திரை நேர்காணல்

நாம் தேடியது நம்மைத் தேடும்போது நாம் தயாராக இருக்கவேண்டும்!

நேர்காணல் : ‘ஆண் தேவதை’ சமுத்திரகனி

மதிமலர்

“என் வாழ்கையில் உதவியவர்களில் முக்கியமாக இரண்டு பேரைத் தேடிக்கொண்டிக்கிறேன். கண்டே பிடிக்க முடியவில்லை..” என ஆரம்பிக்கிறார் சமுத்திரகனி. கிட்டத்தட்ட இப்போது வெளியாகும் எல்லாப்படங்களிலும் முக்கிய பாத்திரத்தில் வரும் அளவுக்கு பிஸியாக இருக்கும் நடிகர், இயக்குநர். இன்று பல இயக்குநர்கள் சமுத்திரக்கனிக்காகவே வைத்து திரைக்கதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த படத்தை அடைவதற்கு அவர் பட்டிருக்கும் சிரமங்களும் தலைக்குப்புற சறுக்கி விழுந்த சம்பவங்களும் நிறைய.

‘‘ என்னோட 15 வது வயதுல கைல 130 ரூபாயுடன் சென்னைக்கு வீட்டுல சொல்லாம ஓடிவந்துட்டேன். அப்ப எனக்கு என்ன தெரியும்? சினிமாவுல நடிகன் ஆகணும்கிற ஆசை மட்டும்தான் இருந்துச்சு. வடபழனி வந்து ஸ்டூடியோவெல்லாம் பார்த்து மிரண்டுபோனேன். இரவு தங்கறதுக்கு இடமில்லாம அண்ணாசாலையில் சாலையோரமாக படுத்திருந்தபோது, ஒரு கான்ஸ்டபிள் என்னை தட்டி எழுப்பினார்.  சைக்கிளில் பின்னாடி உட்காரவைச்சு  ஸ்டேஷனுக்கு கூட்டிப்போய்  இரவு அங்கேயே படுக்க வெச்சு,  சொந்த ஊருக்குப் போயிடுன்னு அறிவுரை சொன்னார். மறுநாள் காலையில் நான் கிளம்பி இயக்குநர் டி.ஆர், வீட்டு வாசலுக்கு வந்தேன். அங்கே இருந்த வாட்ச்மேனை நண்பராக்கிட்டேன். அவரு ரொம்ப அன்பான மனுசன். அவருடனே தங்க அனுமதிச்சார்.. அப்புறம் கைல காசு எதுவுமே இல்லாத நிலையில் ஊருக்குப் போயிடுவோம்னு திரும்பினேன். கைல இருந்த காசுக்கு விழுப்புரம் வரைக்கும்தான் போக முடிஞ்சது. அங்கே எஸ்.எல்.எம் ஹோட்டல்னு ஒரு இடம். அங்க இருந்த முதலாளி என் நிலைமையைக் கேட்டுட்டு ஊருக்குப் போறதுக்கு காசு கொடுத்தார். நானோ அந்த காசுக்கு உண்டான வேலையைச் செஞ்சிட்டு வாங்கிக்கிறேன் என்று சொன்னேன். அவர் வேண்டாம்னு சொன்னாலும் என் உறுதியைப் பார்த்து சம்மதித்தார். இந்த மூன்று மனிதர்களில் பின்னாளில் எஸ்.எல்.எம், ஹோட்டல்காரரின் மகனை என்னால் சந்திக்க முடிந்தது, அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கே போய் உட்கார்ந்து விசாரித்துப்பார்த்தேன். அந்த கான்ஸ்டபிளைக் கண்டுபிடிக்க முடியலை. ஏன்னா என்னை அவர் ஞாபகம் வெச்சிருக்க வாய்ப்பே இல்லை. என்னைப்போல் எத்தனையோ பேருக்கு அவர் செஞ்சிருக்காரு... என்னை மட்டும் ஞாபகம் வெச்சிருக்க முடியாதுதானே... அதே போல் அந்த வாட்ச்மேன். அவரையும் கண்டுபிடிக்க முடியலை.''

 ராஜபாளையம் அருகே செய்தூர் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சமுத்திரக்கனி. அவர் எட்டாவது படிக்கும் வரை ஒரு சினிமா கூடப் பார்த்தது இல்லை. ‘‘என் வீட்டில் சினிமாவுக்கு இடமே இல்லை. அப்பாவுக்கு சினிமா பிடிக்கவே பிடிக்காது. அதனால் அம்மாவுக்கும் பிடிக்காத விஷயமாகிவிட்டது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னை ஒரு நண்பன் இரவுக்காட்சிக்கு வீட்டுக்குத் தெரியாமல் அழைத்துபோனான். நான் பார்த்த படம் முதல் மரியாதை. அன்றிலிருந்து நான் வீட்டுக்குத் தெரியாமல் தொடர்ந்து படம் பார்த்தேன். என்னை ஏதோ ஒரு சக்தி அழுத்திப் பிடித்துக்கொண்டதுபோல் இருந்தது. நான் இப்படிப் படம் பார்ப்பது தெரிந்தபின்னர் எங்க அப்பா என்னை தலைகீழாகக் கட்டி அடித்துப் பார்த்தார். திட்டிப்பார்த்தார். எதையும் நான் கேட்கவில்லை. எங்களூருக்கும் பக்கத்து ஊரான தளவாய்புரத்துக்கும் நடுவில் சேத்தூர் காளீஸ்வரி தியேட்டர் இருக்கும். இரு ஊர்க்காரர்களும் வந்து பார்க்க வசதியாக வைத்திருந்தார்கள். பக்கத்தில் ஒரு பெரிய மொட்டைப்பாறை கிடக்கும். இரவு வீட்டில் எல்லாரும் தூங்கியபின் மாடியிலிருந்து பின்புறமாக இறங்கி ஒரு போர்வையுடன் அந்த தியேட்டர் பக்கத்தில் இருக்கும் மொட்டைப்பாறையில் படுத்து வசனங்களை மட்டும் கேட்டுக்கொண்டு படுத்திருந்த இரவுகள் ஏராளம். பின்னர் ஒருகட்டத்தில் அந்த தியேட்டரே கதி எனக் கிடந்ததால் அங்கே டிக்கெட் கிழித்தேன். முறுக்கு விற்றேன். ஒரு கட்டத்தில் அங்கே ஆபரேட்டர் வேலை கூடப் பார்த்தேன். பள்ளிக்கூடம் விட்டதும் அங்கே போய்விடுவேன். ஏப்ரல், மே விடுமுறைகளில் மதுரைக்கு வந்து படப்பெட்டி எடுத்துவந்து படம் ஓட்டும் வேலை வரை பார்ப்பேன். ஒரு கட்டத்தில் என் அப்பா இவனை என்ன செய்வது என்று தெரியாமல் சோர்ந்துபோய்விட்டார்''

பத்தாம் வகுப்பு முடிந்ததும் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்த கனி சில நாட்கள் கழித்து வீடு திரும்பியதும் அவரது அம்மா பிடித்து செம அடி அடித்திருக்கிறார். ‘‘ என் கூடவே வளர்ந்த ஒரு நாய். அதுக்கு பைரவர்னு பேர். அது நான் கிளம்பிப்போன நாளில் இருந்து எதுவுமே சாப்பிடாமல் இருந்து பத்து நாளில் செத்துப்போன செய்தி தெரிஞ்சது. எப்பவும் அப்பாதான் அடிப்பாரு. ஆனால் அன்று அவர் அடிக்கவே இல்லை. அம்மாதான் அடிக்கிறாங்க. அப்பா பாத்துட்டே இருந்தவர்... சரி விடு நமக்குப் புரியாத ஏதோ ஒண்ண அவன் தேடுறான்... உனக்கும் எனக்கும் அது புரியலை போல.. நீ கவலைப்படாத.. முதலில் படிப்பை முடி.. எல்லாத்துக்கும் நான் இருக்கேன் என்றார் அவர். எனக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதி ஒரு மாதத்தில் குலைந்துபோனது. அவர் இறந்துவிட்டார்.''

அதன் பின்னர் கனி, பி.எஸ்.சி கணிதம் படித்தார். படிக்கும்போதும் இடையில் சென்னை வந்துபோவதை நிறுத்தவில்லை. படிப்பு முடிந்ததும் மீண்டும் தன் கனவை நனவாக்கும் வெறியுடன் சென்னைக்கு வந்தார். நடிகன் ஆகவேண்டும் என்ற ஒற்றை வெறியுடன் அலைந்த அவரை திரையுலகம் திரும்பிக்கூட பார்க்கவில்லை; அவமானங்கள்... புறக்கணிப்புகள்...!

 ‘‘ இப்போதிருக்கும் இந்த இடத்தைப் பிடிக்க எனக்கு பதினாறு ஆண்டுகள் ஆயின. அதாவது ஒரு கனவுடன் நீங்கள் வருகிறீர்கள் அது கிடைக்கல. அப்ப என்ன பண்னனும்னா அதுக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு விஷயத்தைப் பிடித்துப் போய்க்கொண்டே இருக்கணும். வாய்ப்புக்காக காத்திருக்கணும். நம்மைத் தயார்படுத்திக்கொண்டு அதைச் சுற்றிச் சுற்றியே வரணும். இதைத்தான் என் நண்பர்களிடம் நான் சொல்லுவேன். நாம் தொடர்ந்து பயணிக்கவேண்டும். அப்படிச் சென்று கொண்டிருக்கும்போது நாம் எதைத்தேடி வந்தோமோ அது நம்மைத் தேடி வரும், அதற்கு ஒரு கால அவகாசம் தேவை. அந்த காலம் வரை நாம் அந்த இடத்தில் இருக்கவேண்டும். காத்திருக்கவேண்டும். அதுதான் நான் என் வாழ்க்கையில் பார்த்தது. 1994ல் முடிவு செய்தேன், இனி நடிக்கவே வேண்டாம் என. என்னுடைய புகைப்படங்கள் அனைத்தையும் கிழித்து எறிந்தேன். என் கையெழுத்து அழகாக இருந்ததால் சுந்தர்.கே. விஜயன் என்னை ஸ்கிரிப்ட் காப்பி எடுக்க அழைத்தார். நடிக்கணும்கிற ஆசைதானே இப்படி அலைய விட்டிருச்சு என்று நினைத்துக் கொண்டு, அவரிடம் சேர்ந்துகொண்டேன். பிறகு கே.பாலசந்தரிடம் அறிமுகம் கிடைத்தது. உனக்கு நடிகன் ஆகணும் ஆசைதானே.. அதுக்குத்தானே வந்தே.. அதையும் நானே ஆரம்பிச்சு வைக்கிறேன்.. நடி என்று பார்த்தாலே பரவசம் படத்துல ஒரு சீன் நடிக்க வைக்கிறார்.. அதன் பிறகு ஒரு நாள் நீ நடிகனா வருவே என்கிறார். நான் போங்க சார்னு சொல்லிட்டுப் போய்ட்டேன். அப்புறம் உன்னைச் சரணடைந்தேன், நெறைஞ்ச மனசு &ன்னு இரண்டு படம் பண்றேன், தோற்கிறேன். பிறகு பருத்திவீரன் படத்தில் பணிபுரிகிறேன். அப்ப சசிகுமாரைச் சந்திக்கிறேன். சசி ஒரு படம் எடுக்கும்போது நம்மைத் தேடுகிறார். நீ நடிக்கத்தானே வந்தே.. என் படத்தில் நடி என்கிறார். நான் அன்று விட்ட வாய்ப்பு, பதினாறு வருஷம் கழித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் சீரியல்கள் எடுத்தேன். படங்கள் பண்ணினேன்... என்னென்னமோ பண்ணினேன். ஆனால் அந்த மைதானத்திலேயே ஓடிக்கொண்டிருந்தேன்.. இந்த மைதானத்தை விட்டுவிட்டு வேறுமைதானத்தில் ஓடிக்கொண்டிருந்துவிட்டு நான் தேடியது வரவில்லை, கிடைக்கவில்லை என்று நிறைய பேர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை. நாம தேடி வந்த ஒரு விஷயம், ஒரு கட்டத்தில் நம்மைத்  தேடுது.. அந்த சமயம் நாம் அதுக்குப் பக்கத்தில் இருக்கணும். அதுதான்.''

விஜயகாந்த் நாயகனாக நடித்த நிறைஞ்ச மனசு படம் தோற்றபிறகு கனி, இரண்டு படங்கள் இயக்கிய தன் கெத்தை விட்டுக்கொடுத்து அமீரின் பருத்திவீரனில் உதவி இயக்குநராக வேலை பார்க்கிறார்.

‘‘நெறைஞ்ச மனசு படத்துக்கு கதை திரைக்கதை வசனம் நான் இல்லை. இயக்கம் மட்டும்தான் நான் பண்ணேன். அதை நியாயமாக நான் பண்ணியிருக்கக் கூடாது. அப்ப நாடோடிகள் கதையை வெச்சுகிட்டுத்தான் அலைஞ்சுகிட்டிருந்தேன், யாருமே கேட்கலை. அப்ப தயாரிப்பாளர்கிட்ட ஒரு ப்ராஜக்ட் பண்ண அட்வான்ஸ் வாங்கியிருந்தேன். அந்த தயாரிப்பாளர் கேப்டன்கிட்ட இந்த கதையைச் சொல்லி ஒப்புதல் வாங்கியாச்சு, படத்தை எடுக்க கொடுத்திடுங்கன்னு சொல்றார். மறுத்தால் ஒருவேளை கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கேட்ருவாங்களோ... நம்ம கைல இல்லையே.. அப்படிங்கற ஒரு சூழல். கதையாசிரியருக்கும் நமக்கும் ஒரு சின்ன முரண்பாடு இருந்தது. நான் சொன்ன சில மாற்றங்களை அவர் ஒத்துக்கல. தயாரிப்பாளரும் அவர் என்ன சொல்றாரோ அதை எடுத்துக் கொடுத்திடுங்களேன் என்று சொல்றார்.

வேற வழி இல்லை. இப்பதான் நான் இதப்பத்தியெல்லாம் சொல்றேன். நான் எப்பவுமே தோல்வியை முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்பவன் தான். நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். அந்தக் கதை என் கட்டுப்பாட்டில் இல்லை. அப்படி இருந்தும் மொத்தப் பழியையும் நான் தான் எடுத்துக்கிட்டேன். ஏனெனில் வெற்றியைப் பகிர்ந்துகொள்ள எல்லாரும் வருவார்கள். தோல்வியை நான் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அந்த படத்தில் உண்மையாக உழைத்தேன். இன்றும் கேப்டன்  ரொம்ப  நல்லா எடுத்திருந்தே என்று சொல்வாரு..அது எங்கேயோ ஓரிடத்தில் மிஸ் ஆகிவிட்டது. அது எங்கே என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்னர்தான் பருத்திவீரனுக்குப் போனேன். எங்கேயே மிஸ் ஆகுது. நாம் தான் தப்பா இருக்கிறோம். அதைச் சரி செய்யணும், வேலை பார்த்துக் கத்துக்குவோம்னுதான் போனேன்.  நாடோடிகள் படம் பார்த்தபின்னர் கே.பி. சார் சொன்னார்: அமீர் உன்னை நிறைய பாதிச்சிருக்கார்... அது படத்தில் தெரியுது.. நீ அவர்கிட்ட போய் நிறைய கத்துகிட்டு வந்திருக்கன்னு சொன்னார். எனக்குத் தெரியலைங்கறத முதலில் நான் ஒத்துக்கணும். நான் ரெண்டு படம் பண்ணியிருக்கேன்னு சொல்லிட்டு அலைவதில் உடன்பாடே இல்லை. நிறைய சகோதரர்கள் இப்படி இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு இதன் மூலமாகவும் நேரில் பார்க்கும்போதும் சொல்வது தற்காலத்தில் இருங்க.. என்பதுதான். இன்னிக்கு வேலை பார்க்கிற இயக்குநர்களுடன் ஓடுங்க. அன்னிக்கு எப்பவோ ஒரு படம் எடுத்திட்டு அதே நினைப்பாவே இருக்காதீங்க. புதுசு புதுசா சிங்கக்குட்டிகளா வந்து இறங்குறாங்க. இவர்களுடன் போட்டியிட இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கவேண்டும் அல்லவா?  போய் புது ஆளுங்களோட வேலை பாருங்க.. தெரியாத விஷயம் எவ்வளவோ இருக்கு.. அதைக் கத்துகிட்டு  நம்ம படத்தில பயன்படுத்துங்க, அப்படி வந்ததுதான் நாடோடிகள்..'' 

சமுத்திரக்கனி இயக்குநர் பாலச்சந்தரை வாழ்வில் தனக்கு மிக நெருக்கமானவராக நினைக்கிறார். அக்கா மகள் ஜெயலட்சுமியை திருமணம் செய்திருக்கிறார் கனி. திருமணம் ஊரில் நடந்தது. சென்னையில் நிகழ்வு ஏதும் இல்லை. திருமணம் ஆகி சென்னைக்கு வந்த சில நாட்களில் பாலச்சந்தர் ஒரு ஓட்டலுக்கு வருமாறு அழைக்கிறார். அங்கே மனைவியுடன் சென்ற பிறகுதான் கனிக்கு தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. ஏராளமான நண்பர்கள் அங்கே வருகை தந்திருக்கிறார்கள்.. எல்லாம் குருநாதர் பாலசந்தர் ஏற்பாடு. இரண்டு மணி நேரம் அங்கே நின்று நடத்தியும் கொடுத்தார் கே.பி. நெகிழ்ந்து போயிருக்கிறார் கனி.

‘‘ கே.பி சார் பத்தி சொல்லிகிட்டே இருக்கலாம். கடைசியா திடீர்னு ஒரு நாள் என்னை அழைத்தார்.  ஒரு பைலை கொடுத்து, நான் எழுதின ஸ்கிரிப்ட், படிச்சுப்பாரு. சரியா இருந்தால் உடனே ஆரம்பிச்சு படப்பிடிப்புக்குப் போய்விடலாம் என்றார். அதை வாங்கிக்கொண்டு என்னுடைய அலுவலகம் வருவதற்குள் அதைப் படித்து முடித்துவிட்டேன். அப்படியே திரும்பிப்போனேன். படிச்சுட்டேன்.. நல்லா இருக்கு. இன்னிக்கு இருக்கிற பிரச்சனையைப் பேசுற படம். உடனே ஆரம்பிச்சுடுவோம் என்று சொன்னேன். அப்ப ஒரு வார்த்தை சொன்னார் ஒருவேளை நான் இல்லைன்னா நீ முடிச்சுடு... என்ன சார் இப்படிச் சொல்றீங்கன்னு சொல்லிட்டு படம் எடுக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன். ஆனால் அதற்குள் அவர் நம்மை விட்டுப் போய்விட்டார். இன்றும் அவர் சொன்ன அந்த வார்த்தையும் அந்த ஸ்கிரிப்டும்தான் மனசில் ஓடிக்கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் அதைப் படமாகக் கொண்டுவருவேன். முதன் முதலில் அவர் நாடகத்துக்கு வெச்ச தலைப்பு ‘தி எண்ட்' கடைசியாக அவர் வைத்த தலைப்பு கடவுள் காண்போம் வா! அதுதான் அவர் எனக்குக் கொடுத்தது... அவர் கடவுளைப் பார்க்கறதுக்காக என்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்காருன்னு நினைக்கிறேன்.''

‘‘குடும்பம், கல்வி ஆகிய இருவிஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் படங்களில்தான் நான் கவனத்தைக் குவித்திருக்கிறேன். இதற்குக் காரணம் மாற்றத்தை அடிப்படையில் இருந்து கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற ஆசைதான். இந்த மாதிரி அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவராமல் எதுவும் சரியாகாது. பெற்றோர்களே ஒரு ஆபீஸ் போவது என்றால் அங்கே ஒரு பியூன் இருப்பாரு அவரிடம் ஐம்பது ரூபாய் கொடு.. உடனே வேலை நடக்கும் என்று சொல்கிறார்கள். லஞ்சம் கொடுப்பதை அவர்களே தொடங்கிவைக்கிறார்கள். இது ரொம்ப சாதாரணமாகிவிட்டது. இதெல்லாம் வாழப்போகிற தலைமுறைக்குச் சொல்லணும். பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றில் இருந்து தொடங்கிப் போகணும் என்று செயல்படுகிறேன் இந்த மாற்றம் நாளைக்கே வந்துவிடாது. என்னைப்போல் பலர் இயங்கவேண்டும். அது உருவாக Qmhzumh பதினைந்து இருபது ஆண்டுகள் ஆகும். இந்த விஷயங்கள் தொடர்பான படங்களை எடுப்பதே அபாயகரமானதாகக் கருதப்பட்டது. ‘அப்பா' படத்துக்கான கதையைச் சொன்னபோது யாரும் தயாரிக்க முன்வரவில்லை. சரி நாமே தயாரிக்கலாம் என்று முயன்றபோது இன்னொரு தயாரிப்பாளர் நானும் பாதி பங்கேற்கிறேன் என்று முன்வந்தார். எடுத்து போட்டு காட்டியபோதுகூட சக நண்பர்கள் இந்தப் படம் ஓடாது என்றுதான் சொன்னார்கள். ஆனால் யாருக்காக இந்த படத்தை எடுத்தோமோ அவர்கள் பார்த்துக் கொண்டாடினார்கள். இது மக்களுக்கான சினிமா அதை மக்கள்தான் பார்த்துக் கொண்டாடவேண்டும். எங்கே போனாலும் அப்பா அப்பா என்று அழைத்துக் கொண்டாடி, அப்பா 2 - ஐ எடுக்க வைத்ததும் அவங்கதான்.

தாமிரா இயக்கும் ஆண் தேவதை படத்துக்கு நான் வந்து சேர்ந்ததும் அது மிக முக்கியமான இந்த சமூகத்தின் குடும்பங்களைப் பற்றிச் சொல்லக் கூடிய படம் என்பதால்தான். பெற்றோர்கள் முதலில் மாறணும். என்னால முடியலை என் புள்ள செய்யணும்கிறத விடணும். உன்னாலேயே முடியலையே.. அப்புறம் எப்படி அவனைச் செய்யச் சொல்றீங்க.. இதுதான் என் கேள்வி. உன் ஆசையைப் போல் அவனுக்கும் ஓர் ஆசை இருக்கும் அல்லவா? அது என்னன்னு பார்த்து அதைச் சாதிக்க உதவி செய்யணும். எங்க அம்மா மருந்த குடிக்கப் போயிட்டாங்க. அதனால் பொறியியல் படிக்க காலேஜ்ல சேர்ந்தேன்னு சொன்ன பையனை எனக்குத் தெரியும். இதையெல்லாம் உடைக்கணும் என்றால் இங்கே முடிவெடுப்பவர்கள் மாறவேண்டும். அதைத் தான், அப்பா படத்தில் வலுவாகச் சொன்னேன். அதுபோல் ஆண் தேவதையும் அற்புதமான ஒரு கதை. தாமிரா என்னிடம் கதை சொன்ன உடனேயே எனக்குப் பிடித்துவிட்டது. பெற்றோர்கள் இருவருமே வேலைக்குப் போவார்கள். குழந்தையை பள்ளியிலும் மனைவியை பேருந்து நிலையத்திலும் விட்டுவிட்டு இவன் அலுவலகம் போவான். அங்கே போன் வரும். சார் உங்க குழந்தை அழுகுது.. வந்து கூட்டிட்டுப் போங்க... மாலையில் அழைக்கப்போனால் என்ன சார் நாலரைக்கு வர்றீங்க மூன்றரைக்கு வாங்க சார் என்பார்கள்.. இல்ல சார் எனக்கு ஆபீஸ் இருக்கு.. என்று இவன் பதில் சொன்னால்.. ‘எங்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா.. நாங்கள் சீக்கிரம் போகவேண்டாமா?' என்று அந்த பள்ளியில் கேட்பார்கள். வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் சமைக்க நேரம் இன்றி சாப்பாடு ஆர்டர் பண்ணி அதுவரை குழந்தை தூங்காமல் இருக்க அதனிடம்

சத்தமாகப் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருப்பான். அந்த சாப்பாடு வந்து அதை வாங்கிகிட்டு வர்ற இடைவெளியில் குழந்தை தூங்கிவிடும். இதெல்லாம் அன்றாடம் குடும்ப வாழ்க்கையில் நகரங்களில் பார்ப்பதுதான். எதற்காக இந்த வாழ்க்கை என்று கேள்வி எழும். இதில் யாராவது ஒருவர்  வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துப்போம் என்று முடிவெடுத்து கணவன் வீட்டில் இருப்பதும் தகப்பன் தாயாக மாறுவதும் அதில் ஏற்படும் சில முரண்களும் உதாசீனங்களுமாக இந்த கதை செல்கிறது. இந்தப் படம் நிச்சயமாக இந்த சமுகத்தில் ஒரு சின்ன சலசலப்பையாவது ஏற்படுத்தக்கூடியது.

தாமிராவை பல ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் சந்தித்ததே சுவாரசியமானது. நான் ரொம்ப பிரச்னையில் இருந்த நேரம் அது. அப்போ மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள் பண்ணிகிட்டிருந்தோம். அதில் நான்கு நான் பண்ணிட்டேன். ஐந்தாவது ப்ராஜக்ட்டுக்காக கதை தேடிகிட்டிருந்த டைம் அது. ஒரு நாள் கே.பி சார் அலுவலகம் போனேன். உடனே ப்ராஜக்ட் ஆரம்பிக்கணும்னு கைலாசம் சார் சொல்றார். உள்ளே சுபா வெங்கட் இருந்தாங்க. அவங்ககிட்ட கதை ஏதாவது இருக்கான்னு கேட்டேன். ஆமா தாமிரான்னு ஒருத்தர் வந்திருக்கார். இரண்டு கதை சொன்னார். இரண்டாவது கதை நல்லா இருக்கு. ஆனால் என்னமோ தெரியலை; ரெண்டு கதையும் கைலாசம் சாருக்குப் பிடிக்கலன்னாங்க. எங்க இருக்காரு தாமிரா என்று கேட்டேன். அந்த அறையில் இருக்காருன்னு காமிச்சாங்க. உள்ளே போனேன். ஒல்லியா ஒரு உருவம் உட்கார்ந்திருந்தது. அவர்கிட்ட நீங்க சொன்னதுல ரெண்டாவது கதை நல்லா இருக்குதாம். அதைப் பண்ணிடுவோம். நீங்க ரெடி ஆகிக்கிடுங்க என்று சொன்னேன். கைலாசம் சார்கிட்டபோய் தாமிராவின் ரெண்டாவது கதையைப் பண்றோம்னு சொன்னேன். அவர் இல்ல.. அதில் வந்து .. என்று சொல்லவந்தார். எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம் எனச்சொல்லி ஒப்புதல் வாங்கினேன். கே.பி சார் அந்தக் கதைக்கு ‘அடி என்னடி அசட்டுப் பெண்ணே!' என்று தலைப்பு தந்தார். அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து செயல்படத் தொடங்கிய முதல் ப்ராஜக்ட்!

அதுல என்ன வேடிக்கை என்றால் மறுநாள் என் பிறந்த நாள். அதனால் நாளையிலிருந்து படப்பிடிப்பைத் தொடங்குவோம் என முடிவு செய்து உட்கார்ந்தேன். அப்ப வரைக்கும் ஹீரோ, ஹீரோயின் யாருன்னு முடிவு பண்ணலை. போன் முன்னாடி உட்கார்ந்து இப்ப யாரு முதலில் போன் பண்றாங்களோ அவங்கதான் ஹீரோ அல்லது ஹீரோயின் என்று அறிவித்தேன். அப்போ நடிகர்கள் எல்லாம் அப்பப்ப போன் பண்ணி ஏதாவது வாய்ப்பு உண்டா என்று கேட்டுக்கொண்டிருப்பாங்க. முதலில் போன் பண்ணியது சாரகேஷ். பதினைந்து நாள் ஷூட்டிங் வந்துடுறா என்றேன்.. அடுத்ததா ஐந்து நிமிடம் கழித்து போனில் வாய்ப்புக்கேட்டு அழைத்தவர் நிஷா. அவரை நாயகியாக தெரிவு செய்து ஷூட்டிங் போயிட்டோம். அந்த ப்ராஜக்ட் ரொம்ப எமோஷனலா பிரமாதமாக வந்திருந்தது. அதைப் பார்த்ததும் கே.பி சாருக்கு ரொம்ப பிடிச்சது. அப்பதான் முதன் முதலாக எனக்கு வியப்பளிக்கும் விதமாக, ‘நான் பண்ண வைச்சிருந்த ஒரு பிராஜக்ட்டை உனக்குத் தர்றேன். இதுவரை எல்லா எமோஷன்ஸையும் நீ ஹேண்டில் பண்ணிட்ட. முதல் முதலாக நகைச்சுவை பண்ணு' என்று சொல்லி, அவர் கதை சொல்லி கோபு பாபு வசனம் எழுதியிருந்த ‘கோடி ரூபாய் கேள்வி' என்கிற ஸ்கிரிப்டை என் கையில் கொடுத்தார்! அதை நான் வெற்றிகரமாகச் செய்ததைப் பார்த்து ரசித்த பின்னர்தான் முதல் முதலாக ஒரு மெகா சீரியலை என் கையில் கொடுத்தார். அதுதான் அண்ணி! அதுக்கு திரைக்கதை பண்ணவர் தாமிரா! '' என்று பழைய நினைவுகளில் மூழ்குகிறார் சமுத்திரக்கனி.

‘‘நான் சென்னைக்கு வந்து சந்தித்த முதல் மனிதர் முதல் கடைசிவரை எல்லாரும் நல்லவர்கள். அவங்க ஓர் இறைசக்திபோல் வந்து நம்ம கையைப் பிடித்து வழிகாட்டிவிட்டு காற்றோடு காற்றாகக் கலந்துவிடுவார்கள்.. அதுபோன்ற மனிதர்கள்தான் எனக்கும் வழிகாட்ட நேர்ந்தார்கள்.. அவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்..'' நெகிழ்வுடன் முடிக்கிறார் கனி.

ஜூலை, 2018.