ஓரம் போ’, ‘வ-குவாட்டர் கட்டிங்’ படங்களுக்குப் பிறகு நீண்ட இடைவேளை. பேக் வித் பேங் என ‘விக்ரம் வேதா’ படத்துடன் களமிறங்கியுள்ளனர் ஜோடி இயக்குநர்களான புஷ்கர் -காயத்ரி.
“படம் செம டாக், பாஸிட்டிவ்வா இருக்கு, நாங்க ரெண்டு பேரும் கணவன் மனைவிங்கறது ரெண்டாவது. முதல்ல நாங்க நல்ல நண்பர்கள்” என ஆரம்பமே செம ஜாலியாக ஆரம்பித்தனர்.
நீங்க ரெண்டு பேரும் யாரு, இப்படி ஒரு தம்பதிகள் சினிமா உலகத்துக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்?
புஷ்கர்: பிறப்பு வளர்ப்பு எல்லாமே சென்னைதான். லயோலா கல்லூரியில விஸ்காம். ரெண்டு பேரும் ஒரே க்ளாஸ். கல்லூரி நாட்கள்ல நிறைய புராஜெக்ட்கள் சேர்ந்தே செய்தோம். அப்பவே நல்ல ஃப்ரெண்ட்ஸ். நாங்க ரெண்டு பேரும் நாடகத்தனமா காதலைக் கூட சொல்லிக்கலை. லவ், புரபோஸ் எதுவும் இல்லை. என் அம்மா கேட்டாங்க என்னடா அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியான்னு. நானும் ஆமாம்மான்னு சொன்னேன். அவ்ளோதான். பெரிய எதிர்ப்புகள் கூட கிடையாது.
காயத்ரி: எனக்கு இவரை வீட்ல அறிமுகப்படுத்த கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. அப்போ வேற நீளமா, அடர்த்தியா முடி வேற வெச்சுருப்பாரு. போதாததுக்குக் கடுக்கன் வேற. வீட்ல என்ன சொல்வாங்கன்னு அவ்ளோ பயம். ஆனால் சொன்ன உடனே ஓகே சொல்லிட்டாங்க. அப்புறம் திருவண்ணாமலை கோவில்ல கல்யாணம். ரொம்ப கிராண்டா, இந்த முறை அந்த முறைன்னு நாங்க குழப்பிக்கவே இல்லை. எங்க ரெண்டுபேருக்கும் நண்பர்கள் கூட ஒரே மாதிரியான நண்பர்கள்தான்.
எப்படி இந்த சினிமா ஆர்வம், அதிலும் கணவன் மனைவியா சேர்ந்து வீட்டு பட்ஜெட் போடுறதுக் குள்ளயே ஏகப்பட்ட பிரச்னைகள் வந்துடுமே? படம் எப்படி?
புஷ்கர்: ஆரம்பத்துல விளம்பரப் படங்கள் எடுத்துட்டு இருந்தோம். அதுல எல்லாமே தேய்ச்சு, க்ளீனாக்கி காட்டணும். நிறைய விளம்பரங்கள், நிறைய பொறுப்புகள்னு இருந்துச்சு. ஆனாலும் பெரிய ஆர்வம் இல்லை. அப்போதான் ஏன் படம் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. எங்க இருவருக்குமே ஒரே மாதிரியான சிந்தனைகள்தான். வேலைன்னு வந்துட்டா முதல்ல ஆண் பெண் பாகுபாடு கிடையாது எங்களுக்குள்ள. இது வேலை மட்டும் இல்லை, குடும்பத்துல முக்கிய முடிவுகள் எடுக்கும்போது கூட தோழர்களாதான் பேசிப்போம்.
காயத்ரி: சினிமா, விளம்பரப் படங்கள் இப்படி எங்களுக்குள்ள எல்லாமே ஒரே எண்ணங்கள். நான் ஒரு சீன் சொன்னா கேள்வியே இல்லாம அவங்க ஓகே சொல்லிடுவாங்க. அதே மாதிரி அவங்க ஒரு சீன் சொன்னாலும் எந்தவிதமான தயக்கமோ , கேள்வியோ இல்லாம நான் மாத்திடுவேன்!
திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் என்ன மாற்றம் உங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலயும் நடந்தது?
காயத்ரி: ஒரு மாற்றமும் கிடையாது. அப்பவும் நாங்க ஃப்ரெண்ட்ஸ்தான் இப்பவும் நாங்க ஃப்ரெண்ட்ஸ்தான். பெருசா சண்டை போட்டது கூட இல்லை. அப்படியே சின்னச் சண்டை வந்தா கூட ஒரு நாள் அளவுக்கெல்லாம் எங்க சண்டை
நீடிச்சதே இல்லை.
புஷ்கர்: அதிகபட்சம் விமானம் கிளம்பி இறங்குறதுக்குள்ள எங்க சண்டை முடிஞ்சிடும். நாங்க பேச ஆரம்பிச்சா கூட ரெண்டு நண்பர்கள் இரவு முழுக்க உட்கார்ந்து எப்படி பேசிப்பாங்களோ அப்படிதான் பேசிப்போம்.
கணவன் -மனைவி இருவருமா இணைந்து படம் இயக்கப் போறோம்னு சொன்ன உடனே என்ன விதமான கருத்துகள்லாம் வந்தது?
புஷ்கர்: அத ஏன் கேட்கறீங்க, ஏதும் காமெடி பண்றீங்களான்னு ஃப்ரெண்ட்ஸ்லாம் செம கிண்டல். ஆனால் ஒரு நல்ல விஷயம் சொல்லணும் எந்த தயாரிப்பாளர்களோ அல்லது நடிகர்களோ ஒரு இடத்துல கூட கணவன் - மனைவியா படமா அப்படிக் கூட கேட்கலை. எங்க போனாலும் பாஸிட்டிவ் வைப்ரேஷன். நாமதான் எல்லாத்தையும் தவறா நினைச்சிட்டு இருக்கோம். அவங்க இப்படி நினைப்பாங்களோ, அப்படி நினைப்பாங்களோன்னு. எங்க குழு உறுப்பினர்கள் கிட்டக்கூட அந்தக் கேள்விகளோ, தயக்கமோ இல்லை!
‘விக்ரம் வேதா’ எந்த பாயிண்ட்ல உருவான ஸ்பார்க்?
புஷ்கர்: சும்மா ஒரு நாள் இரவு ஏதேதோ பத்தி பேசிட்டு இருக்கும்போதுதான் இந்த விக்ரமாதித்தியன் - வேதாளம் கதை பத்திப் பேச ஆரம்பிச்சோம். அத்தனை வருஷங்களுக்கு முன்னாடியே இப்படி ஒரு கான்செப்ட் அதுல கதைகள், அதுக்கு சிக்கலான பதில்னு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.
காயத்ரி: இந்தக் கான்செப்ட்டை ஏன் படமா பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. நிறைய காம்போ கதைகள் யோசிச்சோம். திருடர்கள், அரசியல்வாதிகள், என்னென்னமோ தோணுச்சு. அப்புறம் இந்தக் கான்செப்ட்டுக்கு போலீஸ் - கேங்ஸ்டர்தான் சரின்னு தோணுச்சு. அப்படி உருவான படம்தான் விக்ரம் வேதா.
உங்களுடைய படங்கள் எல்லாமே ஒரு வித தர்மம்-அதர்மம், கருப்பு -வெள்ளை பாணியிலேயே இருக்கே? திரைக்கதைக்கு எதுவும் இன்ஸ்பிரேஷன் இருந்துச்சா?
புஷ்கர்: “ எங்க ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிச்ச கான்செப்ட் கருப்பு - வெள்ளை. அதுக்கு நடுவுல இருக்க ஒரு சாம்பல் நிறம். அந்த கான்செப்ட் உடையற இடம் இதெல்லாம் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். விக்ரம்வேதாவில் எந்தத் தழுவலும் இருக்கக் கூடாதுங்கறதுல ரொம்ப ஜாக்கிரதையா இருந்தோம்.
காயத்ரி: ஒரு திரைக்கதை எழுதிட்டா அப்படியே எடுத்துட்டு ஷூட் போகக்கூடாதுங்கறதுல தெளிவா இருந்தோம். நிறைய க்ரவுண்ட் வேலைகள், நிறைய மாற்றங்கள் செய்தோம். யாருமே கெட்டவங்க இல்லை, பார்க்குற பார்வைதான் கெட்டவன், நல்லவன்னு தீர்மானம் பண்ணுது. கெட்டது பண்றதா நினைக்கற நபருக்கு அவன் பாயிண்ட்ல இருந்து பார்த்தால் தானே உண்மை புரியும்.
படம் ரிலீஸ் தள்ளிப்போயிகிட்டே இருந்துச்சே?
அந்த ஒரு தடங்கல் மட்டும்தான் படத்துக்கு இருந்துச்சு. மத்தபடி எல்லாமே பாஸிட்டிவ். படம் துபாய்ல ரிலீஸ் ஆகி ட்விட்டர்ல இடைவேளை அப்போவே நிறைய நல்ல கருத்துகள். இப்போ அடுத்த வாரமும் எந்த பெரிய படங்களும் ரிலீஸ் இல்லை. அதனால விக்ரம் வேதா ஒடுறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கிடைச்சிருக்கு.
மாதவன் - விஜய்சேதுபதி?
ரெண்டு பேரும் நினைச்சுப் பார்க்க முடியாத நடிகர்கள். நாங்கள் சூதுகவ்வும், பீட்சா பார்த்துட்டே விஜய் சேதுபதி நடிப்பை அப்படி ரசிச்சோம். அதனால வேதா விஜய் சேதுபதிதான்னு முடிவே பண்ணிட்டோம். அப்புறம் சஷிகுமார்தான் விக்ரம் கேரக்டருக்கு மாதவன் கிட்ட பேச சொன்னார், பேசினோம். ஸ்க்ரிப்ட் படிச்ச உடனே ஓகே சொல்லிட்டாரு. மாதவன், விஜய் மட்டும் இல்லை வரலட்சுமி, கதிர் எல்லாருமே அவங்கவங்க கேரக்டரை அவ்வளவு கச்சிதமா அலட்டிக்காம செய்தாங்க. என்னைக் கேட்டா நடிகர்களை அவங்க இஷ்டத்துக்கு விட்டுடணும். இதுல எங்களுக்கு பெரிய நம்பிக்கை உண்டு!
அதென்ன நாயகன் - நாயகி முதல் சந்திப்பே விஸ்கியுடன்? எதிர்ப்புகள் வரலையா?
நாங்களும் அப்படியெல்லாம் நினைச்சோம். ஆனால் ஆடியன்ஸ் இன்னைக்கு நினைச்சுப் பார்க்க முடியாத பக்குவநிலையில இருக்காங்க. அவங்களுக்குத் தெரியும் எந்தப் படத்தை ஓட வைக்கணும்னு. மாதவன் சார்கூட படம் முடிச்சு உயிர் கொடுத்தாச்சு; இனி அந்த உயிரை மக்கள் பார்த்துப்பாங்கன்னு சொன்னாரு!
சரி கொஞ்சம் சினிமா விட்டுட்டு ரொமாண்டிக் வாழ்க்கை பத்திப் பேசுவோமே?
புஷ்கர்: ஹா ஹா.. ரொமான்ஸ்?! 2004ல கல்யாணம் ஆச்சு. நிச்சயம் காயத்ரி இல்லாம நான் இல்லை, நான் இல்லாம காயத்ரி இல்லை. அதீத புத்திசாலி, என்ன மாதிரியே சிந்திக்கிற சரியான சோல்மேட் நாங்க. ஆனால் இப்படியெல்லாம் பேசினது கூட இல்லை. இன்னைக்குதான் உங்களால நாங்க இந்த பெர்சனல் வாழ்க்கைப்பத்தி இருவருமா உட்கார்த்து பேசுறோம். சர்ப்ரைஸா இருக்கு.
காயத்ரி: புஷ்கர் ஒரு நல்ல ஃப்ரெண்ட். எந்த இடத்திலயும் நீ ஒரு பொண்ணுன்னு யோசிக்க விட்டதோ அல்லது கட்டுப்படுத்தினதோ இல்லை. எங்களுக்கு முதல்ல இந்த அறிவு சார்ந்த விஷயங்கள்ல ஆண் பெண் பாகுபாடே பிடிக்காது. உலகத்துல எந்த ஒரு விஷயமும் ஆண்-பெண் இருவரும் சேர்ந்தாதான் நன்மைல முடியுங்கறதுல நாங்க இருவருமே நம்பிக்கையுடையவங்க.
ஆகஸ்ட், 2017.