திரை நேர்காணல்

நான் வெளிநாட்டிலிருந்து வரவில்லை

அ.தமிழன்பன்

ஜிகர்தண்டா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து..

படவெளியீட்டுக்குப் பின் எப்படி உணர்கிறீர்கள்..?

    படத்துக்கு பிரமாதமான வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நிறையப்பேர் பேசுகிறார்கள். பாராட்டுத் தெரிவிக்கிறார்கள். இரண்டாண்டுகளுக்கும் மேலாகக் கடுமையாக உழைத்ததன் பலன் கிடைத்துவிட்டதாக நினைக்கிறேன்.

படத்தில் நாயகன் சித்தார்த்தைவிட வில்லன் சிம்ஹாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கிறதே..?

    உண்மைதான். இதன் காரணமாகவே வேறு சில நடிகர்கள் இந்தக்கதையில் நடிக்க மறுத்தார்கள். ஆனால் சித்தார்த் அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் இது நல்லகதை அப்படியே எடுக்கலாம் என்று ஒப்புக்கொண்டார். அதோடு படப்பிடிப்பிலும் மிக நன்றாக ஒத்துழைத்தார்.

சிம்ஹா வேடத்தில் வேறொருவரை நடிக்கவைக்க நினைத்தது பற்றி இப்போது என்ன சொல்வீர்கள்,,?

    அந்தப்படத்தில் புகழ்பெற்ற நடிகர்களை நடிக்க வைக்க நினைத்தது தவறான விசயம்தான். சிம்ஹாவை எதை நினைத்து நான் நடிக்க வைத்தேனோ அது அப்படியே நிறைவேறிருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இலட்சுமி மேனனுக்கு முக்கியத்துவம் இல்லையே.?

    ஒரு ரவுடி மற்றும் அவரைப் பற்றிப் படமெடுக்க நினைக்கும் ஓர் உதவி இயக்குநரைப் பற்றிய இந்தக்கதையிவ் நாயகிக்கான இடம் மிகவும் குறைவுதான். அதனால் திரைக்கதையை அதன்போக்கிலேயே விட்டுவிட்டோம். நாயகிக்காக கூடுதலாகக் காட்சிகள் வைக்கவேண்டாம் என்று நினைத்து அப்படியே செய்தோம்.

ஒரு படைப்பாளியாக படம் தாமதமானது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    படப்பிடிப்பின் போதே தயாரிப்பாளரின் பொருளாதாரச் சிக்கல் காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. படம் தயாரான பின்பு தணிக்கை சான்றிதழ் பெறுகின்ற சமயத்தில், யு சான்றிதழ் பெறவேண்டும் என்று யோசித்த காரணத்தால் கொஞ்சம் தாமதமானது. அதன்பின்னர் வெளியீடு தேதி அறிவித்த பின்னும் தள்ளிப்போனது. இப்படிப் பல தாமதங்கள். இந்த அனுபவங்கள் எனக்குப் புதிது என்பதால் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.

பீட்சா வெற்றிக்குப் பிறகு இந்தப்படம், திரைக்கதை அமைக்கும்போது அந்த அழுத்தம் உங்களுக்குள் இருந்ததா?

    இல்லை. நான் எனக்குள் அந்த பிரஷரை ஏற்றிக்கொள்ளவே இல்லை. அது மட்டுமின்றி இது நான் திரைப்படம் எடுக்க முதன்முதலாக மிகவும் ரசித்து எழுதிய கதை. முதல்படமாகச் செய்ய இதன் பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை. அதனால் முதலில் இதைப்படமாக எடுக்க முடியவில்லை என்பதால் இரண்டாவது படமாக எடுத்திருக்கிறேன்.

இது பிறமொழிப்படங்களின் தழுவல் என்று சொல்லப்படுவது பற்றி..?

    நான் வெளிநாட்டிலிருந்து வரவில்லை. படத்தின் டிரெய்லரைப் பார்த்து அந்தப்படம் இந்தப்படம் என்று சொன்னவர்களெல்லாம் படம் பார்த்த பிறகு தங்கள் கருத்துகளை மாற்றிக்கொண்டார்கள்.

குறும்படங்களை விநியோகிக்க ஒரு நிறுவனம் தொடங்கியிருக்கிறீர்களே..

    குறும்படங்களுக்கும் ஒரு வியாபாரம் இருக்கிறது என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்த அப்படிச் செய்ய முன்வந்தோம். ஆரம்ப வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன.

சொந்தமாகப் படம் தயாரிக்கலாம் என்று நினைத்ததுண்டா.?

 நிறையப்பணம் சம்பாதித்த பிறகு இது பற்றி யோசிப்பேன்.

செப்டெம்பர், 2014.