திரை நேர்காணல்

தியேட்டர்தான் என் முதல்மனைவி!

Prakash

சென்னை திரையரங்க வட்டாரத் தில் கல்யாணம் என்ற பெயரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனந்த் தியேட்டரில் மேலாளராக இருந்து, குட் லக் போர் ப்ரேம்ஸ் எனப் பயணித்து, இப்போது நாக்  ஸ்டூடியோ நடத்திவரும் இவருடன் பேசியதில் இருந்து.

குடும்பச் சூழல் காரணமாக ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே

சாரதா ஸ்டூடியோவிற்கு வேலைக்கு வந்தேன். அறுபது ரூபாய் சம்பளத்திற்கு ஆபீஸ் பாயாக வேலைக்கு சேர்ந்தேன். சாரதா ஸ்டுடியோ, லிட்டில் ஆனந்த், ஆனந்த், குட்லக், Four frames, நாக் ஸ்டூடியோ என ஐம்பத்தியிரண்டு வருடங்கள் தியேட்டர் மற்றும் ஸ்டூடியோ வாழ்க்கையில் இருந்திருக்கிறேன்.

சாரதா ஸ்டுடியோவில் ஆறேழு மாதங்கள் வேலைப்பார்த்தப் பிறகு அந்த ஸ்டூடியோவின் முதலாளி ஏ.எல்.சீனிவாசன் (கண்ண

தாசனுடைய அண்ணன்) அலுவலகத்தில் டெலிபோன் ஆப்ரேட்டராக வேலைக்கு சேர்ந்தேன். ஐந்து வருடம் இரவும் பகலுமாக அங்கு வேலை பார்த்தேன். அப்போது, எம்.ஏ.எம் ராமசாமி சிபாரிசு கடிதம் கொடுத்து உமா சாரை சென்று சந்திக்க சொன்னார்.

சென்று சந்தித்தேன். வேலைக்கு சேர்ந்த பத்து மாதத்தில் லிட்டில் ஆனந்த் தியேட்டரை திறந்து என்னை மேனேஜர் ஆக்கினார் உமா சார். என்னுடைய எல்லாமுமாக அவர் இருந்தார்.

சமூகத்தின் மேல்மட்ட மனிதர்களிலிருந்து கீழ்மட்ட மனிதர்கள் வரை வந்து செல்லும் இடமாக ஆனந்த் தியேட்டர் இருந்தது. அதனால், எல்லோ தரப்பு மக்களையும் அணுகக்கூடிய பக்குவமும் எனக்கு ஏற்பட்டது. ஒருமுறை ரவுடி ஒருத்தன் டிக்கெட் கவுண்டரில் ஐந்நூறு ரூபாய் பணத்தின்மேல் கத்தியை வைத்து, தகாத வார்த்தையில் திட்டி, பிளாக் டிக்கெட் கேட்டான். கவுண்டரில் இருந்தவர் எனக்கு சிக்னல் கொடுத்தார். உள்ளே இருந்த நான் உடனடியாக வெளியே வந்து, அந்த ரவுடியை மடக்கிப் பிடித்தேன். அவன் கத்தியை எடுத்து மறைக்க முற்பட்ட போது, அது என் கையைக் கிழித்துவிட்டது. அந்த தழும்பு இன்று வரை இருக்கிறது. அன்றைக்கு அவன் குத்தி இருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும்?

அதேபோல், ஒரு நாள் பன்னிரண்டரை மணிக்கு இரவுக் காட்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தேன். அப்போது அருகில் வந்த வாட்ச்மேன் “அண்ணா நீங்கள் ஒருத்தனை மதியம் அடித்ததற்காக, அவன் ஆட்களைக் கூட்டிக் கொண்டுவந்து வெளியே நிற்கிறான். உங்களை கொலை செய்வதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்' என்றார். உடனே வண்டியை ஆப் செய்துவிட்டு, என்னுடைய அறைக்கு வந்தேன். அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஸ்ரீபால் அவர்களுக்கு போன் செய்து நடந்த விவரங்களைச் சொன்னேன். பாதுகாப்பிற்கு போலீசை அனுப்புவதாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்தார். உடனே இரண்டு போலீஸ் வண்டிகள் வந்து நின்றதும், அந்த ரவுடிகள் ஓடிவிட்டனர். வந்த போலீசார் என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று பத்திரமாக விட்டனர். காவலுக்கு இரண்டு போலீஸ்காரர்களும் இருந்தனர். எப்போது புதிய படம் வெளியானாலும் போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது வழக்கமாக இருக்கும்.

ஆனந்த் தியேட்டருக்கு காலையில் ஏழரை மணிக்கு சென்றேன் என்றால், இரவு பன்னிரண்டரை மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன். தியேட்டரில் ரவுண்ட்ஸ் வந்து கொண்டே இருப்பேன். தியேட்டருக்கு உள்ளே வரும் மக்களைப் பத்திரமாகப் பார்த்து, வெளியே அனுப்ப வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். தியேட்டரை நிர்வகிப்பதில் பெரிய சிக்கலாக இருப்பது கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்வதுதான். ஒரு முறை சுத்தம் செய்யாமல் விட்டால், தியேட்டரின் பெயரே கெட்டுவிட்டும். ‘மூத்திர நாத்தம் அடிக்கும் தியேட்டர்' என சொல்லிவிடுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்துவிடுவோம்.

அதேபோல், படம் பார்க்க வருபவர்கள் சீட்டை கிழித்துவிடுவார்கள். குறைத்தது ஒரு நாளைக்கு பத்து சீட்டையாவது கிழித்துவிடுவார்கள். தினந்தோறும் காலையில் அதை சரிசெய்வதே எங்களுக்கு வேலையாக இருக்கும். படங்கள் நல்லா இல்லை என்றாலும், பெரிய கதாநாயகர்களின் படம் வெளிவந்தாலும் நிச்சயம் சீட்டுகள் கிழிக்கப்படும். இது வாடிக்கையாகவே இருந்தது.

டி.ராஜேந்தரின் ‘உறவைக் காத்த கிளி' படம் அரசாங்கத்திற்கு எதிரானதாக இருப்பதாக கூறி படத்தை திரையிடக் கூடாது என்ற பிரச்னை வந்தது. பிரிண்ட் கிடைப்பதில் சிக்கல். படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இரவே, விஜயா லேபிற்கு சென்று பிரிண்டை வாங்கி வந்துவிட்டேன். இதை உமா சாரிடம் சொன்ன போது நெகிழ்ந்து போனார். இது பெரிய சாதனை அப்போதைக்கு.

படம் பார்த்து வெளி வருகிறவர்களின் முகத்தைப் பார்த்தே படம் ஹிட்டா இல்லை என்பதை சொல்லிவிடுவேன். படத்தில் ஒரு காட்சி அல்லது பாடலிலிருந்து மக்கள் வெளியேறிவிட்டால், அதை படக்குழுவினரிடம் சொல்லிவிடுவேன். உடனே படக்குழு அந்தக் காட்சியை நீக்கிவிடுவார்கள்.

தியேட்டரில் ஸ்நாக்ஸ் விற்பனை எப்போதுமே லாபகரமானதாகவே இருந்து வருகிறது. அப்படி ஸ்நாக்ஸ் விற்றவர் தான் மெலோடி தியேட்டர் முதலாளி. டிக்கெட் விலை, கார் பார்க்கிங் விலை, தின்பண்டங்களின் விலை ஏற்றியதற்கெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. குடும்பத்துடன் வந்து படம் பார்ப்பதால் மக்கள் செலவு செய்யத் தயாராகவே இருக்கின்றனர்.

எனக்கு தியேட்டர்தான் முதல் மனைவி. என்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி நேரம் தியேட்டரில் தான் கழிந்திருக்கிறது.

திருமணமான புதிதில் எனக்கு நுங்கம்பாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடு தரமறுத்துவிட்டார்கள். அதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது தியேட்டரில் வேலை பார்க்கிறவனுக்கு வாடகைக்குத் தரமாட்டோம் என்பதுதான். அதன் பிறகு நானே சுயமாக சம்பாதித்து அதே பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

மே, 2022