திரை நேர்காணல்

ஜோக்கர் : ஒரு கடைக்கோடி மனிதனின் கதை

ஆர்.ஆர். தயாநிதி

தேர்தல் சமயத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது குக்கூ இயக்குநர் ராஜுமுருகனின் அடுத்த படமான ‘ஜோக்கர்’ . புழங்காத கக்கூசுக்கு பின்னால் குத்த வைத்து அமர்ந்திருக்கும் காட்சியில்  தொடங்கி ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பாடல் வரையில் சினிமா ரசிகர்களை தாண்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது ‘ஜோக்கர்’. அத்திரைப்படத்தின் இயக்குநர் ராஜுமுருகனை சந்தித்து பேசினோம். 

யார் இங்கே ஜோக்கர் ?

ஜோக்கர் - இந்த கதையின் நாயகன் . இவன் வாழ்விடம் தருமபுரி மாவட்டத்திலுள்ள பப்பிரெட்டிபட்டி என்னும் கிராமம். இவன் மூலம் நாம், உலகமயமாக்கலுக்கு பிறகான சமகால சமூகத்தின் வறுமை, அறம், சமூக அரசியல் ஆகியவற்றை அரசியல் மற்றும் சமூக கிண்டல்களாக சொல்ல முயற்சித்திருக்கிறோம். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிற கடைக்கோடி மனிதன் தான் இந்த ‘ஜோக்கர்’. இந்த திரைப்படத்தை நீங்கள் பார்த்து முடிக்கும் போது ‘ஜோக்கர்’ என்பதற்கான விடை உங்களுக்கு வேறாக கூட இருக்கலாம்.

இந்த கதைக்கு தருமபுரியை கதைக் களமாக தேர்ந்தெடுக்க காரணம் என்ன ?

இந்த கதை தருமபுரியில் தான் நடக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நடக்க கூடிய, நடந்து கொண்டிருக்கிற கதைதான் இது. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு, கல்வியறிவு மறுக்கப்பட்டு, பொருளாதார ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பின்தங்கிய மக்களை தன்னகத்தே கொண்டிருக்கிற தருமபுரியை களமாக எடுத்து கொள்வதன் மூலம் இன்றைய சமூகத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தை பார்வையாளர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்று நம்பினேன். அதனால் தருமபுரியை தேர்ந்தெடுத்தேன்.

ஆக நீங்கள் ஜோக்கரிலும் தொட்டிருப்பது அதே எளிய மனிதர்களின் கதை தான்...

நிச்சயமாக இதுவும் எளிய மனிதர்களின் கதைதான். சொல்லப்போனால் முன்னதை காட்டிலும் இன்னும் அதிகமாகவே அவர்களை நோக்கி செல்கின்ற கதை. அடிப்படையில் பயணியான எனக்கு, நான் பயணிக்கிற  பிரதேசங்களில் அந்தந்த மண்ணிற்கான  இசையை கதைகளாகவும் பாடல்களாகவும் இந்த எளிய மனிதர்களின் மூலமாக தான் கேட்க முடிகிறது. நம்  கண்ணில் படுகிற அந்த மனிதர்களின் முகங்களை விஷுவலாக காண்பிக்க நம்மை நம் மனம் உந்தி தள்ளுகிறது. ஈரானிய, இலத்தீன் அமெரிக்க படங்களை போல அந்தந்த மண்ணிற்கான, மக்களுக்கான கதையை அந்தந்த கலரிலேயே காண்பிக்க விரும்பினேன். இப்படத்தில் அந்த எளிய மனிதர்களின் இசையையும் அவர்களின் வாழ்விடத்தையும் அதன் கலரிலேயே காட்சிப்படுத்த விரும்பினேன். அப்படியே  செய்துள்ளதாகவும்  நம்புகிறேன்.

அதற்காகதான் செழியன் சாரை ஒளிப்பதிவாளராக்க விரும்பினீர்களா ?

ஆமாம். செழியன் சாரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் உலகளாவிய அறிவு கொண்ட உள்ளூர் கலைஞன்.  இந்த மண்ணை, மக்களை, அவர்களின் வாழ்க்கையை அந்த கலரிலேயே விஷுவலாக காண்பிக்க கூடியவர் என்னும் நம்பிக்கைதான் அவரை தேடி நான் போக காரணம். படம் முழுவதும் ஸ்டெடி காமிராவை பயன்படுத்தியிருக்கிறார். பார்க்கின்ற உங்களால் படத்தின் டிராவலிங் மூடோடு பயணிக்க முடிகிறதென்றால் அதற்கு காரணம் செழியன் சார் தான்.

கதையின் நாயகனாக சோமசுந்தரத்தை தேர்ந்தெடுக்க காரணம்..

நான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் லீட் ரோல் செய்யக்கூடிய கதாப்பாத்திரத்தை பொறுத்தவரையில் அவர்கள் நடித்த முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் பார்த்து கொள்வேன். ‘குக்கூ’வுக்கு தினேஷை தேர்ந்தெடுக்கும் போது அவர் மீதிருந்த அந்த ‘அட்டகத்தி’ இமேஜ்க்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு பாத்திரத்தை தான் அவருக்கு தந்தேன். அதே போல இந்த ‘மன்னர் மன்னன் ’ என்றழைக்கப்படுகிற ஜோக்கர் பாத்திரத்திற்கு பெரிய நாயகர்கள் ஒத்துக் கொள்வது சிரமம் என்னும் சூழலில் இந்த கதையை எழுதி முடித்தவுடன் இதை நன்றாக நடிக்க கூடிய ஒருவர் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று மட்டும் தான் முடிவு செய்து வைத்திருந்தேன். படத்தில் வரும் இன்னொரு கேரக்டரான ’பொன்னூஞ்சல் ’ என்னும் பாத்திரத்தில் நடிக்க வைக்க தான் சோமுவை காண திருவண்ணாமலைக்கு சென்றேன். சோமு ஒரு சுவாரஸ்யமான மனிதர். சிலரால் மட்டுமே அக வாழ்க்கையை போலவே புற வாழ்க்கையையும் வாழ முடியும். சோமுவும் அப்படியான ஒரு மனிதர்தான். குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் சோமு ஒரு கவனிக்கத்தக்க கலைஞன். அப்படி  அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது இவர் தான் அந்த ஜோக்கர் என்று முடிவெடுத்தேன். இன்று படம் எடுத்து முடித்துவிட்டு அதை பார்க்கும் போது சோமுவை தவிரை வேறு யாரும் பொருத்தமானவராக இருக்க முடியும் என்று தோன்றவில்லை. ஃடிஞூஞு டிண் ஞஞுச்தtடிஞூதடூ படத்தின் ஹீரோவை போல இந்த படத்திற்கு இவர்தான் ஹீரோவாக இருக்க முடியும் என்று மெச்சும்படிக்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார் சோமு.

படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களை பற்றி சொல்லுங்களேன்..

சோமுவுக்கு கொடுப்பதாக இருந்த அந்த ‘பொன்னூஞ்சல்’ கதாப்பாத்திரத்தை மு.ராமசாமி அய்யா செய்திருக்கிறார். திரைத்துறையில் மு.ரா அய்யாவின் ஆளுமைக்கு உண்டான அங்கீகாரம் இன்னும் கிடைக்க பெறவில்லை என்பதே என் ஆதங்கம். அதேபோல ரம்யா என்னும் புதுமுக நடிகை மல்லிகா என்னும் பாத்திரத்தில் கதை நாயகியாக நடித்துள்ளார். அதே போல ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் நாயகி காயத்ரி இப்படத்தில் இசை என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெறுமனே வந்து போகும் நாயகிகளாக இல்லாமல் அழுத்தமான பாத்திரத்தில் இவர்கள் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். எழுத்தாளர்கள் பவா செல்லதுரை, ச.பாலமுருகன் ஆகியோரும் இப்படத்தில் நடிகர்களாக சிறப்பான பங்காற்றி இருக்கிறார்கள். மீதமுள்ள நடிகர்களை எல்லாம் தருமபுரி மண்ணிலிருந்தே தேர்ந்தெடுத்தேன். அவர்களுக்கு ரிகர்சல் கொடுத்து நடிக்க வைத்து அவர்களையே டப்பிங் பேச வைத்து அவர்களையே பாட வைத்து இப்படத்தின் ரியாலிட்டியை கூட்டியிருக்கிறேன்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ?

சந்தோஷ் நாராயணன் வீட்டில் தான் எனக்கு ஷான் அறிமுகமானார். சந்தோஷ்,பிரதீப்,ஷான் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். குக்கூ படத்திலேயே இரண்டு பாடல்களை பாடியுள்ளார் ஷான். எவ்வளவு பிரமாதமாக பாடியிருப்பாரோ அதை விட பிரமாதமான இசையமைப்பாளர். ஜோக்கர் ஆல்பத்தை கேட்டீர்களென்றால் ஒரு விஷயம் நன்றாக புரியும். இதில் நமது நாட்டுப்புற இசையை தேசிய இசையோடு கலந்திருக்கிறார் ஷான். தொழில் முறை கலைஞர்களாய் இல்லாதவர்களை பாடவைக்க மெனக்கெட்டிருக்கிறார் ஷான். அதற்கான பலன் அவருக்கு கை மேல் கிடைத்திருக்கிறது. ஆல்பத்தை கேட்டவர்கள் அனைவரும் இந்த பரீட்சார்த்த  முயற்சியை சிலாகிக்கிறார்கள்.

வணிக சினிமாவை எப்போது இயக்கப் போகிறீர்கள்?

சினிமாவில் வணிக சினிமா என்று தனியாக எதுவும் இல்லை. மக்கள் ஏற்று கொண்ட சினிமாக்கள் எல்லாமே வணிக சினிமா தான். அந்த வகையில் ஜோக்கரும் ஒரு வணிக சினிமா தான் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

மாஸ் ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் உத்தேசம் எதுவும் இல்லையா?

செய்யக்கூடாது என்று எதுவுமில்லை. அவர்களுக்கான கதை கிடைத்து அவர்களுக்கும் அந்த கதை பிடித்திருந்தால் நிச்சயமாக செய்வேன்.

தேர்தலுக்கு முன்னால் ஜோக்கர் ரிலீஸ் ஆகுமா?

இல்லை. படம் முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருவதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படம் ரிலீஸ்.

***

"கூத்துப்பட்டறையில் தொடங்கினேன்!''

மன்னர் மன்னன் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சோமசுந்தரத்திடம் அவரை பற்றியும், ‘ஜோக்கர்’ குறித்தும் கேட்டோம்.

“அப்பா ஊர் மதுரை, அம்மா ஊர் பேராவூரணி. படிச்சது, வளர்ந்தது எல்லாம் மதுரைல. பார்த்த வேலைகள் சலிப்பு தட்ட என்னவாக போகிறோம் என்னும் சிந்தனை எனக்கு வரும்போது வயது 26. வந்து சேர்ந்த இடம் சென்னையில் நடிகர் நாசர் வீடு. அவர் எனக்கு அடையாளம் காட்டியதுதான் கூத்துப்பட்டறை. அங்கு நடிப்பு பயிற்சி எடுத்து கொண்ட பிறகு தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆனேன். நாடகங்களை இயக்கவும் தொடங்கினேன்.அதில் சந்திரகிரி, பொன்னம்மாவின் குடும்ப கதை ஆகிய நாடகங்களில் என் நடிப்பை பார்த்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, 2006 ல் ஆரண்யகாண்டம் படத்தில் ஒரு கனமான பாத்திரத்தை தந்தார். அது எனக்கு தமிழ் சினிமாவில் பெரிய விசிட்டிங் கார்டாக அமைந்தது. அதன் பிறகு கடல்,பாண்டியநாடு போன்ற படத்தில் நடித்திருந்தாலும் ஜிகர்தண்டா எனக்கு மறுபடியும் பிரேக் ஏற்படுத்தி தந்தது. அதை தொடர்ந்து 49 ஓ, தூங்காவனம் போன்ற படங்களில் நடித்தேன். அதன் பிறகு பாம்புசட்டை, குற்றமே தண்டனை, யாக்கை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன். இந்த நிலையில் தான் ஜோக்கர் படத்தில் வரும்  ஒரு பாத்திரத்தில் என்னை நடிக்க வைக்க வந்த ராஜுமுருகன், எனது வாழ்விடம், வாழ்க்கை முறை,எனது குழந்தைகளுக்கு நான் ஏற்படுத்தி கொடுத்த மாற்றுவழி கல்வி ஆகியவற்றை பார்த்து மன்னர் மன்னன் என்னும் லீட் ரோலில் நடிக்க வைத்தார். அவர் நான் தான் இந்த படத்தின் கதாநாயகன் என்று சொன்னதும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததோ அதே அளவு பொறுப்-புணர்ச்சியும் வந்தது. அவர் கொடுத்த வேலையை சரியாக செய்திருப்பதாகவே நம்புகிறேன்.

நடிப்பினை தாண்டி திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கற்பனைத்திறனை வளர்க்கின்ற பயிற்சியினை தொடர்ச்சியாக அளித்து வருகிறேன். ஆனால் இதுபோன்ற பயிற்சியின் போது குழந்தைகளிடம் இருந்து நான் தான் கற்று கொண்டிருக்கிறேன். இதை தாண்டி இயற்கை விவசாயத்திலும் ஈடுபாடு உண்டு.

அப்புறம் ஜோக்கர் பற்றி நான் சொல்வதை விட படம் பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்!”

மே, 2016.