பாலாஜி தரணிதரன் கார்த்திக் ஆமரே
திரை நேர்காணல்

“நடுவுல கொஞ்ச காலம் போராட்டம்!”

சரோ லாமா

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படம் மூலமாக சில ஆண்டுகளுக்கு முன் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் பாலாஜி தரணிதரன். இடையில் ஆறு ஆண்டுகள் பெரிய இடைவெளி. தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் சீதக்காதி திரைப்படத்துடன் திரைக்கு வர ரெடியாக இருக்கும் பாலாஜி தரணிதரனுடன் சற்று ‘ஃப்ளாஷ்பேக்' போனோம்...

சென்னையில் பிறந்து வளர்ந்தவரான இவர் திரைப்படக் கல்லூரியில் எடிட்டிங் படித்தவர். பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்திலும் திரைப்படம் தொடர்பாகப் படித்துவிட்டு அல்போன்ஸ்ராய் ஒளிப்பதிவில் ஒரு குறும்படமும் எடுத்திருந்தார். பிறகு வர்ணம் என்ற படத்தில் வேலை செய்தபோதுதான் விஜய்சேதுபதியின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதன் பிறகு ‘ஏன் இப்படி மயக்கினாய்' என்ற படத்தில் வேலை செய்தார். ஆனால் அந்தப் படம் இன்றுவரை தியேட்டரில் ரிலீசாகவில்லை.

‘‘கல்லூரிப் படிப்பு முடிந்து ஏழு வருடங்கள் கடந்துவிட்டிருந்தது. பல திரைப்படங்களில் வேலை செய்தாயிற்று. ஆனால் எனக்கென்று ஒரு திரைக்கதையை நான் தயார் செய்து வைத்திருக்கவில்லை.  ஒன்றரைக்கோடியில் ஒரு சின்ன பட்ஜெட் படம் பண்ணலாம் என்று நண்பர்கள் யோசனை சொன்னார்கள். அப்போது ஃபிலிமில் ஒன்றரைக்கோடியில் படம் எடுப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம். டிஜிட்டலில் படம் எடுப்பது அப்போது பரவலாகவில்லை. வீட்டுக்கு வந்து அன்றிரவு என்னுடைய லேப்டாப்பில் எதேச்சையாக சினிமா பாரடைஸோ இயக்குநரின் A Pure Formality என்ற படத்தைப் பார்த்தேன். முழுப்படமும் என்னை ரொம்ப மயக்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். குறைவான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு கச்சிதமாக எடுக்கப்பட்ட திரைப்படம் அது. நான் எழுத வேண்டிய திரைக்கதையை, நான் எடுக்க வேண்டிய படத்தைப்பற்றி அந்தப் படம் எனக்கு சொல்லாமல் சொன்னது. ஆனால் இதற்கு கற்பனையான அல்லது ஃபேண்டஸியான கதை ஒத்துவராது. எனவே படத்தின் கதை எனது வாழ்க்கை அனுபவத்திலிருந்து உருவாகி வர வேண்டும் என நினைத்தேன்.

அடுத்த நாள் நண்பர் பிரேம்குமார் வீட்டில் ஒருவருக்கு எடிட்டிங் சொல்லிக் கொடுப்பதாக ஏற்பாடு. செலவுக்கு வேண்டிய பணத்தை இப்படித்தான் சின்னச் சின்ன வேலைகள் செய்து ஈட்டுவது என் பழக்கம். பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கதை பற்றிய எண்ணங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு முறை கோடை விடுமுறையில் ஊருக்குப்போனபோது என் தம்பி காணாமல் போய்விட்ட கதையை எடுக்கலாமா என்ற யோசனை வந்தது. வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு காணாமல் போய்விடுகிற ஒருவனின் மனநிலையும் அவனை தேடி அலைகிற ஒருவனின் மனநிலையும். ஆனால் அந்த கதைக்கரு எனக்கு திருப்தியாக இல்லை. அடுத்து வேறு ஒன்றையோசித்துக் கொண்டிருந்தபோது நம்ம பிரேம்குமார் வாழ்க்கையில்கூட ஒரு மறக்கமுடியாத சம்பவம் நடந்துள்ளதே என்று தோன்றியது.

இயக்குநர் பாலாஜி தரணிதரன்

கல்லூரி முடித்து ஐந்து வருடங்கள் கழித்து பிரேம்குமாருக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருந்தது. அவன் நான்கு வருடங்களாக காதலித்த பெண் தனாவுடன் திருமணம். கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போது, நான், பிரேம்குமார், பகவதிகுமார், சரஸ்காந்த் எல்லோரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். பிரேம்குமாருக்கு தலையில் அடிபட்டு ஒரு வருட ஞாபகங்கள் சுத்தமாகப் போய்விட்டது. இந்தச் சம்பவத்தை வைத்து உடனே ஒரு கதையை உருவாக்கிவிட்டேன்.

 பிரேம் குமார் வீட்டுக்குப்போனதும் கதையை பெயர்கள் மாற்றி அவனிடம் சொல்ல ஆரம்பித்தேன். கொஞ்சம் தடுமாறிச் சொன்னதைக் கவனித்த அவன் கண்டுபிடித்துவிட்டான்.  நீ நிஜப் பெயரை வைத்தே கதையைச் சொல்லுடா என்றான். நான் கோர்வையாக முழுக்கதையையும் அவனிடம் சொன்னேன். அவன் சிரித்துக்கொண்டே நல்லா இருக்குடா, இந்தக் கதையை நாம சினிமாவா பண்ணலாம் என்றான்.

படத்தின் முதல் பாதியில் வந்த காட்சிகள் எல்லாமே எங்கள் நான்கு பேருக்கும் நடந்ததுதான். இடைவேளையின் போது விஜய் சேதுபதி பேசிய ‘என்னாச்சி' என்கிற வசனம் தலையில் அடிபட்டவுடன் பிரேம்குமார் எங்களைப் பார்த்து பேசியதுதான். திருமணம் முடிந்ததும் காலை பதினோரு மணிக்கு பிரேம் குமாருக்கு நினைவுகள் திரும்ப வருவதை கிளைமாக்ஸாக வைத்தோம். நிஜத்தில் பிரேம் குமாருக்கு ஒரு வருட நினைவுகள் மறந்துபோய்விட்டன. ஆனால் அவர் தனாவை நான்கு வருடங்களாக காதலித்தார். படத்தில் இதை அப்படியே விஜய்சேதுபதி ஒரு வருடமாகக் காதலித்ததாக மாற்றினோம். படத்தின் திரைக்கதையை எழுத ஆரம்பித்தேன். முதல் பாதி சுலபமாக எழுத முடிந்தது. இரண்டாவது பாதியை கொஞ்சம் கற்பனையும் எதார்த்தமும் சேர்த்து எழுதினேன். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் முழு திரைக்கதையும் இப்படித்தான் எழுதி முடித்தேன்.

லியோ விஷன் ராஜ்குமார் சாரை சந்தித்து கதையைச் சொல்லி சம்மதம் வாங்கினேன். படத்தை ஒரு கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுத்து முடித்தோம். ஆனால் படத்தை வெளியிடுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. 

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஷூட்டிங் 2011 ஜூலையில் முடிந்தது. 2012 ஆகஸ்ட் மாதம் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது. தயாரிப்பு நிறுவனம் செப்டம்பரில் ரிலீஸ் செய்வதாக திட்டமிட்டிருந்தது. ஆனால் சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. வெளியீடு தள்ளிப் போனது. படத்தை திரையிட்டுக் காட்டியபோது எல்லோரும் அவ நம்பிக்கையாகப் பேசினார்கள். புதுமுக நடிகர்கள், ஹீரோயின் இரண்டாவது பாதியில்தான் அறிமுகம் ஆகிறாங்க, ரெண்டு பேருக்குமான காதல் அழுத்தமா சொல்லப்படல, பாடல்கள் இல்லை, படம் ரொம்ப நீளம்.. இப்படி..

வியாபாரம் பேசியவர்கள் பாடல் கட்டாயம் வேண்டும் என்றதால் முன்னோட்டத்திற்காக உருவாக்கி வைத்திருந்த பாடலைப் படத்தில் இணைத்தோம். நாட்கள் செல்லச் செல்ல நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். என்னைப் பொறுத்தவரை அவர்கள் பேசியது எதுவும் என் புத்திக்குள் ஏறவில்லை. இந்தப் படம் ‘கரணம் தப்பினால் மரணம்' என்பது எனக்கும் தெரியும். ஆனால் படத்தைப் பார்த்து தீர்மானிக்கப்போவது மக்கள்தான்.  அவர்கள் வாழ்க்கையோடு ஏதோ ஒரு வகையில் படம் தொடர்பு கொண்டால் படம் வெற்றியடைந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. படம் வெளிவராமல் போயிருந்தால் நான் சினிமாவில் இருந்திருக்க மாட்டேன்.

படத்தை எனக்குத் தெரியாமல் வேறு ஒரு எடிட்டரை வைத்து எடிட் செய்தார்கள். படத்தின் நீளத்தை என் அனுமதி இல்லாமல் குறைத்தார்கள். அப்படி அந்தப் படம் வெளிவந்திருக்குமானால் அது என் படமாக இருந்திருக்காது. என் நல்ல நேரம், ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் சார் படத்தை வாங்கி வெளியிட முன்வந்தார். ஆனால் அவரையும் சிலபேர் குழப்பினார்கள். அவரும் என்னிடம் தயங்கித் தயங்கி படத்தின் நீளத்தை எடிட் செய்து காண்பியுங்கள் என்று சொன்னார். நான் பத்து நிமிடங்கள் நீளத்தைக் குறைத்து அவருக்குக் காண்பித்தேன். அவருக்குப் புரிந்துவிட்டது. பாலாஜி, படத்தோட நீளம் இப்படியே இருக்கட்டும், குறைச்சா சரியா வராது என்று பெருந்தன்மையோடு என் தரப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நீளத்தைக் குறைத்துவிட்டோம் என்று சொல்லிவிடலாம் என்று சொன்னார். நான் அதற்கு ஒத்துக்கொண்டேன். படம் முழுமையாக வெளிவந்தது. பாடல் மட்டும்தான் சேர்க்கப்பட்டது. படம் பெரிய வெற்றி பெற்றது.  படத்தை எல்லா தென் இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்தார்கள். என்னிடம் சொன்ன திருத்தங்களோடுதான் மற்ற மொழிப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் தமிழில் பெற்ற வெற்றி வேறெங்கும் கிடைக்கவில்லை. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' - படம் நகைச்சுவைப் படம் அல்ல. அழுத்தமான கதையோட்டம் உள்ள கொஞ்சம் நகைச்சுவையாக நகரும் படம். அவ்வளவுதான்.

இப்படம் ரிலீசாவதற்கு முன்புதான் எனக்குத் திருமணம் நடந்தது. வீட்டில் பெரிய பொருளாதார சிக்கல் இல்லையென்றாலும் நான் அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கினேன். நான் சொன்ன கதை தயாரிப்பு நிறுவனத்துக்கு பிடிக்கவில்லை. அந்தக் கதை தான் ‘சீதக்காதி'.

அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு இன்னொரு கதை சொன்னேன். அது ‘ஒரு பக்க கதை'. கதை அவர்களுக்குப் பிடித்திருந்தது. கொஞ்சம் கமர்சியலாக பாட்டு வேண்டும் என்றார்கள். படம் தொடங்கி ஏகப்பட்ட தடங்கல்கள் ஏற்பட்டு ஒருவழியாகப் படப்பிடிப்பை முடித்தோம். படம் சென்சாருக்கு போனபோது Intercourse என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்றார்கள். அந்தப் படத்தில் துளி கூட கவர்ச்சி இல்லை. ஆபாசம் இல்லை. சென்சார் போர்டில் இருந்தவர்களுக்கு அந்த வார்த்தை மட்டும்தான் தொந்தரவாக இருந்தது. சென்சார் குழுவின் தலைமை மாறியபின் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் கிடைத்துவிட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல்களால் படம் இன்னும் வெளிவரவில்லை. வெளிவரும் என்ற நம்பிக்கை உண்டு.

‘சீதக்காதி' படம், ‘ஒரு பக்க கதை' படம் முடியும் முன்பே ஒப்புக்கொண்ட படம்.  ஆச்சரியமாக விஜய் சேதுபதி இந்தப் படத்துக்குள் வந்தார். தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நடித்த விஜய் சேதுபதி இல்லை இவர். இடையில் 24 படங்கள் நடித்து முடித்துவிட்டார். அதில் பெரும்பாலானவை வெற்றிப்படங்கள். சீதக்காதி அவருக்கு 25வது படம். விஜய் சேதுபதிமாதிரியான ஃபெர்பார்ம் பண்ணக்கூடிய நட்சத்திர நடிகர், படத்துக்கு பெரிய பலம்தான். படத்தின் வணிக எல்லை பெரிதாகிவிட்டது. எனக்குப் பொறுப்பும் பயமும் ஒருசேர கூடிவிட்டது. ஆனால் அவர் இயக்குநரின் நடிகர். எத்தனை முறை வேண்டுமானாலும் ரீடேக் போகலாம். காட்சியில் திருப்தி வரும் வரைக்கும் எடுங்கள் என்று சொல்லுவார். என்னால் நினைத்தமாதிரி படத்தை முடிந்தது. என் முதல் படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இரண்டாவது படம் இன்னும் வெளியாகவில்லை. சீதக்காதி படத்தின் வேலைகள் முடிந்துவிட்டன. இந்தப் படத்தின் வெற்றி ‘ஒரு பக்க கதை' படம் வெளியாக உதவி செய்யும் என்று நம்புகிறேன்,'' முடிக்கிறார் பாலாஜி தரணிதரன்.

ஜூலை, 2018.