மலையாள சினிமாவின் அற்புதமான நடிகராகப் பெயர் எடுத்திருக்கும் ஜோஜு ஜார்ஜை கேரளத்தில் மலா என்ற ஊரில் உள்ள அவரது அழகிய இல்லத்தில் சந்தித்தோம். அந்திமழைக்காக நடிகரும் எழுத்தாளருமான ஷாஜி அவருடன் உரையாடினார். நட்புடன் பேசும் ஜோஜு, முடிந்தவரை தமிழிலேயே கேள்விகளுக்குப் பதில் தந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் விடாமுயற்சிக்குப் பின் வெற்றியை ருசித்த அவருடைய கதை மிகச் சுவாரசியமானது.
1994-இல் என் பயணம் தொடங்கியது என சொல்லலாம். திலீப் நடித்த ஒரு படப்பிடிப்புத் தளத்தைப் பார்த்தேன். அன்னிக்கு என்னை உள்ளேயே விடலை. பிறகு 1996 - இல் ஒரு திரைப்படத்தில் முகம் காண்பித்தேன். 1999 இல் தான் முதல் வசனத்தைப் பேசினேன். 1994 - இல் இருந்து 2013 - வரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று சொல்லலாம். நிஜமாகச் சொல்லவேண்டுமெனில்
சினிமா தவிர வேறு எதையுமே நான் நினைக்க வில்லை. ஆரம்பகட்டப் பயணத்தில் எனக்கு ஒன்று புரிந்தது. நடிகர் ஆகணும் என எனக்கு ஆசை மட்டும்தான் இருக்கு. ஆனா அதுக்கான தகுதி இல்லைன்னு புரிந்தது. நடிப்பு வரலைன்னு நிறைய இயக்குநர்கள் என்னை செட்லேர்ந்து அனுப்பி விட்டிருக்காங்க. நான் நன்றாக செய்திருந்தால் அவர்கள் என்னை தேர்வு செய்திருப்பார்கள். நான் இன்னும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்.
2013 - இல் புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் படத்தில்தான் எனக்கு முதன்முதலாக பெரிய பாத்திரம் கிடைத்தது. அதற்கு முன் 20 ஆண்டுகள் திரைத்துறையில் மிகப்பெரிய சிரமங்களைக் கடந்து வந்திருக்கிறேன். அந்த படம் பெரிய ஹிட். எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் அதன் பிறகு ஒரு இடைவெளி வந்துவிட்டது. நல்ல பாத்திரங்கள் கிடைக்கல... அப்புறம் ராஜாதிராஜான்னு ஒரு படம் பண்ணினேன். நன்றாக ஓடியது. அதன் பிறகு திரும்பிப்பார்க்கக்கூட நேரம் இல்லை.
2018 - இல் ஜோசப் படம் வரும்போது நான் அது ஒரு சாதாரணமான பாத்திரம்னுதான் நினைத்தேன். கனவில் கூட இந்த படம் இவ்வளவு பெரிய புகழை ஈட்டித்தரும் என நினைத்திருக்கவில்லை. அந்த படத்தோட தயாரிப்பாளர் பாதியிலேயே விலகிவிட்டார். எனக்கு ஏதோ உள்ளுணர்வு
சொல்ல, என்கிட்ட இருந்த மொத்த சேமிப்பையும் போட்டு அந்த படத்தை நானே தயாரித்தேன். படம் வெளியாகும்போது எனக்கு வெற்றி கிடைக்கணும்கறத விட எப்படியாவது போட்ட காசு திரும்பக்கிடைக்கணும்னு நினைத்தேன். அந்த படம் வெளியான அன்று கடை அடைப்பு. அடுத்தநாள் மிகக்கனமான மழை.. எனக்கு எப்படி இருந்திருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். ஞாயிறு ஒருநாள் மட்டும்தான். அந்த ஒருநாளில் பார்த்த மக்கள் தான் அந்த படத்தை வெற்றிபெற வைத்தார்கள்.
ஆரம்பத்துல பல வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோது நமக்கு நடிப்பே வராது. இயக்குநர் ஆகிடலாம் நினைத்து ஒரு ஸ்கிரிப்ட் கூட எழுதிப் பார்த்திருக்கேன். எதாவது ஒருவிதத்தில் சினிமாவில்தான் இருக்கணும் என்று நினைத்தேன். அதனால் டச் அப் பாய், உதவி இயக்குநர்னு எல்லா வேலையும் செய்திருக்கிறேன். ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்தான் சினிமாவில் முதலில் தெரிஞ்ச வேலை. ஏனெனில் அவர்தான் நம்மை நடிக்க கூப்பிடுவார். பிறகு உதவி இயக்குநரா இருந்தபோதுதான் சினிமாவின் எல்லா வேலைகளும் தெரிய ஆரம்பித்தன.
நடிக்க ஆரம்பித்து படங்கள் ஹிட் ஆனபிறகு எல்லா பெரிய நட்சத்திரங்களும் என்னைப் பாராட்டியபோது என்னால் நம்பவே முடியலை. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாக அறிமுக விழாவில் மணிரத்னம் சார் பாராட்டினாங்க. எனக்கு கேரள மாநில விருது வழங்கப்பட்டபோது அந்த மேடையில் நான் அழுதிட்டேன். என்னுடைய பயணத்தில் நான் அடைந்த அனுபவங்களை நினைக்கிறபோது அழாமல் இருக்கமுடியாது.
நான் வாழ்க்கையில் பட்ட துன்பங்களும் அடிகளும்தான் என் பாத்திரங்கள் மூலமாகத் தெரிகிறது என்று வைத்துக் கொள்ளலாம்.
மதுரம், இரட்ட இரண்டு படங்களையும் நான் தான் தயாரித்தேன். இன்னொரு தயாரிப்பாளரை அந்த படங்களைத் தயாரிக்க ஒப்புக்கொள்ள வைப்பது சிரமம்தான். அதனால் நானே தயாரித்தேன்.
இரட்ட படம் தியேட்டர்ல வெளியானபோது சரியான வரவேற்பு இல்லை. அதிகமான முயற்சி எடுத்து இரட்டை வேடத்தில் நடித்த படம் அது. இதில் எனக்கு மிகுந்த மனக்கஷ்டம். பொருட்செலவு நஷ்டம் ஆனது கூட பிரச்னை இல்லை. மூன்று ஆண்டுகள் அந்த திரைக்கதையுடன் பயணம் செய்து அதை எடுத்தோம். இவ்வளவு அனுபவத்துக்குப் பிறகு நாம் எடுக்கிற முடிவுகள் தவறுகிறதே என்ற வலி. இந்தப் படத்துக்கு ஒரு மதிப்பு கிடைக்கும்னுதான் அதைப் பண்ணினேன். ஆனா அப்படி நடக்காததால் வலி. பிறகு அது நெட்ப்ளிக்ஸ்லில் வெளியானதும் 12 நாடுகளில் முதல் பத்து இடங்களில் அப்படம் ஒரு மாதத்துக்குத் தொடர்ந்து இடம் பெற்றிருந்தது. அதுதான் பெரிய மகிழ்ச்சியைத் தந்தது.
நடிகனா இருக்கணும்னா ஃபிட்டா இருக்கணும் என்று எல்லாரும் சொல்வார்கள். நிச்சயம் அது உண்மைதான். ஆனால் என்னால் அப்படி இருக்கமுடியாது. நான் சாப்பாட்டுப் பிரியன். இருந்தாலும் எனக்கு உடல்நலக்குறைவு ஏதும் இதுவரைக்கும் இல்லைதான். ஆனால் நான் நடிக்கிறது, நான் செய்யறது எல்லாம் எனக்குன்னு நானே வடிவமைத்துக் கொண்ட விஷயங்கள். இதை மற்றவங்கள் செய்துபார்த்தால் அவங்களுக்கு சரிவருமானு தோணல. என்னுடைய வாழ்க்கை, அனுபவங்கள், பயணம் எல்லாமே வித்தியாசமானது. மதுரம் படத்துல நான் காதல் காட்சிகளில் நடிப்பது சரியா வருமான்னு கேள்வி இருந்தது. நான் உடல் பருமனாக இருப்பதால் வந்த கேள்வி. ஆனால் அது ஒர்க் அவுட் ஆயிடுச்சு.
நடிப்பதற்கு மொழி என்றுமே ஒரு தடை இல்லை. தமிழில் நடிக்க வந்தபோது உச்சரிப்புதான் பிரச்னையாக இருந்தது. நல்லா பேச வரலை, ஆனாலும் முயற்சி செய்கிறேன். ஜகமே தந்திரம் படத்தில் நானேதான் டப்பிங் பேசினேன். நடிக்கும்போது ஒரு டயலாக் கூட சரியாக சொல்லவில்லை. ஆனால் அதை டப்பிங்ல சரி பண்ணினேன். தமிழ்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழோ மலையாளமோ கடைசியில் அது சினிமாதான். சென்னைக்கு ஒருவேளை அடுத்த ஆண்டு குடிவருவேன்னு நினைக்கிறேன்.
புத்தம்புதுக்காலை விடியாதோ என்ற ஓடிடி படத் தொகுப்பில் மௌனமே பார்வையா என்கிற அரைமணி நேர பகுதியில் கே.டி. பட இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் நடித்தேன். நல்ல ஒர்க் அது. அவங்களோட இன்னொரு படத்தில் நடிக்க இருக்கிறேன்.
நான் பொதுவாக பாத்திரங்கள், திரைக்கதை இயக்குநர் இது மூன்றில் மட்டும் கவனம் செலுத்துவேன். என்னால் நடிக்கமுடிந்தால் எவ்வளவு கொடூரமான பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். ஹீரோயிசம் பத்தி யோசிக்கிறது இல்லை!
ஜோஜு ஜார்ஜுடன் ஷாஜி உரையாடும் காணொளியை AndhimazhaiTV
யூட்யூப் சானலில் ChatwithChen நிகழ்ச்சியில் காணுங்கள்.