை சென்று பார்த்தேன். கஷ்டப்பட்டு தயாரிப்பாளரை சென்று பார்ப்போம். அவரோ, நம்மிடம் இருக்கும் கதையைக் கேட்காமல், வேறு ஒரு ஐடியாவை சொல்லி அதை படமாக எடுக்க முடியுமா என்று கேட்பார். இந்த சூழலில் தான், ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த சிங்கபூர் நண்பர் ஒருவர் படம் தயாரிக்க முன்வருவதாக சொன்னார். நானும் இரண்டு முறை, கதை விவாதத்திற்கு

சிங்கப்பூருக்கு சென்று வந்தேன். நான்கு கோடியில் படம் எடுப்பதாக முடிவானது. அதற்கு முன்னதாக, அந்தக் கதையை பைலட் படமாக எடுத்தேன். அதில் சார்லியும், எறும்பில் சிறுவனாக நடித்துள்ள ஷக்தி ரித்விக்கும் நடித்திருந்தனர். படம் எடுத்து முடித்திருந்த பத்து நாட்களில் கொரோனா வந்துவிட்டது. அந்தப் படம் அப்படியே கைவிடப்பட்டது.

கொரோனா சமயத்தில் ஊரிலிருந்தேன். கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் வெளியூரிலிருந்து வந்து, எங்கள் ஊரில் கரும்பு வெட்டினார்கள். ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியாகக் கூடாரம் போட்டு,

சமைத்து சாப்பிடுவார்கள். அதைப் பார்த்த எனக்கு, அவர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என தோன்றியது. அதில் வெவ்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கினேன். அப்படித்தான் ஒரு கிராம் மோதிரம், சித்தி, சிட்டு போன்ற விஷயங்கள் வந்து சேர்ந்தன.

மூன்று நான்கு மாதங்களில் திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். கதை ரொம்ப சின்னதாக இருந்தாலும், அழுத்தமான உணர்வுகளைப் பேசுவதால், படம் பேசப்படும் என்று நினைத்தேன். நண்பர்களிடம் கதையை சொன்னேன், எல்லோருக்கும் பிடித்திருந்தது. முடிந்தளவு சினிமாத்தனத்தை தவிர்த்து, உண்மைக்கு நெருக்கமாக படம் இருக்க வேண்டும் என நினைத்தேன், அவ்வளவுதான்.

அந்த சமயத்தில், எங்களின் நிலத்தை விற்றோம். அதில் வந்த பணத்தை வைத்து, ஒரு மாதத்தில் படத்தை எடுத்தேன். முதல் படம் போல இந்தப் படத்துக்கும் நானே இயக்குநர், நானே தயாரிப்பாளர். எதிர்பார்த்த தைவிடவும் அதிக செலவு. கையிலிருந்த பணத்தில், படப்பிடிப்பை முடித்திருந்தாலும், இறுதிக்கட்ட பணிகளை முடிப்பதற்குத்தான் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது,' என்றார்.

“இறுதிக் காட்சிக்கு முன்பு, அம்மாவை நினைத்து மோனிகா அழும் காட்சியை ரொம்ப மெனக் கெட்டு எடுத்தோம். அந்த காட்சியை எடுக்கும் போது, ஒட்டுமொத்த படப்பிடிப்பு தளத்தையும் மயான அமைதிக்கு மாற்றினோம். மோனிகாவைக் கதாபாத்திரத்தின் மனநிலைக்குக் கொண்டு வர முழுக்கதையையும் சொன்னோம். இறுதியாக மோனிகா நடித்து முடிக்கையில் அனைவரும் அழுதுவிட்டோம். அப்போதே தெரிந்தது அந்தக் காட்சி அழுத்தமாக இருக்கும் என்று.

அதேபோல், முழுப்படத்தையும் காட்டுமன்னார்கோயிலில் தான் எடுத்தோம். ஒவ்வொரு மாலையும் படப்பிடிப்பு முடிந்த பிறகு சம்பளம் கொடுப்பதற்குப் படாதபாடு படவேண்டியிருந்தது. உள்ளூரில் படம் எடுக்கிறேன் என்பதால், வேலைப்பார்ப்பவர்களுக்குப் பணம் கொடுக்காமல் ஏமாற்ற மாட்டேன் என்ற நம்பிக்கை இருந்தது. தயாரிப்பையும் இயக்கத்தையும் ஒரே நேரத்தில் பார்த்தது பெரும் பாடாக இருந்தது. படப்பிடிப்பு சமயத்தில் தூக்கம் என்பதே பெரிய விஷயமாக இருந்தது,' என்றவரிடம், ‘வெளியீட்டிற்கும் நீங்கள் போராடா வேண்டியிருந்ததாகக் கேள்விப்பட்டோம். அது உண்மையா?' என்றோம்.

 ‘மிகுந்த சிரமத்தைத்தான் எதிர்கொண்டோம். கடைசியில் தெரிந்தவர் ஒருவர் உதவி செய்ய, திட்டம் போட்ட மாதிரியே படம் வெளியாகிவிட்டது.

சிறிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் இல்லாத படங்கள் எதிர்கொள்ளும் சவாலை எறும்பும் எதிர்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.

எறும்பு என்னுடைய முதல் வெற்றி. இப்போதுதான் பெருமூச்சு விட தொடங்கியிருக்கிறேன். இயக்குநருக்கான தகுதியை எறும்பு கொடுத்திருந்தாலும், வெற்றிகரமான தயாரிப்பாளர் ஆவதற்கான முயற்சிகளைத் தான் முக்கியமானதாகப் பார்க்கிறேன்' என்று முடிக்கிறார் சுரேஷ்.