இயக்குநர் லெனின்பாரதி 
திரை நேர்காணல்

திரைப்படம் என் தந்தையின் கனவு

மா.கண்ணன்

சமீபத்தில் வெளியாகி ஆச்சரியமூட்டிய படம் மேற்கு தொடர்ச்சி மலை. மக்களின் ஆதரவும், இரட்டிப்பு லாபமும் கிடைத்த மகிழ்ச்சியில்  இருந்த அப்படத்தின் இயக்குநர் லெனின்பாரதியிடம் பேசினோம்.

இப்படம் எடுத்து மூன்று ஆண்டுகள் கடந்தும் திரைக்கு வருவதில் தாமதம் ஏன்? சொல்லுங்கள் எனத்தொடங்கினோம்.

  இந்தப் படத்தில் வழக்கமான தெரிந்த திரை நடிகர்கள் இல்லாததால்  திரைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் சிரமம் இருந்தது. திரைத்துறையைச் சார்ந்தவர்கள் இந்த நடிகர்தான் வேணும், இந்தமாதிரி பாடல்கள் வேண்டும் என்று ஒரு பழக்கம்  வைத்திருக்கிறார்கள். அதைவிட்டு வெளியே வருவதில்லை.   முதல் ஆறுமாதம் படத்தொகுப்புக்கான வேலைகள் போயிற்று. பிறகு ஒரு வருடம் முழுக்கவே திரைப்பட விழாக்களுக்குத்தான் கொண்டு செல்லவேண்டும் என்றே திட்டமிட்டோம். அதனால் முதல் ஒரு ஆண்டு திட்டமிட்ட தாமதம் செய்தோம்.. வெளிநாட்டில் பட விழாவுக்குக் கொண்டு சென்றதால் அங்கே சின்ன சின்ன அங்கீகாரம் கிடைத்தது.

  அதற்கு அப்புறம் ஒன்றரை வருடம் இந்த படத்தை நம்மூரில் சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டேன். சிலர் வந்தனர்; படத்தை போட்டுக்காட்டினேன், சொல்லுகிறேன் என்று சொன்னார்கள். இன்னும் சிலர் வெளியிட தயாராக இருக்கும்போது பெரியநடிகர்களின் படங்கள் வரிசை கட்டி நின்றன. திரையிடுவதற்கு தியேட்டர் கிடைக்க வில்லை. இதனால் பெரிய நடிகர்கள் இல்லாத இடைவெளியைப் பார்க்கவேண்டியிருக்கிறது. அப்படியாக இந்த படம் திரைக்கு வருவதற்கு தாமதம் ஆயிற்று.

இப்பொழுது தமிழ் திரைப்படச்சூழலில் நாம் படைப்பாளியாக கதை எழுதுவதுடனும் படத்தை எடுப்பதுடனும் மட்டும்  வேலை முடிந்துவிடாது. அதற்கு அப்புறம் சந்தைப்படுத்துவதற்கான வேலையும் செய்யவேண்டியுள்ளது. அதற்கு இயக்குநர்கள் பழக வேண்டும். எப்போதுமே ஒளி&ஒலி ஊடகம் ரொம்ப வலிமையானது. அது ஒரு சமூகத்தின் போக்கையே பலநேரங்களில் தீர்மானிக்கிறது.  நாம் இப்பவரைக்கும் காதல் படங்களும், தனிமனிதவழிபாடு படங்களும்தான் பார்த்து பழக்கப்பட்டிருக்கிறோம். அதன் தாக்கம்  சமூகத்தில் இருக்கிறது. அப்ப அந்த பார்வையை நாம் மாற்றவேண்டியுள்ளது. இது நம்முடைய வேலையில்லையா ? ஆதலால் நாம் சுமையாக எடுத்துக்கொள்ள கூடாது. நான் ஏற்கனவே 15 வருடமாக இந்த துறையில் இருப்பதால் சந்தைப்படுத்துதல் எனக்கு ஒரளவுக்கு தெரியும். சந்தைப்படுத்தலையும் சேர்ந்துதான் படித்தேன். அது இந்த காலத்திற்கு அவசியமாகயிருக்கிறது.

திரைக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் சில கல்லூரிகளிலும் இந்தப் படத்தைத் திரையிட்டோம். மாணவர்கள் இந்த படத்தில் ஒன்றி போனார்கள். எனக்கு அப்போதே இந்த படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருந்தது. அதேபோல் 2016 இல் தேசிய விருதுக்கும் இந்த படத்தை அனுப்பினோம். எனக்கு தேசிய விருது மேல் நம்பிக்கை கிடையாது. ஆனால் விருது கிடைத்தால்,  சுதந்திர இந்தியாவில் கடைகோடி மக்களுக்கும் என்னைக்கு வாழ்வதற்கு உரிமைக் கிடைக்கிறதோ அன்றைக்கு இந்த தேசிய விருதை வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி மறுத்து கலக அரசியல் பண்ணவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால்  லிங்கத்தை தோளில் தூக்கிய படத்திற்கு தேசிய விருது கொடுத்தார்கள். மூட்டையை முதுகில் சுமந்த எங்களுக்கு கிடைக்கவில்லை.

விஜய்சேதுபதி என்மேல் உள்ள நம்பிக்கையில்தான் படத்தை தயாரித்தார். அவருக்கு இந்த கதையே தெரியாது. இந்த படத்தில் நடிக்க அவருக்கு விருப்பம் இருந்தது. ஆனால் என்னுடைய கதை ஒரு பிம்பம் இல்லாத ஒருத்தரைத்தான் கேட்கிறது என்றேன். உடனே ஒப்புக்கொண்டு எனக்காகவே இந்த படம் தயாரிக்க முன்வந்தார்.  திரைப்பட விழாவிற்கு  அனுப்பவேண்டும் என்பதற்காகவே ஒரு வருடம் அனுமதித்தார். அதேபோல் படத்தின் படப்படிப்புக்கு போவதற்கு முன்பு 3 வருடம் மலைக்கிராமமான கோடம்பட்டியில் முன்தயாரிப்புக்கு அனுமதித்தார்கள். அவருக்கு இந்த படத்தின் வடிவத்தில்தான் பிரச்சனை இருந்தது. இந்த படம் மக்களிடம் போய் சேருமா என்ற குழப்பம் மட்டும்தான் இருந்தது.

நான் தேனிமாவட்டம் கோம்பை கிராமத்தில் பிறந்தேன்.. அப்பா ரெங்கசாமி மார்க்ஸியவாதி. இடுக்கி மாவட்டத்தில் வேலைப்பார்த்தார். கட்சி பணியிலும் ஈடுபட்டார். அவர் நிறைய பாடல்கள் எழுதி பாடுவார்.  ''அழியட்டும் சாதி'', ‘‘இதுதான் பாதை'' போன்ற முற்போக்கு நாடங்களை அரங்கேற்றியிருக்கிறார். அதற்கு அப்புறம் சினிமாவுக்காக சென்னைக்கு வந்தார். நான் அப்போது ஆறாவது வகுப்பு சென்னையில் படிக்க சேர்ந்தேன். நகர வாழ்க்கையின் அழுத்தம் காரணமாக திரைத்துறைக்குள் அவரால் வரமுடியவில்லை.

சிறிதுகாலம் தமுஎச விலும் வேலை செய்திருக்கிறார். நான் கல்லூரி முடிக்கும்போது அவரும் இறந்துவிட்டார். அவருடைய சினிமா ஆசையை நான் நிறைவேற்ற விரும்பினேன்.

எனக்கு சினிமா மீது ஆசையெல்லாம் கிடையாது. ஆனா ஒளி&ஒலி ஊடகத்தின் வீரியம் தெரியும். அந்த வீரியத்தையும் எனது அப்பாவின் ஆசையையும் நிறைவேற்ற நானும் சினிமாவுக்குள் வந்தேன்னு சொல்லலாம். நான் இத்துறைக்கு வந்து 18 வருடம் ஆகிறது. நான் நிறைய இயக்குநர்களிடம் உதவியாளராக வேலைச்செய்திருக்கிறேன். அவர்களிடம் இருந்து நான் தொழில்நுட்பத்தை மட்டுமே கற்றுக்கொண்டேன். அவர்களின் கதைகளை நான் ஒருபோதும் கணக்கில் எடுப்பது கிடையாது. சினிமா பேசும் பொருளை மக்களின் வாழ்க்கையில் இருந்து எடுக்கவிரும்பினேன். சினிமா பார்த்து சினிமா பண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இப்போதும் இருக்கிறேன்.

நான் இயக்குநர் எல்லாம் கிடையாது. ஒரு தொடர்பாளன்தான். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை எனக்கு மனத்தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது. அதை சொல்லுவதற்கு, உங்கள் பார்வைக்கு தெரியப்படுத்துவதற்கு இந்த திரை மீடியத்தைப் பயன்படுத்துகிறேன். இந்த படம் முழுக்கவே நான் ஒரு தொடர்பாளனாகதான் செயல்பட்டு இருப்பேன். அதனால்தான் யாருக்குமே குளோசப் காட்சி இருக்காது. ஒரு முதல் சாட்சியாக (eyewitness) இருந்து இந்த படத்தை இயக்கியிருப்பேன்.

இடதுசாரி பின்னணியில் இருந்து வந்ததால் சின்னவயசுல மாறுபட்ட நூல்களை படித்தியிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் எல்லாம் ராணிகாமிக்ஸ் மாதிரியான புத்தகங்கள் வைத்திருந்தால் நான் முன்னேற்ற பதிப்பக புத்தகங்கள் வைத்திருப்பேன் அது ஒரு கெத்தாக இருந்திருக்கலாம் என்று இப்போது யோசிக்கிறேன். ஆனால் கருத்தியல் ரீதியாக அப்போது எனக்கு எதுவும் தெரியாது. அந்த புத்தகம், அதன் அட்டை, அப்புறம் அதன் சித்தரங்கள் இப்படி என்னை அந்த நூல்கள் சிறுவயதில் கவர்ந்தது. அது அடிமனதில் பதிந்திருக்கலாம்.

‘‘ஆதலால் காதல் செய்வீர்'' என்ற படத்திற்கு கதை எழுதினேன். அதற்கு அப்புறம் ‘‘அப்பாவின் மோதிரம்'' என்ற கதையை எழுத ஆரம்பித்தேன்... அந்த அந்த கதையில் ஒரு வரி வரும். ‘‘இந்த வேலையை நான் செய்யலன்னா வேறுயாரு செய்வா'' என்ற வரி எனக்குள் மிகப்பெரிய மனத்தொந்தரவை ஏற்படுத்தி வேறுகதைக்குள் கூட்டிச்சென்றது. அந்த கதைதான் மேற்குத் தொடர்ச்சி மலை.

அக்டோபர், 2018.